மகேந்திர சிங் தோனி- என்ன ஆனது 'கேப்டன் கூல்' தோனிக்கு? - நோபால் சர்ச்சையும், பென் ஸ்டோக்ஸை துரத்தும் துரதிர்ஷ்டமும்

என்ன ஆனது 'கேப்டன் கூல்' தோனிக்கு? படத்தின் காப்புரிமை TWITTER

பேட்டிங் செய்யும்போதும், பந்துவீச்சின்போதும் மிகவும் பரபரப்பான தருணங்களில் இயல்பான முகபாவத்துடன் காணப்படும் முன்னாள் இந்திய கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்களால் 'கேப்டன் கூல்' என்றழைக்கப்பட்டார்.

'தல (தோனி) போல வருமா, மேட்ச் எந்த நிலைமையில் இருந்தாலும் முகத்தில் கொஞ்சமும் பதட்டம் தெரியாது; ஜெயிச்ச பிறகும் பெரிய ஆர்ப்பாட்டம் இருக்காது; 2011 உலகக்கோப்பை ஃபைனல் ஞாபகம் இருக்குல்ல?' என்று சமூகவலைத்தளங்களில் தோனியின் ரசிகர்கள் பெருமையுடன் கூறுவதுண்டு.

இந்நிலையில் வியாழக்கிழமையன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே ஜெய்பூரில் நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் நோபாலாக அறிவிக்கப்பட்டு பிறகு அந்த முடிவு திரும்பப் பெறப்பட்ட நிலையில், பிறகு நடந்தது தோனியின் மீதான பிம்பத்தை மாற்றுவது போல அமைந்துவிட்டதாக சமூகவலைத்தளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

படத்தின் காப்புரிமை TWITTER

இந்த போட்டியில் தோனி ஆட்டமிழந்த பிறகு, பென் ஸ்டோக்ஸ் புல்டாஸாக வீசிய பந்து சாண்ட்னெரின் இடுப்பு அளவுக்கு மேலாக இருந்ததால் முதலில் நோபாலாக அறிவிக்கப்பட்டது.

பின்னர் அந்த முடிவு மாற்றிக்கொள்ளப்பட்டது. களத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்த ஜடேஜா மற்றும் மிட்சல் சாண்ட்னெர் ஆகியோர் நடுவருடன் இது குறித்து விவாதித்தனர்.

பெவிலியனில் இதை பார்த்து கொண்டிருந்த தோனியின் முகம் ஆவேசமாக காணப்பட்டது. இதனை தொடந்து அவர் களத்தில் இறங்கி நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ரசிகர்கள் மத்தியில் இது மிகுந்த வியப்பையம், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

மைதானத்தில் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தோனி தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிட்டார் என சிலர் சமூகவலைத்தளங்களில் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.

படத்தின் காப்புரிமை TWITTER

அதேவேளையில் தனது அணிக்காக தோனி வாதிட்டதில் தவறில்லை என்றும், நடப்பு ஐபிஎல் தொடரில் நடுவர்கள் தொடர்ந்து தவறான முடிவுகளை அளித்து வருவதாகவும் ஆதரவு கருத்துகளும் வலம் வருகின்றன.

ஆனால், கடந்த காலங்களிலும் இது போன்ற ஓரிரு சம்பவங்களில் தோனி களத்தில் ஆவேசமாக இருந்துள்ளதை குறிப்பிட்டாக வேண்டும்.

2011-12இல் பிரிஸ்பேனில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் மைக் ஹசி முதலில் ஆட்டம் இழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

பின்னர் அவர் ஆட்டமிழக்கவில்லை என்று திரும்ப அழைக்கப்பட்டார். இதனை ரசிக்காத தோனி அப்போது நடுவருடன் நீண்ட விவாதத்தில் ஈடுபட்டார்.

படத்தின் காப்புரிமை TWITTER

இதேபோல் அண்மையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தொடரில் தோனி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, இந்திய வீரர்களுக்கு தண்ணீர் எடுத்துவந்த சகவீரர் கலீல் அகமது, பிட்சில் நடந்து சென்றதால் கோபமடைந்த தோனி அவரை நோக்கி கோபமாக ஏதோ கூறியது காணொளியாக வைரலானது.

'சோதனை மேல் சோதனை' பென் ஸ்டோக்ஸுக்கு

வியாழக்கிழமை நடந்த ஐபிஎல் போட்டியில் கடைசி ஓவரை பென் ஸ்டோக்ஸிடம் ராஜஸ்தான் கேப்டன் ரஹானே தந்தது பாதகமான முடிவை ஏற்படுத்தியது.

கடைசி ஓவரில் 18 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில், ஸ்டோக்ஸின் முதல் பந்தும், கடைசி பந்தும் சிக்ஸராக விளாசப்பட்டன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பென் ஸ்டோக்ஸ் (கோப்புப் படம்)

அதன் காரணமாக போட்டியில் ராஜஸ்தான் தோல்வி அடைந்தது. கடைசி ஓவரில் ஒரு நோ பால், ஒரு வைடு என ஸ்டோக்ஸ் பந்துவீச்சு மோசமாக அமைந்தது.

இதற்கு முன்னரும் ஒருமுறை இது போன்ற நிலையை பென் ஸ்டோக்ஸ் எதிர்கொண்டார்.

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடந்த 2016 டி20 உலகக்கோப்பை போட்டி இறுதியாட்டத்திலும் இதுபோன்ற தர்மசங்கடமான நிலையை ஸ்டோக்ஸ் சந்திக்க வேண்டியதாக இருந்தது.

கடைசி ஓவரில் மேற்கிந்திய அணி வெற்றி பெற 19 ரன்கள் தேவைப்பட்டது. பென் ஸ்டோக்ஸை பந்துவீச இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் பணித்தார்.

முதல் 4 பந்துகளிலும் வரிசையாக சிக்ஸர்களை மேற்கிந்திய பேட்ஸ்மேன் பிராத்வெயிட் பறக்கவிட இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தது.

அதிர்ச்சியடைந்த பென் ஸ்டோக்ஸ் மைதானத்தில் வெகுநேரமாக நிலைகுலைந்து அமர்ந்திருந்த காட்சி இன்றளவும் ரசிகர்களால் நினைவுகூரப்படுகிறது.

யார் இந்த மிட்சல் சாண்ட்னெர்?

இதனிடையே ஐபிஎல் லீக் போட்டியில் இறுதி ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து அணி வெற்றி பெற உதவிய ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்ஸ்மேனான மிட்சல் சாண்ட்னெர் குறித்த தேடல்கள் வலைத்தளங்களில் அதிகரித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Chennai Super Kings/Twitter

இடது கை பேட்ஸ்மேன் மற்றும் சுழல் பந்துவீச்சாளரான நியூஸிலாந்தை சேந்த ஆல்ரவுண்டரான மிட்சல் சாண்ட்னெர், நியூஸிலாந்து அணிக்காக 2015-ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார்.

சர்வதேச அளவில் 17 டெஸ்ட்கள் ,மற்றும் 59 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய சாண்ட்னெர் முதல் முறையாக ஐபில் லீக்கில் விளையாட 2018-ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலத்தில் வாங்கப்பட்டார்.

அவரது கடந்த ஆண்டு பங்களிப்பு, மற்றும் அணியின் பயிற்சியாளர் , கேப்டன் தோனி ஆகியோர் அவர் மீது வைத்த நம்பிக்கை காரணமாக 2019-ஆம் ஆண்டும் ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் சார்பாக விளையாட சாண்ட்னெர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :