அல்ஜாரி ஜோசப் : 22 வயதில் அறிமுக ஐபிஎல் போட்டியில் அசத்தல் சாதனை - யார் இந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்?

அல்ஜாரி ஜோசப் படத்தின் காப்புரிமை Swapan Mahapatra

ஐபிஎல் போட்டியொன்றில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய அல்ஜாரி ஜோசப் வெறும் 12 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து எதிரணியின் ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறார்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட்டில் இவரது பெயர் அடிபட்டது. தற்போது மீண்டும் புகழ் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார் ஆன்டிகுவாவைச் சேர்ந்த அல்ஜாரி ஜோசப்.

இரண்டரை மாதங்களுக்கு முன்பு அதாவது கடந்த ஜனவரி மாதத்தில் இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. பார்படாஸில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை 381 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்.

இரண்டாவது போட்டி ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. முதலில் பேட் பிடித்த இங்கிலாந்து 187 ரன்களுக்கு இன்னிங்க்ஸை இழந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 272 ரன்களை எடுத்திருந்தது.

மூன்றாவது நாள் காலையில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு சங்கடமான ஒரு காரியம் நடந்தேறியது. முந்தைய நாள் இரவு அல்ஜாரி ஜோசப் தனது அன்புக்குரிய தாயை இழந்திருந்தார். இருப்பினும் அணியோடு அவர் இணைந்தார்.

கனத்த மனதுடன் பேட்டிங் செய்ய வந்த அல்ஜாரி, இருபது பந்துகளை சந்தித்து ஆறு ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 306 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து தடுமாறியது. அல்ஜாரி ஜோசப் தளராமல் பந்து வீசி இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்டின் விக்கெட்டை கைப்பற்றினார். அந்த இன்னிங்சில் ஏழு ஓவர்கள் வீசிய அல்ஜாரி 12 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இங்கிலாந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அன்றைய தினம் போட்டியை வென்றது. போட்டி முடிந்த பிறகு பேசிய அணித்தலைவர் ஜேசன் ஹோல்டர் இப்போட்டியை அல்ஜாரிக்கும் அவரது குடும்பத்துக்கும் சமர்ப்பிப்பதாக கூறினார்.

இரவு தாயை இழந்தும் நெஞ்சுரத்துடன் அல்ஜாரி விளையாடியது கிரிக்கெட் உலகை கலங்கவைத்தது. அவர் ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? அதற்கு பின்னால் முக்கியமான வரலாறு இருக்கிறது.

ஒரு காலத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி கிரிக்கெட் உலகில் அபார வலிமையுடன் கோலோச்சியது. அனல் பறக்கும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் பந்துகளை எதிர்கொள்ள எந்தவொரு அணியும் திணறும். 1983-ல் இங்கிலாந்து மண்ணில் வைத்து வெஸ்ட் இண்டீசின் ராஜ்யத்துக்கு கடிவாளம் போட்டது இந்தியாவின் கபில்தேவ் படை. அதன் பின்னர் மெல்ல மெல்ல சரிவைச் சந்தித்தது வெஸ்ட் இண்டீஸ்.

படத்தின் காப்புரிமை RANDY BROOKS/AFP/Getty Images

கடந்த 2012-ல் நியூசிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை வென்றிருந்தது. அதன் பின்னர் ஜிம்பாப்வே, வங்கதேசம் ஆகிய அணிகளை தவிர மற்ற எந்த அணியையும் டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியால் வெல்ல முடியவில்லை. இந்தச் சூழலில்தான் ஏழாண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வாய்த்தது.

அல்ஜாரி ஜோசப் தனது தாயை இழந்தபோதும் தனது சொந்தமண்ணில் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் கிரிக்கெட் உலகில் குறிப்பிடத்தக்க வெற்றி பெற ஒரு வாய்ப்பு இருந்ததை முன்னிட்டு மனம் தளராமல் விளையாடி அணியின் வெற்றிக்கு பங்களித்திருந்தார்.

நேற்றைய போட்டிக்கு வருவோம்.

லசித் மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து தற்காலிக விடுப்பு எடுத்து கொண்டு இலங்கையின் உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறார். இலங்கையின் உலக கோப்பை அணியில் இடம்பெற உள்நாட்டு போட்டிகளில் விளையாட வேண்டிய சூழல் இருந்ததால் மலிங்கா இலங்கைக்குச் செல்ல வேண்டியிருந்த சூழலில் திடீரென அல்ஜாரி ஜோசப்புக்கு வாய்ப்பு கிடைத்தது.

நேற்றைய போட்டியில் ஐதராபாத் அணிக்கு 137 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ். ஐதராபாத் அணி ஆரம்ப ஓவர்களில் இருந்தே அடித்தாட துவங்கியது. பேர்ஸ்டோ நான்காவது ஓவரில் ராகுல் சாஹர் பந்தில் வீழ்ந்தார்.

ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரை வீச வந்தார் அல்ஜாரி. முதல் பந்திலேயே வார்னரின் விக்கெட்டைச் சாய்த்தார். கனகச்சிதமாக ஸ்டம்புகளை தகர்த்தார். நட்சத்திர வீரர் வார்னரை தனது அறிமுக ஐபிஎல் போட்டியில் வீழ்த்திய அல்ஜாரி அதன் பின்னர் ஐந்து பேரின் விக்கெட்டுகளை தனது பந்துவீச்சுக்கு இரையாக்கினார்.

ஐதராபாத் அணியின் விஜய் சங்கர், தீபக் ஹூடா, ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல் என ஐந்து பேரும் அல்ஜாரி ஜோசப்பின் பௌலிங்கிற்கு விடை தெரியாமல் விக்கெட்டை பறிகொடுத்தார்கள்.

குறைந்த ரன்களை மட்டுமே எடுத்திருந்த மும்பை இந்தியன்ஸ் அணி நேற்றைய தினம் ஐதராபாத் அணியை வெற்றி பெறமுடிந்ததுக்கு பிரதான காரணம் அல்ஜாரி ஜோசப்பின் அசத்தலான பௌலிங் என்றால் மிகையில்லை.

ஐபிஎல் வரலாற்றில் இதற்கு முன்னர் இரு பந்துவீச்சாளர்கள் ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Swapan Mahapatra

கடந்த 2008-ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சொஹைல் தன்வீர் 14 ரன்கள் விட்டுக்கொடுத்து ஆறு விக்கெட்டுகள் கைப்பற்றினார். ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக விளையாடிய ஆடம் ஜாம்பா சன் ரைஸர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் 19 ரன்கள் விட்டுக்கொடுத்து ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆனால் அல்ஜாரி ஜோசப் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஆறு விக்கெட்டுகளை அள்ளினார். அந்த வகையில் ஐபிஎல் வரலாற்றிலேயே மிகச்சிறந்த பந்துவீச்சாக அல்ஜாரியின் நேற்றைய பந்துவீச்சு செயல்திறன் பார்க்கப்படுகிறது.

ஐபிஎல்லில் ஐதராபாத் அணியின் மிகக்குறைந்த ஸ்கோர் நேற்றைய தினம் எடுத்த 96 ரன்கள் தான்.

ஐபிஎல்லில் இளம் வயதில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் ஜெயதேவ் உனத்கட் இருக்கிறார். அவர் 21 வயதில் இந்த சாதனையை செய்தார். இரண்டாவது இடத்தில் அல்ஜாரி ஜோசப் இருக்கிறார்.

அறிமுக ஐபிஎல் போட்டியில் மிகச்சிறப்பாக பந்து வீசியவர்கள் பட்டியலிலும் அல்ஜாரி ஜோசப் முதலிடம் பிடித்துள்ளார். முன்னதாக குஜராத் லயன்ஸ் அணிக்காக கடந்த 2017-ம் ஆண்டு ஆன்ட்ரூ டை 17 ரன்கள் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகள் எடுத்ததே சாதனையாக இருந்தது.

வலது கை பந்துவீச்சாளரான அல்ஜாரி ஜோசப் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்ததே இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியொன்றில்தான்.

கடந்த 2016-ம் ஆண்டு இந்தியா வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. டெஸ்ட் தொடரில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 19 வயது நிரம்பியிருந்த அல்ஜாரி ஜோசப் அறிமுகமானார்.

படத்தின் காப்புரிமை Swapan Mahapatra

தான் வீசிய மூன்றாவது ஓவரில் விராட் கோலியின் விக்கெட்டை கைப்பற்றினார். சர்வதேச கிரிக்கெட்டில் அல்ஜாரியின் பந்துவீச்சுக்கு முதலில் இரையான நபர் விராட் கோலிதான். அப்போட்டியில் ரோஹித் ஷர்மாவின் விக்கெட்டையும் கைப்பற்றினார். அந்த இன்னிங்சில் 24 ஓவர்கள் பந்துவீசி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார் அல்ஜாரி.

விராட் கோலி ஐபிஎல்லில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு தலைமை தாங்கி வருகிறார். ரோஹித் ஷர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தலைமை தாங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

140 கி.மீ வேகத்தில் பந்து வீசு திறன் படைத்த அல்ஜாரி பௌன்சர்கள், யார்க்கர்கள் வீசுவதில் வல்லவர்.

கடந்த 2017-ம் ஆண்டு இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது வெஸ்ட் இண்டீஸ். அப்போது நான்காவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 356 ரன்கள் எடுத்து. லெவிஸ் 130 பந்துகளில் 176 ரன்கள் குவித்தார். ஆனால் இங்கிலாந்து அணி 35-வது ஓவர் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்து டக்வொர்த் லூயிஸ் முறையில் வென்றது.

அப்போட்டியில் ஐந்து விக்கெட்டுகளையும் கைப்பற்றியவர் அல்ஜாரி ஜோசப்தான். ஒருநாள் போட்டியில் அதுதான் அவரது சிறந்த பந்துவீச்சு.

இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அல்ஜாரி 25 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 16 ஒருநாள் போட்டிகளில் 24 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

அல்ஜாரியின் நேற்றைய ஐபிஎல் சாதனைக்கு பலதரப்பில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

வெஸ்ட் இண்டீஸ் வீரர் கார்லாஸ் பிராத்வெயிட் ''இதுதான் ஐபிஎல்லில் ஒருவரின் மிகச்சிறந்த அறிமுக போட்டி''

''மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் பையன் நம்மை பெருமையடையச் செய்துவிட்டார்'' என பிரபல நட்சத்திர வீரர் பிரையன் லாரா பாராட்டியுள்ளார்.

''நிச்சயமாக அல்ஜாரி ஜோசப் ஒரு அற்புதம். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் உலகில் கோலோச்ச வந்துகொண்டிருக்கிறார்கள்'' என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் மைக்கேல் வான் பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.

''அல்ஜாரியின் அற்புதமான பந்துவீச்சை நேரில் பார்க்க நேற்றைய போட்டிக்கு நான் சென்றிருக்க வேண்டும் என நினைக்கிறேன்'' என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

'' என்னை பொருத்தவரை நான் எனது முழு பங்களிப்பையும் அணிக்கு தர வேண்டுமென விரும்புகிறேன். நேற்றைய போட்டியில் என்னுடைய சிறந்த விக்கெட் எதுதெரியுமா? எனது கடைசி விக்கெட்தான். ஏனெனில் அப்போதுதான் எனது அணி வெற்றி பெற்றது. எனது அணியின் வெற்றியே முக்கியம்'' என போட்டி முடிந்த பிறகு கூறினார் அல்ஜாரி.

''நான் எனது ஊரில் இருந்தபோது எனக்கு ஒரு அழைப்பு வந்தது. நான் யாரிடமும் அதிகம் பேசவில்லை. இப்போட்டிகளில் எவ்வளவு ரன்கள் எடுத்திருக்கிறோம் என்பது முக்கியமில்லை. நான் என்னுடைய சிறந்த பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதை மட்டுமே கவனத்தில் கொண்டிருந்தேன். இந்த பிட்சில் பந்து எப்படி பேட்ஸ்மேனை நோக்கிச் செல்கிறது என்ற தகவலை நீங்கள் வீசும் முதல் பந்தில் இருந்தே அறியலாம். ஆகவே அதற்கேற்ப நீங்கள் பந்து வீசும் முறையில் சில மாறுதல்கள் நீங்கள் செய்ய வேண்டும். அவ்வ்ளவுதான்'' என்கிறார் அல்ஜாரி.

படத்தின் காப்புரிமை Swapan Mahapatra

''மரங்களும் தண்ணீரும் நிறைந்த ஊரில் இருந்து வருகிறேன். இந்தியாவை பற்றி நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன்.'' என போட்டி முடிந்த பேட்டியொன்றில் குறிப்பிட்டார் மும்பை இந்தியன்ஸ் வீரர் அல்ஜாரி ஜோசப்.

நான் எப்போதும் புகழ் வெளிச்சத்துக்காக விளையாடுவதில்லை. போட்டியின் வெற்றி பெறுவதே அவசியம். எனது தனிப்பட்ட செயல்திறனை விட அணி இந்த தொடரை வெல்ல வேண்டும் என்றே விரும்புகிறேன்'' என்கிறார் நேற்றைய போட்டியின் நாயகன் அல்ஜாரி ஜோசப்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :