ஐபிஎல் கிரிக்கெட்: நிதானமாக ஆடி வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

தோனி Vs கோலி படத்தின் காப்புரிமை Getty Images

12ஆவது ஐபிஎல் தொடரின் முதல் போட்டி, சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேஸிங்கில் 17.4வது ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 71 ரன்கள் எடுத்து வென்றது.

டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். அதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணி, சிஎஸ்கேவின் சிறப்பான பந்துவீச்சினால் 17.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 70 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஆர்சிபி அணியின் கேப்டன் விராத் கோலி ஆறு ரன்களிலும், மற்ற முன்னணி வீரர்களான மொயீன் அலி, ஏ.பி. டிவில்லியர்ஸ், சிம்ரோன் உள்ளிட்டோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அதிகபட்சமாக பார்திவ் படேல் 29 ரன்கள் குவித்தார்.

சென்னை அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை, சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளையும், ஜடேஜா இரண்டு விக்கெட்டுகளையும், பிராவோ ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.

20 ஓவரில் 71 ரன்களை குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கவுள்ளது.

படத்தின் காப்புரிமை Twitter

முதல் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விராத் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகிறது. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது.

நடப்பு சாம்பியனாக சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி இருக்கிறது. மேலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், கிங்க்ஸ் XI பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய எட்டு அணிகள் போட்டியிடுகின்றன.

எப்போதும் ஐபிஎல் போட்டிகள் கோலாகல விழாவோடுதான் தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு அந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சமீபத்தில் நடந்த புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, ஐபிஎல் தொடக்க விழாவிற்கு ஒதுக்கப்பட்ட நிதி அனைத்தும் இந்தியாவின் பாதுகாப்பு படைகளுக்கு வழங்கப்படும் என்று பிசிசிஐ முடிவு அறிவித்துள்ளது.

ஐபிஎல் போட்டிகளுக்கான தொடக்க விழா நடத்துவதற்கான மதிப்பு 20 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 11 கோடி ரூபாய் இந்திய ராணுவத்திற்கும், 7 கோடி ரூபாய் சிஆர்பிஎஃப்-ற்கும், விமானப்படை மற்றும் கடற்படைக்கு தலா ஒரு கோடி ரூபாயும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் பலம் கூடியிருக்கிறதா?

இதுவரை நடைபெற்ற போட்டிகளில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியாக சிஎஸ்கே இருக்கிறது.

படத்தின் காப்புரிமை CSK/TWITTER

சில காலம் சிஎஸ்கே அணியில் இடம்பெறாமல் இருந்த மோகித் ஷர்மா தற்போது இந்த அணியில் இடம்பெற்று இருப்பது ஒரு பலம் என்று கூறலாம். அதிக விக்கெட்டுகளை எடுத்துள்ள மோகித் ஷர்மா, ஒரு சிறந்த அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளராக பார்க்கப்படுகிறார்.

வேறு எந்த மைதானத்தை காட்டிலும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அதிக ரன்களை குவித்துள்ளார் சுரேஷ் ரைனா. இதுவரையிலான சிஎஸ்கே வெற்றியில் சுரேஷ் ரைனாவின் பங்கு முக்கியமானதாக இருந்திருக்கிறது.

சென்னை சூப்பர் கிங்க்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையே இதுவரை நடைபெற்ற போட்டிகளில் அதிகமுறை சிஎஸ்கே அணியே வென்றுள்ளது.

ஆர்சிபி அணியை பொறுத்தவரை அதிக செஞ்சுரிகளை எடுத்துள்ள ஏ.பி. டிவில்லியர்ஸ் ஒரு முக்கிய பங்கு வகிப்பார் என்று கருதப்படுகிறது.

ஐபிஎல் போட்டிகளில், சுரேஷ் ரைனா மற்றும் விராத் கோலி இருவரும் 5,000 ரன்களை தொடும் நிலையில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ரைனாவின் தற்போதைய ரன் எண்ணிக்கை 4985ஆக இருக்கிறது. அதே சமயத்தில் கோலியின் ரன் எண்ணிக்கை 4948ஆக இருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :