உலகக்கோப்பை இந்திய அணி: விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பு - பந்த்துக்கு இடமில்லை

கார்திக் படத்தின் காப்புரிமை Mark Brake - CA/Cricket Australia/Getty Images

பிரிட்டனில் வரும் மே 30 முதல் ஜுலை 14 வரை நடைபெறவுள்ள 12-ஆவது (ஒருநாள் கிரிக்கெட்) உலகக் கோப்பை போட்டிகளுக்கான விராத் கோலி தலைமையிலான இந்திய அணி இன்று (திங்கள்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் ஆகிய 10 நாடுகள் இந்த உலக கோப்பையில் பங்கேற்கின்றன.

இன்று அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், மகேந்திர சிங் தோனி, முகமது ஷமி, புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, கேதர் ஜாதவ், குல்தீப் யாதவ், கே. எல். ராகுல், தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், ஹர்திக் பாண்ட்யா, சாஹல், ஜடேஜா ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்த அணியில் தமிழகத்தை சேர்ந்த இருவர் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் காப்புரிமை Getty Images

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அணிகளை அறிவிக்க வருகிற 23-ந் தேதி கடைசி நாளாகும். இதுவரை உலக கோப்பை போட்டிக்கான நியூசிலாந்து அணி மட்டுமே அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று காலையில் ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று அறிவிக்கப்படவுள்ள இந்திய அணி குறித்து சமூகவலைத்தளங்களில் அதிக எதிர்பார்ப்பு நிலவியது.

இதுவரை 1983 மற்றும் 2011 ஆகிய இரு ஆண்டுகளில் நடைபெற்ற உலக கோப்பையை இந்தியா வென்றுள்ளது. குறிப்பாக 1983-ஆம் ஆண்டு பிரிட்டனில் நடந்த உலக கோப்பையை கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி வென்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :