கோமதி மாரிமுத்து: வறுமை, பசி, பல தடைகளை கடந்த தங்கமங்கை

கோமதி படத்தின் காப்புரிமை Twitter

23வது சர்வதேச ஆசிய தடகள போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்க பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு அரசியல் கட்சியினர் பலரும் உதவித்தொகை வழங்கி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், முடிகண்டம் கிராமத்தில், வறுமை மட்டுமே நிரம்பிய எளிய குடும்பத்தில் பிறந்து, வளரும் காலத்தில் தந்தையை இழந்து, தன்னம்பிக்கையை துணையாக கொண்டு விளையாட்டு துறையில் சாதித்துள்ளார் கோமதி.

அவரின் இரண்டு சகோதரிகள் இன்றும் தினக்கூலியாக வேலைசெய்துவருகிறார்கள். தன் குடும்பத்தை மட்டுமல்ல தன்னை போல விளையாட்டு துறையில் சாதிக்க தடைகளை சந்திக்கும் பலருக்கும் உதவ தயாராகும் கோமதியிடம் பேசினோம். பேட்டியிலிருந்து:

தற்போது ஆசிய தடகள போட்டியில் தங்கம் பெற்றுள்ளீர்கள். பதக்கம் வெல்ல நீங்கள் கடந்து வந்த சவால்கள் பற்றி சொல்லுங்கள்.

என் தந்தையை இழந்தேன், என் பயிற்சியாளர் காந்தியை இழந்தேன். இவர்கள் இருவரும் என் வளர்ச்சியை, வெற்றியை பெரிதும் விரும்பியவர்கள். என் காலில் காயம் என தொடர்ந்து மன உளைச்சலில் சிக்கினேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக முறையான பயிற்சியை கூட செய்யமுடியவில்லை என்றபோதும் தங்க பதக்கத்தை வென்றுள்ளேன்.

என் தந்தை சமீபமாக காலமாகிவிட்டார். அவர் இருந்தவரை என்னை விளையாட்டு பயிற்சிக்கு அனுப்புவது, நான் அடுத்த எந்த போட்டியில் கலந்துகொள்வேன் என என்னைப் பற்றி நிறைய யோசிப்பார். உணவுக்காக நாங்கள் கஷ்டப்பட்டிருக்கிறோம். என் தாய், என் சகோதரிகள் லதா மற்றும் திலகா விவசாய கூலியாக வேலைசெய்து என்னுடைய போக்குவரத்து செலவுகளுக்கு பணம் சேர்த்தார்கள்.

ஒரு நாள் முழுவதும் உழைத்தால் வெறும் ரூ.150 கிடைக்கும். அதை எனக்கு கொடுத்தார்கள். என் சகோதரிகள் இருவரும் இளவயது திருமணத்தால் மிகவும் சிரமப்படுகிறார்கள். தற்போது நான் அவர்களுக்கு உதவுகிறேன். எனக்கு ஊக்கம் கொடுத்த மற்றொரு சகோதரி பிரான்சிஸ் மேரி. அவரும் தடகள போட்டியாளர். குடும்ப நிலையை கருத்தில் கொண்டு, விளையாட்டு துறையிலிருந்து நான் விலகிக்கொள்ளவேண்டும் என பலரும் அறிவுரை கூறினார்கள். மேரி அக்கா மட்டும்தான் நான் தொடர்ந்து விளையாட வேண்டும் என ஊக்கம் கொடுத்தார்.

800 ஓட்டப்பந்தயத்தில், கடைசி 200 மீட்டர் தூரத்தை எப்படி கடந்தீர்கள்? வெற்றியை நெருங்கும் அந்த தருணத்தைப் பற்றி சொல்லுங்கள்.

நான் இரண்டாவது வெற்றியாளராக இருப்பேன் என்று நினைத்தேன். ஆனால் பந்தயம் முடிவுக்கு வரும் நேரத்தில் கடைசி 50 மீட்டர் தூரத்தில், என்னுடைய முழு முயற்சியை செலுத்தி முதல் இடம் பெற்று வெற்றிபெற்றேன். என் பயிற்சியாளர் என்னை ஓடு கோமதி, ஓடு என எனக்கு சொல்வது போலவே இருந்தது. என் தந்தையை நினைத்துக்கொண்டேன். நான் வெற்றி பெறுவதை, நான் பதக்கம் வாங்குவதை டிவியில் பார்த்திருந்தால், மகிழ்ச்சியில் அழுதிருப்பார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
“என் அப்பா உயிரோடு இருந்திருந்தால் அழுதிருப்பார்” - கோமதி மாரிமுத்து

எளிய பின்ணணியில் இருந்து சாதனை படைத்த உங்களுக்கு விளையாட்டு பயிற்சிக்கான வசதிகள் எவ்வாறு இருந்தது. அடிப்படையாக உங்கள் உணவு, பயிற்சிக்கு என்ன உதவிகள் கிடைத்தன?

நான் பெங்களுருவில் வருமான வரித்துறையின் வேலைசெய்கிறேன். பெங்களுருவில் பயிற்சிக்கான மைதானம் கிடைப்பதே சவாலாக இருந்தது. என்னோடு தங்கி, எனக்கு உதவ யாரும் இல்லை. எனக்கான உணவை நானே சமைத்துக்கொண்டேன். வேலைக்கும் செல்லவேண்டும் என்பதால், பயிற்சிக்கான நேரத்தை ஒதுக்குவது சிரமமாக இருந்தது, கடைசி மூன்று மாதங்கள் மட்டும் கொஞ்சம் நேரம் கிடைத்தது.

பெண்களுக்கான ஒட்டப்பந்தையத்தில் கலந்துகொண்டாலும், பயிற்சி காலங்களில் ஆண் போட்டியாளர்களோடும் பயிற்சி பந்தயங்களில் கலந்துகொண்டேன். வறுமை, அடுத்தடுத்து நான் சந்தித்த இழப்புகள் எனக்கு அயர்ச்சியை தந்தாலும், தங்க பதக்கம் வெல்லவேண்டும் என லட்சியம் எனக்கு ஊக்கமளித்து.

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் விளையாட்டுத் துறையில் பெண் குழந்தைகள், பெண்கள் பங்குபெறுவதற்கு ஊக்கமளிக்கப்படுகிறதா?

நகர பகுதிகளில் பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. கிராம பகுதிகளில் விளையாட்டு துறையில் ஈடுபாடு காட்டும் குழந்தைகளுக்கு அவர்களின் குடும்பங்கள் மட்டுமே உதவமுடியும். நான் ஒரு விளையாட்டு வீராங்கனை என அறிமுகம் செய்யும்போது, சில பெண்கள் இது ஒரு வேலையா, இதற்கு என்ன படிக்க வேண்டும் என கேட்டுள்ளார்கள். ஸ்போர்ட்ஸ் ஒரு துறை, அதில் நாம் சாதிக்கலாம் எனற விழிப்புணர்வை கிராமத்து குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும். விளையாட்டு துறையில் உள்ள வாய்ப்புகள் என்னை போன்ற கிராமத்து போட்டியாளர்களுக்கு கிடைக்க வேண்டும்.

பெண்கள் விளையாட்டு துறையில் நீடிக்க தொடர்ந்து உடற்பயிற்சிகள் செய்யவேண்டும், அவர்கள் கடுமையான பயிற்சிகள் செய்தால், அவர்களின் உடல்தன்மை ஆண்களை போல மாறிவிடும் என்ற கற்பிதம் பற்றி உங்கள் கருத்து.

இதெல்லாம் மூடநம்பிக்கை. உடற்பயிற்சி செய்தால் உடல் வலுவாகும். பல பெண் போட்டியாளர்கள் தொடர்ந்து பயிற்சி செய்கிறார்கள், சாதிக்கிறார்கள், பெண்மையை தொலைப்பதில்லை. பி.டி.உஷா, அஞ்சு பாபி ஜார்ஜ் என பெரிய பட்டியல் இருக்கிறது. அவர்கள் இயல்பான வாழ்க்கையை வாழ முடிகிறது. ஆண்களை போல உடல் மாறிவிடும் என்பது பொய். உடல் திடமாகும்.

நீங்கள் பதக்கம் வென்ற பின்னர், உங்களுக்கு அரசு மற்றும் தனி நபர்கள் வாழ்த்து தெரிவிக்கிறார்கள். எப்படி உணர்கிறீர்கள்.

தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்ததை பத்திரிகையில் பார்த்தேன், திமுக கட்சியின் தலைவர் ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார். பல அமைப்புகள், விளையாட்டு வீரர்கள் வாழ்த்து சொல்கிறார்கள். எனக்கு அளித்த உற்சாகத்திற்கு நன்றி. நான் பயிற்சி பெறும் காலங்களில் உதவி இல்லாமல் தவித்தேன். என்னை போல கிராமங்களில் வசதியின்றி தவிக்கும் போட்டியாளர்களுக்கு உதவுங்கள் என சொல்லி வருகிறேன்.

உங்களின் அடுத்த இலக்கு என்ன?

அடுத்த உலக சாம்பியன்ஷிப் வெல்ல வேண்டும் என்பதுதான் எனக்கு இலக்கு. உடனடியாக நான் பயிற்சியை தொடங்க வேண்டும். என்னுடைய பயிற்சியாளர் 5 நாட்கள் மட்டுமே விடுப்பு கொடுத்துள்ளார். முழுநேரமும் பயிற்சி செய்யவேண்டும் என்பதை மட்டுமே யோசித்துக்கொண்டிருக்கிறேன். இதுவரை, ஆசிய தடகள போட்டியில், 800 மீட்டர் பயந்தயத்தில் 1995ல் வெற்றிபெற்ற சைனி வில்சன் 1:59 நிமிடங்களில் கடந்தது சாதனையாக உள்ளது. அந்த சாதனையை நான் முறியடிக்கவேண்டும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :