ஐபிஎல்: சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஐபிஎல்: சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி படத்தின் காப்புரிமை ARUN SANKAR

ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் சென்னை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களை எடுத்தது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடின.

இரவு 8 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி சென்னை அணியை பேட் செய்யுமாறு கேட்டுக்கொண்டது.

அதையடுத்து, அம்பதி ராயுடுவும், ஷேன் வாட்சனும் சென்னையின் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். தனது சொந்த மைதானத்தில் விளையாடுவதால் சென்னை அணி அதிரடி காண்பிக்கும் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், ராயுடு ஒரு ரன்னிலும், வாட்சன் 13 ரன்னிலும் அடுத்தடுத்து பெவிலியனுக்கு திரும்பி சொதப்பலான தொடக்கத்தை கொடுத்தனர்.

படத்தின் காப்புரிமை TWITTER

அடுத்து களமிறங்கிய கேதர் ஜாதவ், குல்கர்னியின் பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொண்டு அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை அடித்த நிலையில், தொடர்ந்து மூன்றாவது பந்தையும் விளாச முற்பட்டபோது அது ராஜஸ்தான் அணி வீரர் பட்லரின் கைகளில் தஞ்சம் புகுந்தது. அந்த சூழ்நிலையில், சென்னை அணி 4.5 ஓவர்களில் 27 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்தது தடுமாறியது.

இன்னொரு புறம், நிதானமான விளையாட்டை வெளிப்படுத்திய ரெய்னா தன் பங்கிற்கு நான்கு பவுண்டரிகள், ஒரு சிக்சர்களுடன் 36 ரன்களை எடுத்திருந்தபோது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜெய்தேவ் உனத்கட் பந்துவீச்சில் போல்டானார்.

படத்தின் காப்புரிமை TWITTER

அதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியும், பிராவோவும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 16 பந்துகளில் 27 ரன்கள் எடுத்திருத்தபோது பிராவோ அர்ச்சரின் பந்துவீச்சில் குல்கர்னியிடம் கேட்சானார்.

எனினும், கடைசிவரை அவுட்டாகாமல் அதிரடியாக விளையாடிய தோனி 46 பந்துகளில் தலா நான்கு சிக்சர்கள் மற்றும் பவுண்டரிகளுடன் 75 ரன்களை அடித்திருந்தார். ரவீந்திர ஜடேஜா எட்டு ரன்களுடன் களத்தில் இருந்தார்.

ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை அர்ச்சர் இரண்டு விக்கெட்டுகளையும், குல்கர்னி மற்றும் உனத்கட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :