ஐபிஎல் - தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தொடர்ந்து தோல்வியடைவது ஏன்? - சிறப்பு பார்வை

  • விவேக் ஆனந்த்
  • பிபிசி தமிழ்
ஐபிஎல்

பட மூலாதாரம், Getty Images

செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற 12 வது ஐபிஎல் சீசனின் பிளே ஆஃப் சுற்றின் முதல் குவாலிபயர் போட்டியில் சென்னை அணி மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோற்றது.

இந்த ஐபிஎல் சீஸனின் இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதிய மூன்று போட்டிகளிலும் சிஎஸ்கே தோல்வியைத் தழுவியிருக்கிறது.

ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை கோப்பையை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் . ஆனால் நூறு போட்டிகளில் வெற்றி எனும் சாதனையை படைத்த முதல் அணி மும்பை இந்தியன்ஸ்.

2019 ஐபிஎல் சீசனில் லீக் சுற்றில் சென்னை மும்பை மோதிய முதல் ஆட்டத்துக்கு முன் பத்திரிகையாளர்களிடம் பேசிய ஹர்பஜன் சிங், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இடையிலான போட்டி என்பது கிட்டத்தட்ட இந்தியா - பாகிஸ்தான் போட்டியை போன்றது என குறிப்பிட்டார்.

இவர் மும்பை அணிக்காக 10 சீசன்களில் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹர்பஜன் சிங் சொல்வது போல ஐபிஎல்லில் மிகவும் கவனிக்கப்படும் முக்கியமான போட்டிகளில் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணியிடையேயான மோதல். சமூக வலைதளங்களிலும் இவ்விரு அணிகளின் ரசிகர்களும் மோதிக் கொள்வது வழக்கம். இவ்விரு அணிகள் மோதினால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

ஆனால் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த முதல் குவாலிபயர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்னை பெரிதாக எந்தவித சிரமத்தையும் தரவில்லை. ரோஹித் ஷர்மாவின் விக்கெட்டை தீபக் சாஹர் விரைவில் கைப்பற்றியது மட்டுமே முதலில் விளையாடி 131 ரன்கள் மட்டுமே குவித்த சென்னை அணியின் ரசிகர்களை நிமிர்ந்து உட்கார வைத்தது.

பட மூலாதாரம், Mitesh Bhuvad

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் டு பிளசிஸ், நான்காவது ஓவரில் சுரேஷ் ரெய்னா, ஏழாவது ஓவரில் ஷேன் வாட்சன் பெரிதாக ரன்கள் சேர்க்காமல் ஆட்டமிழந்தனர்

ராயுடுவும் தோனியும் ஐந்தாவது விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டனர். ஆனால் மும்பை அணியின் பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு பெரிய அளவில் இவ்விருவரால் ரன்கள் சேர்க்க முடியவில்லை.

தோனி மட்டும் மலிங்காவின் 19-வது ஓவரில் இரு சிக்ஸர்கள் விளாசினார்.

20 ஓவர்கள் முடிவில் 131 ரன்கள் எடுத்திருந்தது தோனி அணி

ரோஹித் ஷர்மா, குயின்டன் டீ காக் இருவரும் விரைவில் ஆட்டமிழந்தாலும் சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் சிறப்பாக விளையாடினர்.

ஆட்டத்தின் 14-வது ஓவரில் இம்ரான் தாஹீர் அடுத்தடுத்து இரு விக்கெட்டுகள் கைப்பற்றினார். எனினும் இதனால் மும்பையின் வெற்றிப் பயணத்தில் பெரிய பாதிப்பில்லை.

ஆட்டத்தின் 19-வது ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணி வென்றது. சூர்ய குமார் யாதவ் 71 ரன்கள் எடுத்தார்.

பட மூலாதாரம், Mitesh Bhuvad

சரி சென்னை - மும்பை போட்டிகள் ஏன் பரபரப்பாக அமைந்து விடுகின்றனது?

2008-ம் ஆண்டு இந்தியாவில் ஐபிஎல் தொடர் துவங்கியது. அதற்கு முந்தைய ஆண்டான 2007-ல்தான் மகேந்திர சிங் தோனி இந்திய அளவில் மிகப்பெரிய பிரபலமானார். அதற்கு காரணம் 2007-ம் ஆண்டு நடந்த முதல் டி20 உலக கோப்பையில் தோனி தலைமையிலான இளம் இந்திய படை பாகிஸ்தானை இறுதிப்போட்டியில் தோற்கடித்து கோப்பையை கைப்பற்றியதே.

அதுவரை இந்திய அளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தவர்களில் முக்கியமானவர் சச்சின் டெண்டுல்கர். 2007 உலக கோப்பை வெற்றிக்கு பிறகு தோனிக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியிருந்தது.

ஐபிஎல் ஏலத்தில் சச்சின் டெண்டுல்கரை எடுத்தது மும்பை இந்தியன்ஸ். மகேந்திர சிங் தோனியை அதிக விலை கொடுத்து எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றார் சச்சின் டெண்டுல்கர், சென்னை அணிக்கு தோனி தலைமை தாங்கினார்.

மும்பை இந்தியன்ஸ் V சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி எனில் இரு பெரும் கிரிக்கெட் நட்சத்திர வீரர்கள் மோதும் போட்டி என்பதால் இயல்பாகவே இந்தியா முழுவதுமுள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது

2008 ஐபிஎல் தொடரின் ஆரம்ப சில போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் உடல்நிலை காரணமாக போட்டியில் பங்கேற்கவில்லை. இப்போது தோனியின் தலைமையின் கீழ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடும் ஹர்பஜன் சிங் தான் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அப்போது அணித்தலைவராக இருந்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணி இடையே நடந்த முதல் போட்டியில் ஹர்பஜன் அணியும் தோனியின் படையும் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் ரெய்னா மற்றும் ஹெய்டனின் அதிரடியில் சென்னை அணி 208 ரன்கள் குவித்தது. மும்பை இந்தியன்ஸ் அணி ஆறு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

பட மூலாதாரம், Mitesh Bhuvad

அதே ஆண்டு லீக் சுற்றில் மும்பை - சென்னை அணிகளின் மோதலின்போது டெண்டுல்கர் மும்பை அணிக்கு கேப்டன் பொறுப்பை ஏற்றிருந்தார்.

இம்முறை மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இப்போட்டியில் 48 பந்துகளில் 114 ரன்கள் குவித்து மும்பையின் வெற்றிக்கு வித்திட்டார் ஜெயசூர்யா.

2009, 2010 ஐபிஎல் சீசன் லீக் போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றன.

முதல் இரண்டு சீசன்களில் மும்பை இந்தியன்ஸ் அணி அரை இறுதிக்கு கூட தகுதிபெறவில்லை. ஆனால் சென்னை அணி 2008-ல் இரண்டாமிடம் பெற்றது. 2009-ல் பிளே ஆஃப் சுற்றுவரையும் வந்தது.

2010-ல் நவி மும்பையில் நடந்த இறுதி போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சச்சின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில்தான் சென்னை 22 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வென்று முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது.

அதன்பின்னர் ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் லீக் உள்பட சென்னை - மும்பை மோதிய நான்கு போட்டிகளில் மும்பை அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்றது.

சென்னை அணிக்கு கடும் சவால் தரக்கூடிய அணியாக மும்பை விளங்கியது.

கடும் போட்டி நிறைந்த 2013 சீசன்

2013-ம் ஆண்டு இரு அணிகளுக்கும் முக்கியமான ஆண்டாக விளங்கியது.

இந்த சீசனில் தான் சச்சின் டெண்டுல்கர் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார். காயம் காரணமாக லீக் சுற்றுக்கு பின்னர் சச்சின் விளையாடவில்லை.

இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி லீக் சுற்றில் சென்னையை இரண்டு போட்டிகளிலும் தோற்கடித்தது. ஆனால் பிளேஆஃப் சுற்றில் குவாலிஃபயர் போட்டியில் சென்னை மும்பையை தோற்கடித்தது.

மும்பை இந்தியன்ஸ் எலிமினேட்டர் போட்டியில் வென்று மீண்டும் இறுதிப்போட்டியில் சென்னை அணியை எதிர்கொண்டது.

கொல்கத்தாவில் நடந்த இறுதிப்போட்டியில் பொல்லார்டின் அதிரடியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் சென்னை அணியை வென்று முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது.

சென்னை சூப்பர் கிங்ஸின் ஆதிக்கம்

மும்பையிடம் கோப்பையை பறிகொடுத்த சென்னை அதன் பின்னர் தொடர்ச்சியாக நான்கு முறை மும்பை இந்தியன்ஸ் அணியை வென்றது. குறிப்பாக 2014 சீசனில் எலிமினேட்டர் சுற்றில் மும்பையை வெளியேற்றியது தோனி அணி. 2014-ல் மும்பை அணி சென்னையை ஒரு முறை கூட வெல்லவில்லை.

மும்பை இந்தியன்ஸ் அணியின் எழுச்சி

2015 சீசனில் சென்னையை நான்கு முறை எதிர் கொண்டது மும்பை. இம்முறை முதல் குவாலிஃபயர் போட்டியில் சென்னையை வீழ்த்தி மும்பை இறுதிப்போட்டிக்குச் சென்றது. சென்னை அணி இரண்டாவது குவாலிபயர் போட்டியில் வென்று மீண்டும் இறுதிப்போட்டியில் மும்பையை எதிர்கொண்டது.

இம்முறை இறுதிப்போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது ரோகித் படை.

மூன்று முறை இறுதிப்போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய நிலையில் இரண்டு முறை மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வென்றிருந்தது.

பட மூலாதாரம், Mitesh Bhuvad

ரோகித் சர்மா v தோனி

இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் இருக்கிறது. சென்னை அணி மேட்ச் பிக்சிங் புகாரில் சிக்கி இரண்டு ஆண்டுகள் ஐபிஎல்லில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டபோது தோனி புனே அணிக்காக விளையாடினார்.

2017 ஐபிஎல் சீசன் இறுதி போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணியும் மோதின. இப்போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வென்றது. தோனி இப்போட்டியில் 13 பந்துகளை சந்தித்து 10 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

குறைந்தபட்சம் 30 போட்டிகளுக்காவது ஐபிஎல் கிரிக்கெட்டில் தலைமை தாங்கிய வீரர்களை கணக்கில் எடுத்தால் தோனி வெற்றிகரமான கேப்டனாக இருக்கிறார். அவரது தலைமையிலான அணி 59.87% போட்டிகளில் வென்றுள்ளது.

172 போட்டிகளில் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள தோனி 103 போட்டிகளில் வென்றுள்ளார்.

அதற்கடுத்த இடத்தில் இருப்பவர் டெண்டுல்கர். அவரது வெற்றி வீதம் - 58.82.

ரோகித் சர்மா 58.82% வெற்றியுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை கோப்பையை கைப்பற்றிய அணிகள் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ். இவ்விரு அணியும் தலா மூன்று முறை கோப்பையை வென்றுள்ளன. ரோஹித் தலைமையிலான அணி மூன்று முறையும், தோனி தலைமையிலான அணி மூன்று முறையும் இறுதிப்போட்டியில் வெற்றியைச் சுவைத்துள்ளன.

இவ்விரு அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் ஜொலிப்பவர்கள் யார்?

சென்னை அணியை மும்பை வெற்றிகரமாக எதிர்கொள்வது பிராதான காரணம் மும்பை இந்தியன்ஸ் அணியின் பௌலிங். இவ்விரு அணிகள் மோதும் போட்டிகள் பெரும்பாலும் மிகப்பெரிய ஸ்கோர்கள் குவிக்கக்கூடிய போட்டியாக இருப்பதில்லை. அரிதாகவே 190 ரன்களுக்கு மேல் இவ்விரு அணிகள் மோதிய போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி ரன் குவிப்பில் ஈடுபட்டிருக்கிறது.

மும்பை அணியின் நட்சத்திர பௌலர் மலிங்கா. சென்னை அணிக்கு எதிராக ஐபிஎல்லில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர் மலிங்காதான்.

ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்டு ஆகிய இரு வீரர்களும் இதுவரை சென்னை அணிக்கு எதிராக தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளனர்.

பட மூலாதாரம், Mitesh Bhuvad

குறிப்பாக மலிங்கா, பொல்லார்டு இருவரும் மும்பை அணிக்கு மேட்ச் வின்னராக திகழ்ந்துள்ளனர்.

அதே சமயம் சென்னை அணியை பொருத்தவரை சுரேஷ் ரெய்னாவும், டுவைன் பிராவோவும் மும்பை அணிக்கு எதிராக சிறப்பாக பங்காற்றியுள்ள வரலாறு உண்டு. இவ்விரு அணிகள் மோதிய போட்டிகளில் இதுவரை சுரேஷ் ரெய்னா ஆறு முறை அரை சதம் கண்டுள்ளார்.

ரோஹித் ஷர்மாவும் சென்னைக்கு எதிராக ஆறு முறை அரை சதம் அடித்திருக்கிறார்.

மும்பை இந்தியன்ஸ் v சென்னை சூப்பர் கிங்ஸ்

மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஐபிஎல், சாம்பியன்ஸ் லீக் உள்பட இதுவரை 29 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 17 முறை மும்பை இந்தியன்ஸ் வென்றுள்ளது. சென்னைக்கு 12 போட்டிகளில் வெற்றி கிடைத்துள்ளது. ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில் சென்னை மண்ணில் இவ்விரு அணிகளும் எட்டு போட்டிகளில் மோதியுள்ளன. இதில் ஆறில் வென்றது மும்பை அணிதான்.

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை மும்பையை தவிர எந்தவொரு அணியும் நேருக்குநேர் சென்னையுடன் மோதிய போட்டிகளில் அதிக வெற்றி சதவீதத்தை கொண்டிருக்கவில்லை.

சென்னை அணி அதிக முறை வென்றது பெங்களூரு அணிக்கு எதிராகத்தான். அதிக முறை தோற்றது மும்பை அணிக்கு எதிராகத்தான்.

சென்னையும் மும்பையும் மோதினால் ஏன் அனல் பறக்கிறது, கிரிக்கெட் ரசிகர்கள் கூர்ந்து கவனிக்கிறார்கள் என்பதற்கு இந்த தரவு ஆதாரங்களே சாட்சி.

குறிப்பு - ஏற்கனவே ஏப்ரல் 2019-ல் பகிரப்பட்ட இந்த கட்டுரையில், மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையே ஐபிஎல் 2019 சீஸனின் குவாலிபயர் சுற்றில் முதல் போட்டி முடிந்த பிறகு சில பகுதிகள் சேர்த்திருக்கிறோம். சிலவற்றை நீக்கியிருக்கிறோம்

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :