ஐபிஎல் 2019: டெல்லியை வீழ்த்திய சென்னை – வெற்றியில் பெரும் பங்காற்றிய வாட்சன், ப்ராவோ

வாட்சன் படத்தின் காப்புரிமை PTI

டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இந்த ஐ.பி.எல் போட்டியில் தடுத்து நிறுத்த முடியவில்லை.

பிராவோவின் மூன்று விக்கெட்டுகள், வாட்சைன் 44 ரன்கள் சென்னை அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றுள்ளன.

டாஸில் வெற்றி ஆட்டத்தில் தோல்வி

இந்தப் போட்டியை ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வென்றுள்ளது.

டாஸ் வென்ற டெல்லி அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது.

டெல்லி அணியின் பிரித்வி ஷாவும், ஷிகர் தவானும் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். பிரித்வி ஷா 24 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அவரை தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயஸ் 18 ரன்களிலும், ரிஷப் பாண்ட் 25 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்தனர். தவான் 51 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

முடிவில் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்தது டெல்லி அணி.

படத்தின் காப்புரிமை Getty Images

148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணி 19.4 ஓவர்களில் அந்த ரன்களை எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னை அணியின் சார்பில் ஷேன் வாட்சன், அம்பத்தி ராயுடு ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர்.

ராயுடு 5 பந்துகளில் ஐந்து ரன்கள் எடுத்து வெளியேற, அடுத்ததாக சுரேஷ் ரெய்னா களமிறங்கினார்.

வாட்சன், ரெய்னா ஜோடியின் அதிரடி ஆட்டத்தினால் அணியின் ரன்ரேட் வேகமாக உயர்ந்தது. அப்போது அதிரடியில் கலக்கி கொண்டிருந்த ஷேன் வாட்சன் 44(26) ரன்களில் வெளியேறினார். அவரைத்தொடர்ந்து ரெய்னா 30(16) ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

சென்னை அணியின் சார்பில் அதிகபட்சமாக ஷேன் வாட்சன் 44(26) ரன்களும், டோனி 32 (35) ரன்களும் எடுத்தனர்.

மீட்பர் தோனி

ஒரு மீட்பராக தோனி இந்தப் போட்டியில் செயலாற்றினார். 35 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியில் பெரும் பங்காற்றினார். 32 ரன்களில் இரண்டு ஃபோரும், ஒரு சிக்ஸும் அடங்கும்.

கடைசி ஓவரில் இரண்டு ரன்கள் தேவைப்பட்ட சூழலில் ஜாதேவ் அவுட் ஆனார்.

கடைசியாக ப்ரேவோ நான்கு ரன்கள் அடித்து சென்னை அணியை வெற்றி அடைய செய்தார்.

நிகழ்த்தி காட்டிய வாட்சன்

இந்த மேட்சில் வாட்சனின் பங்கு நினைவுக்கூரப்படாமல் போனால், அது நியாயமற்ற செயலாக அமையும்.

வாட்சன் 26 பந்துகளில் 44 ரன்கள் அடித்தார். அதில் நான்கு ஃபோர்களும் மூன்று சிக்ஸுகளும் அடங்கும்.

படத்தின் காப்புரிமை Getty Images

அமித் மிஷ்ரா வீசிய பந்தில் விக்கெட் கீப்பர் பிடித்த கேட்சில் அவர் அவுட் ஆனார். ஆனால் அவர் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்,

ஆட்டம் முடிந்த பிறகு பிட்ச் குறித்து அவரிடம் கேட்கப்பட்டதற்கு, சென்னை ஆடுகளம் அளவுக்கு மோசமில்லை என நகைச்சுவையாக பதில் அளித்தார்.

பாகிஸ்தான் ப்ரீமியர் லீக்கில் விளையாடிய அனுபவம் தமக்கு உதவியதாக வாட்சன் ஒப்புகொண்டுள்ளார்.

ஐ.பி.எல்லில் அதிகம் ஈட்டும் ஊழியர்களில் வாட்சன் முன்னிலையில் இருக்கிறார்.

பழைய சர்ச்சைகள்

இதையெல்லாம் கடந்து வாட்சன் குறித்த சர்ச்சைகளுக்கும் குறைவில்லை. கடந்த காலத்தில் ஒரு போட்டியின்போது வேகபந்து வீச்சாளர் ருவாடாவுடன் வாதிட்டார்.

மைக்கேல் கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு வந்திருந்தபோது வாட்சன் செய்திகளில் இடம் பிடித்தார். அப்போது வாட்சன் போதிய அளவு தனது திறமையை வெளிப்படுத்தவில்லை என்று கருதிய கிளார்க், அவரை விளையாட விடாமல் வைத்திருந்தார்.

எனினும், டெல்லியில் நடைபெற்ற அதே தொடரின் நான்காவது மற்றும் கடைசி போட்டியில் மைக்கேல் கிளார்க் விளையாடவில்லை. ஷேன் வாட்சன் அப்போது ஆஸ்திரேலியாவுக்கு தலைமை தாங்கினார்.

அந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்றதுடன் நான்கு போட்டிகள் கொண்ட அந்தத் தொடரையும் 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதில் இப்போதைய சுவாரசியம் என்னவென்றால், தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாட்சன் தற்போது உயிர்நாடியாகவே திகழ்கிறார்.

இப்போதுதான் ஐ.பி.எல் தொடங்கியுள்ளது. ஷேன் வாட்சன் பற்றிய பல கதைகள் வரும் நாட்களில் அறியவரும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :