ரிஷப் பந்த் அதிரடி: டெல்லி கேபிட்டல்ஸ் அபார வெற்றி - புள்ளிகள் அட்டவணையில் முதலிடம்

ரிஷப் பந்த் (கோப்புப் படம்)

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ரிஷப் பந்த் (கோப்புப் படம்)

தனது சொந்த மைதானத்தில் நடந்த போட்டியில், முதலில் பேட் செய்து 191 ரன்கள் குவித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிச்சயமாக வென்றிடுவோம் என்றுதான் எண்ணி இருந்தது, ரிஷப் பந்த் களத்தில் இறங்கும்வரை.

டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே திங்களன்று ஜெய்பூரில் நடந்த போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வென்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை முதலில் பேட் செய் பணித்தது.

ராஜஸ்தான் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஒரு ரன்கூட எடுக்காத நிலையில் சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்க, 5 ரன்களுக்கு தனது முதல் விக்கெட்டை அந்த அணி பறிகொடுத்தது.

ரஹானே அபார சதம்

ரஹானேவுடன் ஜோடி சேர்ந்த ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் தொடக்கம் முதலே அடித்தாடினார். 32 பந்துகளில் ஸ்மித் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பின்னர் களமிறங்கிய ஸ்டோக்ஸ், டர்னர் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

மறுபுறம் சிறப்பாக விளையாடிய ரஹானே 63 பந்துகளில் 105 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது அதிரடி ஆட்டத்தில் 11 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடங்கும்.

பட மூலாதாரம், PTI

இதன் மூலம் மொத்தமுள்ள 20 ஓவர்களில் 191 ரன்கள் எடுத்த ராஜஸ்தான் அணி, டெல்லி அணிக்கு 192 என்ற கடினமான இலக்கை நிர்ணயித்தது.

டெல்லி அணியின் ரன் சேஸில், தொடக்க வீரர் பிரித்வி ஷா சற்றே நிதனமாக விளையாட, மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவான் ஆரம்பம் முதலே அதிரடி பாணியை கடைபிடித்தார்.

தவான் 27 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். அடுத்து களமிறங்கிய டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் நான்கே ரன்களில் ஆட்டமிழந்தார்.

எல்லா திசைகளிலும் விளாசிய ரிஷப் பந்த்

10 ஓவர்களில் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்த டெல்லி அணி, எஞ்சிய 10 ஓவர்களில் 111 ரன்கள் எடுக்க முடியுமா என்று ரசிகர்கள் எண்ணினர்.

ஆனால், ரிஷப் பந்த் எல்லா கேள்விகளுக்கும் தனது பேட்டால் பதிலளித்தார். ஒவ்வொரு ஓவரிலும் பந்த் ஒரு சிக்ஸரோ, பவுண்டரியோ விளாச, அவரை கட்டுப்படுத்த முடியாமல் டெல்லி அணியின் பந்துவீச்சாளர்கள் திகைத்தனர்.

பட மூலாதாரம், AFP/GETTY IMAGE

36 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் உதவியுடன் பந்த் 79 ரன்கள் எடுக்க, 19.2 ஓவர்களில் இலக்கை எட்டியது டெல்லி அணி.

இந்த வெற்றியின் மூலம் 14 புள்ளிகள் பெற்ற டெல்லி அணி, புள்ளிகள் அட்டவணையில் முதலிடத்தை பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் 14 புள்ளிகள் பெற்றபோதிலும், ரன்ரேட் விகித அடிப்படையில் டெல்லி அணி முதலிடத்தை பிடித்தது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :