பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தொடர் தோல்விக்கு காரணம் என்ன?

கோலி ரசல் படத்தின் காப்புரிமை BCCI

வெள்ளியன்று பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் நடைபெற்ற போட்டியில் கோலியின் அணிக்கு பேரதிர்ச்சியாக இருந்தார் கொல்கத்தாவின் ஆண்ட்ரே ரசல்.

கொல்கத்தா அணி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

கொல்கத்தா அணிக்கு இலக்காக 206 ரன்கள் வைக்கப்பட்டது. 13 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து இலக்கை அடைய பெரிதும் உதவினார் ஆண்ட்ரே ரசல்.

நேற்றைய போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. எனவே மைதானம் முழுக்க பெங்களூரு அணியின் ரசிகர்கள் என்பதால் ரசலின் பவுண்ட்ரிகளும், சிக்ஸர்களும் ரசிகர்களை அமைதியில் மூழ்கடித்தது. இருப்பினும் அந்த ஆட்டம் ரசிக்கும்படியான ஆட்டமாகவே இருந்தது.

ரசலின் இந்த ஆட்டத்தால் முதலில் பாதிக்கப்பட்டவர் டிம் சௌத்தி. அவர் வீசிய 19ஆவது ஓவரில்தான் ரசல் அந்த சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நான்கு சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியை விளாசினார் ரசல். டிம் சவுதி இந்த ஓவரில் மொத்தம் 29 ரன்களை வழங்கினார்.

அதற்கு முந்தைய ஓவரில் ரசல் அடித்த ரன்கள் 23. அதில் இரண்டு சிக்ஸர்களும் அடக்கம்.

அதற்கு முன்பு 16ஆவது ஓவரில் 13 ரன்கள் எடுக்கப்பட்டன. இந்த மூன்று ஓவர்கள்தான் கொல்கத்தாவின் வெற்றிக்கு வித்திட்டது.

ரசலை தவிர்த்து, கிறிஸ் லின் 43 ரன்களும், நித்திஷ் ரானா 37 ரன்களையும் எடுத்திருந்தனர்.

படத்தின் காப்புரிமை BCCI

அணியின் தோல்விக்கு பிறகு விராத் கோலி, கடைசி ஓவர்களில் பந்து வீச்சாளர்களுக்கு இருக்க வேண்டிய சாதுரியம் தங்கள் அணியிடம் இல்லாமல் போனது என்பதை ஒப்புக் கொண்டார்.

ஆனால் ரசல், ஒரே ஒரு ஓவரில் ஆட்டத்தின் மொத்த போக்கும் மாறக் கூடும் என தெரிவித்திருந்தார். சிறப்பான பேட்டிங்கிற்கு பந்தை நாம் பார்க்கும் தருணமும், அதை அடிக்க நாம் எடுத்துக் கொள்ளும் நேரமுமே முக்கியம் என்று தெரிவித்தார் ரசல்.

பெங்களூரு அணியின் தோல்விக்கு காரணம் என்ன?

பெங்களூர் அணியில் விராத் கோலி மற்றும் 360 டிகிரியில் விளையாடும் திறன் கொண்ட ஏபி டி வில்லியர்ஸ் போன்ற வீரர்கள் இருந்தும் அதனால் இன்று வரை வெற்றிப் பெற முடியவில்லை. அதற்கு ஐந்து காரணங்களை கூறலாம்.

1.மோசமான பேட்டிங்

படத்தின் காப்புரிமை Twitter/Royal challengers

20 ஒவர்களில் 205 ரன்கள் என்பது குறைவான இலக்கு என்று சொல்லமுடியாது. ஆனால், முதல் விக்கெட்டிற்கு விராத் கோலி மற்றும் பார்தீவ் பட்டேல் 64 ரன்கள் விளாசியபோது 230 ரன்களுக்கும் மேல் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், விராத் கோலி 49 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து ஒவுட் ஆனவுடன் அந்த நம்பிக்கை சரிந்தது. டிவில்லியர்ஸ் 32 பந்துகளில் 63 ரன்களை எடுத்தார். கோலி மற்றும் டி வில்லியர்ஸை தவிர்த்து பார்த்தீவ் பட்டேல் மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் 70 ரன்களை எடுத்தது பெங்களூரு அணி; ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் 113 ரன்களை எடுத்தது. எனவே, பெங்களூரு அணியின் பேட்டிங் சிறப்பாக இல்லை என்று நாம் கூறலாம்.

2.பலவீனமான ஃபீல்டிங்

இதுவரை பெங்களூரு அணியின் ஃபீல்டிங் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை என்றே கூறலாம்.

பல சுலபமான கேட்சுகள் கீழே விடப்பட்டன.

இதற்கு முன்பு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் ஆடிய ஆட்டத்தில் குறைந்தபட்சம் ஐந்து கேட்சுகளை கோட்டைவிட்டது பெங்களூரு அணி.

நேற்றைய ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் அடித்த பவுண்டரி ஒன்று விராத் கோலியின் கையில் உரசிக் கொண்டு சென்றது.

3.சோபிக்காத பந்துவீச்சு

பெங்களூரு அணியின் பந்துவீச்சு அப்படி ஒன்றும் சிறப்பானதாக இல்லை என்று சொல்லலாம்.

ரசல் அடித்து ஆட தொடங்கிவிட்டால் அதனை தடுத்து நிறுத்துவது கடினம் என்று சொல்லலாம். ஆனால், அது முடியவே முடியாத காரியம் என்று சொல்ல முடியாது.

டெல்லி அணியின் ககிசோ ரபாடாவைப் போல் யார்கர் பந்துவீசி, ரசலை அவுட்டாக்க கூடிய பந்து வீச்சாளர் யாரும் பெங்களூரு அணியில் இல்லை.

சென்னை அணியுடன் நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு அணியை தனது சுழற்பந்து வீச்சாளர்கள் மூலம் 70 ரன்களில் சுருட்டியது சென்னை அணி. ஆனால், பெங்களூரு அணியால் சென்னை அணிக்கு எதிராக மூன்று விக்கெட்டுகளை மட்டுமே எடுக்க முடிந்தது.

யூஜ்வேந்திர சாஹல் மட்டுமே சிறப்பாக பந்து வீசிக்கொண்டிருக்கிறார். ஆனால், ஒரு பந்து வீச்சாளர் மட்டுமே அணியை வெற்றிப் பெற வைத்துவிட முடியாது.

4.சரியான அணிதானா?

படத்தின் காப்புரிமை Getty Images

பெங்களூரு அணியின் கேப்டன் விராத் கோலி தனது அணியை தவறாக தேர்வு செய்துவிட்டார் என்றும் விவாதிக்கப்படுகிறது.

டெஸ்ட் போட்டிகளின் போதும் கூட விராத் கோலியின் தேர்வு கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

5.தலைமை குறித்து சந்தேகம்?

இன்றைய தேதி வரை பெங்களூரு அணி, ஐபிஎல் போட்டிகளில் கோப்பையை கைப்பற்றியது இல்லை. எனவே, விராத் கோலியின் தலைமைத்துவம் குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

சில சமயங்களில் ரசலை போன்றே விராத் கோலியின் மட்டையும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும். ஐபிஎல்லுக்கு பிறகு விராத் கோலி சிறந்த பேட்ஸ்மேன் என்ற பெயரையும் வாங்கியுள்ளார்.

ஆனால், இந்த முறை விராத் ஒரே ஒரு அரை சதம் மட்டுமே அடித்திருக்கிறார்.

விராத்தின் பேட்டிங் சோபிக்கவில்லை என்றால் அணியின் வெற்றியும் எட்டாக் கனியாகதான் இருக்கும்.

70 ரன்களை மட்டுமே குவித்த ஒரு அணியை யாரால் காப்பாற்ற முடியும்? இந்த வருடம் விராத் கோலிக்கு சிறப்பான ஒரு வருடம் இல்லை என்றே சொல்லலாம். முன்னதாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி-20 மற்றும் ஒருநாள் போட்டி தொடரில் தோல்வியடைந்தது இந்திய அணி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :