சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்றாலும், ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்திய தோனியின் அதிரடி ஆட்டம்

தோனி

பட மூலாதாரம், Twitter

ஞாயிறன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி தோற்கடித்தது.

சென்னை அணிக்கு இலக்காக 162 ரன்கள் வைக்கப்பட்டது. சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட்டது

இந்த ஓவரில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் கேப்டன் தோனி 24 ரன்களை எடுத்து கடைசி பந்தை தவறவிட்டார். அவர் கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்திருந்தால் சூப்பர் ஓவரில் வெற்றியாளர் யார் என்பது முடிவு செய்யப்பட்டிருக்கும்.

சென்னை அணி தோல்வியுற்றிருந்தாலும், தோனியின் பேட்டிங் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சில பழைய நினைவுகளையும் கண் முன் கொண்டு வந்தது என்று கூறலாம்.

கடைசி ஓவரில் பந்து வீசும் வாய்ப்பை உமேஷ் யாதவிடம் கொடுத்தார் விராத் கோலி. ஆட்டத்தை சிறப்பாக முடிப்பதற்கு பெயர்போன தோனி கடைசி ஓவரில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

உமேஷ் யாதவ் வீசிய முதல் பந்திலேயே தோனி பவுண்டரி விளாசினார். அதன்பின் அடுத்த பந்தில் தோனி சிக்ஸர் அடிக்க, அது அரங்கத்தை விட்டு வெளியே சென்றது.

பட மூலாதாரம், Twitter/ChennaiIPL

முதல் இரண்டு பந்துகளில் பத்து ரன்களை எடுத்திருந்த நிலையில், சென்னை அணி வெற்றியை நோக்கி செல்கிறது என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் தோனியின் அடுத்த சிக்ஸர் அதை உறுதி செய்யும்படியாக இருந்தது.

அதே சமயம் பெங்களூரு அணியின் கேப்டன் கோலி பதற்றத்தில் இருந்தார். அடுத்த பந்தில் தோனி இரண்டு ரன்களை மட்டுமே எடுத்தார். இது கோலியையும், உமேஷ் யாதவையும் சற்று ஆசுவாசப்படுத்தியது.

எனினும், அதற்கடுத்த பந்தில் தோனி ஒரு சிக்ஸரை விளாசி சென்னை ரசிகர்களை மகிழ்ச்சிப் படுத்தினார்

கடைசி பந்தில் வெற்றிப் பெறுவதற்கு இரண்டு ரன்கள் தேவை என்ற நிலையில், உமேஷ் யாதவ் மெதுவாக பந்து வீசி தோனியை ரன் ஏதும் எடுக்கவிடாமல் தடுத்திவிட்டார்.

இருப்பினும் ரன் எடுக்கும் முயற்சியில் தோனி ஓடியபோது பந்தை பார்த்தீவ் பட்டேல் பிடித்துவிட்டு ஸ்டெம்பை நோக்கி வீசினார்.

அதனால் ஷர்துல் தாகூர் அவுட் ஆனார். பெங்களூரு அணி வெற்றிப் பெற்றது.

சென்னை அணி தோல்வியை சந்திருந்தாலும், தோனி ஆட்டமிழக்காமல் 48 பந்துகளில், ஏழு சிக்ஸர் மற்றும் ஐந்து பவுண்டரிகளை விளாசி 84 ரன்களை எடுத்திருந்தார்.

தோனியை தவிர்த்து அம்பத்தி ராயுடு 29 ரன்களையும், ரவிந்திர ஜடேஜா 11 ரன்களையும் எடுத்திருந்தனர். இவர்களை தவிர யாரும் இரட்டை இலக்க ரன்களை எடுக்கவில்லை.

பட மூலாதாரம், Twitter

பெங்களூரு அணியின் உமேஷ் யாதவ் 47 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.

சூப்பர் ஃபோர் சுற்றுக்கு தகுதி பெற சென்னை அணிக்கு வெறும் இரண்டு புள்ளிகளே தேவை. ஆனால் சென்னை அணி தொடர்ந்து இரு போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது.

அதே சமயம் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு தகுதி பெறாமல் பெங்களூரு அணி வெளியேறுவது இந்த வெற்றி மூலம் தடுக்கப்பட்டுள்ளது

ஆனால், ஒரே ஒரு தோல்வி கூட அவர்களை வெளியேற்றலாம்

தோனியின் ஆட்டம் குறித்து கிரிக்கெட் வல்லுநர் அயாஸ் பேசும்போது, ஐபிஎல் போட்டியை பொருத்த வரையில் பல சிறப்பான ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இம்மாதிரியான கடைசி நேர சுவாரஸ்யமான போட்டிகள் வெகுசிலவே என்றார்.

"பிராவோ தற்போது சரியான ஃபார்மில் இல்லை. ரவிந்திர ஜடேஜா ரன் அவுட் ஆனார். எனவே தோனி அனைத்து பொறுப்பையும் தானே எடுத்துக் கொண்டார்.

அதன்பிறகு அடுத்த 8-9 ரன்களில் தான் 36 ரன்களை எடுக்க வேண்டும் என்று கணக்கு போட்டார். அதுவே நடைபெற்றது. அவரது கணக்கும் சரியானது."

"தோனியால் கடைசி பந்தில் ரன் ஏதும் எடுக்க முடியவில்லை. ஆனால், அவர் காலச்சக்கரத்தை பத்து வருடங்களுக்கு முன்பு திருப்பிவிட்டார் என்பது உண்மை" என்கிறார் அயாஸ்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :