பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்: இனி சாதிக்கப்போவது என்ன?

விராத் கோலி படத்தின் காப்புரிமை Twitter
Image caption விராத் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஆறு தொடர் தோல்விகளுக்கு பிறகு முதல் வெற்றியை ருசித்துள்ளது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடனான நேற்றைய பரபரப்பான ஆட்டத்தில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றிபெற்றது.

பஞ்சாப் அணி நிர்ணயித்த 174 ரன்கள் இலக்கை, ஏ.பி. டிவில்லியர்ஸின் 59 ரன்கள் மற்றும் கேப்டன் கோலியின் அதிரடியான 67 ரன்களுடன், இரண்டே விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 19.2 ஓவர்களில் பெங்களூரு அணி எட்டியது.

இந்த போட்டியில் பெங்களூரு அணி வெற்றிபெற்றதன் மூலம், பஞ்சாப் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயிலின் 99 ரன்கள் பயனற்றுப் போனது.

முன்னதாக விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கிறிஸ் கெயில், 10 பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்சர்களுடன் 64 பந்துகளில் 99 ரன்களை விளாசினார்.

படத்தின் காப்புரிமை Twitter
Image caption கிறிஸ் கெயில்

தற்போது எழுந்துள்ள மிகப் பெரிய கேள்வி என்னவென்றால், இந்த போட்டியில் வென்றதன் மூலம் ஏற்கனவே கிட்டதட்ட அடுத்த சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை இழந்துள்ளதாக கருதப்படும் பெங்களூரு அணி சாதிக்கப்போவது என்ன என்பதுதான்.

எனினும், பெங்களூரு அடுத்து வரும் போட்டிகளில் வெற்றிபெறும் பட்சத்தில், மூன்று, நான்கு வெற்றிகளுடன் அடுத்த சுற்றுக்குள் நுழையும் நம்பிக்கையோடு இருக்கும் மற்ற அணிகளுக்கு பிரச்சனையை உண்டாக்க வாய்ப்புள்ளது.

இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி உத்வேகம் அடைந்திருந்தாலும், கிட்டத்தட்ட இந்தாண்டு ஐபிஎல்லிருந்து வெளியேற்றப்பட்ட அணியாகவே கருதப்படுவதாக கிரிக்கெட் விமர்சகர் அயாஸ் மேனன் கூறுகிறார்.

மற்ற ஐபிஎல் அணிகளுக்கு நிகரான பலமும், கோலியின் தலைமையும் கொண்ட அணியான பெங்களூரு, தொடர்ச்சியாக ஆறு போட்டிகளில் தோல்வியுற்றதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும் அதே சமயத்தில் அடுத்த சுற்றுக்குள் நுழைய ஆவலோடுள்ள மற்ற அணிகளின் நம்பிக்கையை பெங்களூருவின் இனி வரும் வெற்றிகள் சிதைக்க வாய்ப்புள்ளதாகவும் அயாஸ் மேலும் கூறுகிறார்.

ஆர்சிபிக்கு என்னதான் பிரச்சனை?

அடிப்படையிலேயே பெங்களூரு அணிக்கு பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாக அயாஸ் கூறுகிறார். அதாவது, பலமற்ற பேட்டிங் வரிசை, மோசமான பந்துவீச்சு மட்டுமின்றி கோலியின் தலைமை அந்த அணிக்கு எதிர்மறையான முடிவுகளை அளித்து வருவதாக அவர் கூறுகிறார்.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் பெங்களூரு அணி ஓரளவு மீண்டதை நேற்றைய போட்டியில் பார்க்க முடியாததாக அயாஸ் மேலும் கூறுகிறார்.

அடுத்தது என்ன?

படத்தின் காப்புரிமை Twitter

ஆறு தோல்விகளை சந்தித்து துவண்டு போயிருந்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியினருக்கும், ரசிகர்களுக்கும் இந்த வெற்றி நிம்மதியை அளித்திருந்தாலும், அடிப்படையில் இதை தான் சிறந்த வெற்றியாக கருதவில்லை என்று அயாஸ் கூறுகிறார்.

"பெங்களூரு அணியின் பந்துவீச்சு சிறப்பானதாக இருந்திருந்தால், பஞ்சாப் அணியின் ஸ்கோரை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். ஒருவேளை, பெங்களுருவின் பேட்டிங் பலமானதாக இருந்திருந்தால், எளிமையான இந்த ஸ்கோரை 15 ஓவர்களில் அடித்து வெற்றிபெற்றிருக்க வேண்டும்" என்று அவர் கூறுகிறார்.

பெங்களூரு அணியின் வெற்றியின் மதிப்பீட்டை விராத் கோலியின் செயல்பாட்டை வைத்தே கண்டுணர முடியும். நேற்றைய போட்டியில் வெற்றிபெற்றதும் கோலி பெரியளவில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தவில்லை. பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வினை தழுவியதுடன், மற்ற வீரர்களுடன் இயல்பாக கை குலுக்கினார்.

ஆனால், இதே கோலிதான் முகமது ஷமியின் பந்துவீச்சில் அஸ்வினிடம் கேட்சானபோது களத்தில் ஆக்ரோஷமாக காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் அணியுடனான பெங்களுருவின் வெற்றி தற்காலிகமானதா அல்லது நீடித்து நிலைக்கக்கூடியதா என்பது, வரும் திங்கட்கிழமை மும்பை அணியுடன் நடக்கும் போட்டியில் தெரிந்துவிடும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :