உலகக் கோப்பை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி அறிவிப்பு - ஆம்லா, ஸ்டெயினுக்கு அணியில் இடம்

ஸ்டெயின் -

பட மூலாதாரம், Hannah Peters

படக்குறிப்பு,

2015 உலகக்கோப்பையை தொலைத்த ஸ்டெயினை தூக்கிவிடும் கிராண்ட் எலியட்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல நட்சத்திர வீரர்கள் டிவில்லியர்ஸ், மோர்னே மோர்கல் இல்லாத நிலையில் தற்போது இளம் படையும் மூத்த வீரர்களும் இணைந்த கலவையாக தென் ஆப்பிரிக்க அணி உள்ளது.

காயம் காரணமாக கடந்த 2-3 ஆண்டுகாலமாக அடிக்கடி அணிக்குள் வருவதும், போவதுமாக இருந்த ஸ்டெயின் தற்போது உலகக் கோப்பை அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறார்.

ஸ்டெயினுக்கு பக்கபலமாக ககிஸோ ரபடா, லுங்கி நிகிடி ஆகிய இரு வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஆண்டில் ஃபெலுக்வாயோ மற்றும் டுவைன் ப்ரீடோரியஸ் அணியில் உள்ளனர். ஃபர்ஹான் பெஹர்தீன் மற்றும் கிறிஸ் மோரிஸுக்கு இடம் கிடைக்கவில்லை

சுழற்பந்து வீச்சாளர்கள் இம்ரான் தாஹீர் மற்றும் தப்ராஸ் ஷம்சிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

பட மூலாதாரம், CHRISTIAAN KOTZE

தொடக்க வீரராக கடந்த ஓராண்டாக தடுமாறி வரும் ஹாஷிம் ஆம்லாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் ரீசா ஹென்றிக்ஸ்சுக்கு அணியில் இடம் இல்லை.

விக்கெட் கீப்பராக குயின்டன் டீ காக் தேர்வு செய்யப்பட்டுளார்.

ஐடன் மர்க்ரம் , ரசி வான் டெர் டசன், அன்ரிச் நொர்ஜே ஆகியிருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.

ஜே பி டுமினி, டேவிட் மில்லர் நடுவரிசை பேட்ஸ்மேன்களாக களமிறங்குவர்.

அணிக்கு ஃபாப் டு பிளசிஸ் தலைமை தாங்குகிறார்.

தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி வீரர்கள் விவரம்

ஃபாப் டு பிளசிஸ்(கே), ஹாஷிம் ஆம்லா, குயின்டன் டீ காக், ஜே பி டுமினி, ஐடன் மர்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, அன்ரிச் நொர்ஜே, ஆண்டில் ஃபெலுக்வாயோ, டுவைன் ப்ரீடோரியஸ், ககிஸோ ரபடா, தப்ராஸ் ஷம்சி, டேல் ஸ்டெயின், இம்ரான் தாஹீர், ராசி வான் டெர் டுசென்.

முன்னதாக உலக கோப்பைக்கான இலங்கை கிரிக்கெட் அணி மற்றும் இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து, நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், Anthony Au-Yeung-IDI

தென் ஆப்ரிக்க அணி இதுவரை ஐசிசி உலக கோப்பையை வென்றதே இல்லை.

கடந்த முறை அரை இறுதியில் நியூசிலாந்து அணியிடம் நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியடைந்தது.

அந்த போட்டியில் டுபிளசிஸ், டிவில்லியர்ஸ் அரை சதம் அடிக்க, மில்லர் 18 பந்தில் 49 ரன் எடுத்து தென் ஆப்ரிக்கா 43 ஓவர்களில் 281 ரன்கள் குவிக்க அடிகோலினர்.

ஆனால், பிரண்டன் மெக்குல்லத்தின் அதிரடி தொடக்கம், எலியட் மற்றும் கோரே ஆண்டர்சன் பொறுப்பாக ஆட்டம் நியூசிலாந்து இறுதி போட்டிக்கு முன்னேற உதவியது.

இப்போட்டியில் ஸ்டெயின் 8.5 ஓவர்களில் 76 ரன்கள் விட்டுக்கொடுத்தார். அவரது பந்துகளில் ஏழு பௌண்டரி, நான்கு சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன.

35 வயதாகும் ஸ்டெயின் மீண்டும் உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்திருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :