11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோல்ஃபில் சாதித்த டைகர் உட்ஸ் மற்றும் பிற செய்திகள்

டைகர் உட்ஸ் படத்தின் காப்புரிமை Mike Ehrmann
Image caption டைகர் உட்ஸ்

பிரபல கோல்ஃப் வீரரான டைகர் உட்ஸ், 11 ஆண்டுகளுக்கு பிறகு பெரியளவிலான வெற்றியை டைகர் உட்ஸ் பதிவு செய்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த நட்சத்திர கோல்ஃப் வீரரான 43 வயதாகும் டைகர் உட்ஸ், ஒருகாலத்தில் கோல்ஃப் விளையாட்டில் உலகளவில் ஆதிக்கம் செலுத்தினார்.

2008ஆம் ஆண்டிற்கு பிறகு பெரியளவில் பதக்கம் எதுவும் வெல்லாமல் அவதிப்பட்டு வந்த டைகர், கோல்ஃப் விளையாட்டின் முக்கிய போட்டிகளில் ஒன்றான 'மாஸ்டர்ஸ் டோர்னமெண்டில்' ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதிச் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார்.

முன்னதாக, தண்டுவடத்தில் ஏற்பட்ட காயத்திற்காக டைகர் நான்கு முறை அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

15 முறை முக்கிய கோல்ஃப் சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்ற டைகர், தான் அறுவை சிகிச்சைக்கு முன்னதாக 'நடப்பதே மிகவும் கடினமாக' இருந்ததாகவும், அதற்கு கோல்ஃப் விளையாட்டே காரணமென்று தனது குழந்தைகள் கருதியதாகவும் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Andrew Redington
Image caption டைகர் உட்ஸ்

"நான் மிகவும் விரும்பி செய்யும் ஒன்றிற்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை பெற்றதில் அதிர்ஷ்டசாலியாக கருதுகிறேன். கடந்த பல ஆண்டுகளாக உட்கார முடியாமல், எதையும் சரிவர செய்ய முடியாமல் மிகவும் அவதிப்பட்டேன். அதிலிருந்து மீண்டு வருவதற்கு நான் கையாண்ட நடைமுறைகளின் காரணமாகவே எனது இயல்பு வாழ்க்கை திரும்ப கிடைத்துள்ளது" என்று டைகர் உட்ஸ் கூறினார்.

"நான் மீண்டும் இயல்பு பாதைக்கு திரும்புவதற்கு உதவிய இந்த போட்டியில் பெற்ற வெற்றியை மிகவும் முக்கியமானதாக கருதுகிறேன். எனக்கு கோல்ஃப் எவ்வளவு முக்கியமானது என்பதை என் குழந்தைகள் புரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளார்கள் என்று நினைக்கிறேன்" என்று அவர் மேலும் கூறினார்.

முதலில் தொழில்ரீதியிலான வாழ்க்கை, அதற்கடுத்து தனிப்பட்ட வாழ்க்கை என தொடர் சரிவுகளை சந்தித்த டைகர் உட்ஸ், இடைப்பட்ட காலத்தில் சர்ச்சைகளிலும் சிக்கினார்.

தனது வாழ்வில் சந்தித்த பிரச்சனைகளையெல்லாம் கடந்து, 11 ஆண்டுகளுக்கு பிறகு முக்கிய போட்டி ஒன்றில் வெற்றிப்பெற்றுள்ள டைகர் உட்ஸை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

எட்டுவழிச் சாலை திட்டத்தை அமல்படுத்துவோம் - நிதின் கட்கரி

படத்தின் காப்புரிமை HINDUSTAN TIMES
Image caption நிதின் கட்கரி

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை முன்னிட்டு சேலத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் மத்திய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பங்குபெற்று உரையாற்றினார்.

இக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சேலத்தில் விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்தனர்.

மத்திய அமைச்சர் பேசும் போது பாஜக மத்தியில் ஆட்சி அமைத்தவுடன் தமிழகத்தின் நீர்தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்றார்.

பசுமை வழிச்சாலை குறித்து பேசிய அவர், பசுமை வழிச் சாலை பிரச்சனை நீதிமன்றத்தில் இருக்கிறது என்று எனக்கு தெரியும். ஆனால், இந்த பகுதியின் வளர்ச்சிக்கு இந்த திட்டம் அவசியம். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சேலம்-சென்னை பசுமை சாலை திட்டம் நிறைவேற்றப்படும், விவசாயிகளுடன் ஆலோசனை செய்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றிய பிறகு ,குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சேலம்-சென்னை பசுமை வழிச் சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் விவசாய நிலங்களுக்கு தேவையான உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றும் கூறினார் நிதின் கட்கரி.

விரிவாக படிக்க:எட்டுவழிச் சாலை திட்டத்தை அமல்படுத்துவோம் – ராமதாஸ் முன் நிதின் கட்கரி அறிவிப்பு

தொடரும் சென்னை சூப்பர் கிங்ஸின் வெற்றி நடை

படத்தின் காப்புரிமை ASHOK BHAUMIK

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிகளுக்கு இடையே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த ஐபிஎல் போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வென்றது.

இரண்டாவது முறையாக சென்னையிடம் கொல்கத்தா அணி தோல்வி அடைந்தது.

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

4 ஓவர்களில் 27 ரன்களை கொடுத்து, 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார் இம்ரான் தாஹிர். ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

விரிவாக படிக்க:'ரஸ்ஸல் ஷோ இல்லை' சிஎஸ்கேவிடம் மீண்டும் வீழ்ந்தது கொல்கத்தா

இடைதேர்தல் நடக்கும் 22 தொகுதிகளின் பிரதான பிரச்சனைகள் என்ன?

படத்தின் காப்புரிமை GOOGLE MAPS

தமிழகத்தில் ஏப்ரல் 18அன்று நடைபெறும் மக்களவை தேர்தலின்போது 39 தொகுதிகளுக்கு வாக்களிப்பதோடு, 22 சட்டமன்ற தொகுதிகளிலும் தமிழக மக்கள் வாக்களிக்கவுள்ளனர்.

அதிமுகவில் இருந்து பிரிந்து டிடிவி தினகரன் அணியில் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்கத்தால் 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதேபோல மற்ற நான்கு தொகுதிகளில் சட்டமன்ற உறுப்பினரின் மரணம், பணபட்டுவாடா வழக்கு தொடர்பாக தேர்தல் நிறுத்திவைக்கப்பட்ட தொகுதி என மொத்தம் 22 தொகுதிகள் இடைத்தேர்தலை சந்திக்கின்றன.

இந்த 22 தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் தங்களது தொகுதியின் பிரதானமான பிரச்சனை என எதை கருதுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ள அந்தந்த தொகுதியில் உள்ள ஆர்வலர்களிடம் பிபிசி தமிழ் பேசியது.

விரிவாக படிக்க:இடைதேர்தல் நடக்கும் 22 தொகுதிகளின் பிரதான பிரச்சனைகள் என்ன?

"திமுகவை ஊடகங்கள்தான் தூக்கிப்பிடிக்கின்றன" - டிடிவி தினகரன்

படத்தின் காப்புரிமை Facebook
Image caption டிடிவி தினகரன்

தமிழ்நாட்டிலும் புதுவையிலும் சேர்த்து 40 நாடாளுமன்றத் தொகுதிகள் 19 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றிபெற்றாக வேண்டும் என்ற இலக்குடன், பெரிய கட்சிகளின் கூட்டணி ஏதுமின்றி களமிறங்கியிருக்கிறார் டி.டி.வி. தினகரன்.

'எந்தக் கேள்வியை வேண்டுமானாலும் கேட்கலாம்; பதில் சொல்லத் தயாராக இருக்கிறேன்' என்றபடி புதுச்சேரியில் பிரசாரத்திற்குப் புறப்படும் முன்பாக, பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனிடம் பேசினார் டிடிவி தினகரன். பேட்டியிலிருந்து:

கே. நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் சட்டமன்ற இடைத்தேர்தலில் 19 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்திருக்கிறீர்கள். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு இது முதல் தேர்தல். வெற்றிபெறும் வாய்ப்புள்ள இடங்களைக் கண்டறிந்து, அதில் கவனம் செலுத்தாமல் அனைத்துத் தொகுதிகளும் போட்டியிடுவது ஏன்?

ப. அ.ம.மு.க. என்ற பெயர்தான் புதிது. இது உண்மையில் ஜெயலலிதா காலத்தில் இருந்த அ.தி.மு.கவின் ஒரு அணி. எங்களுக்குள்ள உள்ள சட்டப் போராட்டத்தின் விளைவாக இந்தப் பெயரில் செயல்படுகிறோம். இப்போது எங்கள் கட்சியில் நிர்வாகியாக இருந்தவர்கள், ஜெயலலிதா காலத்தில் கவுன்சிலர், மந்திரி என பல பதவிகளில் இருந்தவர்கள்தான்.

விரிவாக படிக்க:"திமுகவை ஊடகங்கள்தான் தூக்கிப்பிடிக்கின்றன" - டிடிவி தினகரன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :