வார்னர், ரஷீத் கான்: இருமுனை தாக்குதலில் வீழ்ந்த பஞ்சாப்

வார்னர் படத்தின் காப்புரிமை Getty Images

ஆஸ்திரேலிய அணியின் உலக கோப்பை பயிற்சி முகாமில் கலந்து கொள்ளவுள்ள டேவிட் வார்னர் நடப்பு ஐபிஎல் தொடரின் கடைசி ஆட்டமாக அமைந்த நேற்றைய போட்டியில் தனது முத்திரையை அழுத்தமாக பதித்தார்.

பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கி, ஓராண்டு தடை விதிக்கப்பட்ட டேவிட் வார்னர், அந்த தடை விலகி அண்மையில் அறிவிக்கப்பட்ட ஆஸ்திரேலிய உலகக்கோப்பை அணியில் இடம்பிடித்தார்.

இதேபோல் சென்ற முறை ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதிக்கப்படாத வார்னர் நடப்பு ஐபிஎல் தொடரில் சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் விரைவில் ஆஸ்திரேலிய அணி வீரர்களுடன் சேர்ந்து உலகக்கோப்பைக்கான பயிற்சியை வார்னர் துவங்கவுள்ளதால் நடப்பு ஐபிஎல் தொடரில் தனது கடைசி போட்டியான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான தொடரின் லீக் போட்டியில், மிக நன்றாக பங்களித்து சிறப்பாக வார்னர் விடைபெற்றார்.

திங்கள்கிழமையன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான தொடரின் லீக் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் வார்னர் மற்றும் சாஹாவின் அதிரடியின் காரணமாக தொடக்கம் முதலே விரைவாக ரன்கள் குவித்தது.

13 பந்துகளில் 28 ரன்கள் எடுத்த சாஹா ஆட்டமிழக்க, அனுபவ வீரர் மனிஷ் பாண்டே வார்னருடன் கைகோர்த்தார். மனிஷ் பாண்டே 36 ரன்கள் எடுத்தார்.

மறுமுனையில் சிறப்பாக விளையாடி கொண்டிருந்த டேவிட் வார்னர், 56 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளின் உதவியுடன் 81 ரன்கள் எடுத்தார்.

இந்த அதிரடி ஆட்டத்தின் பலனாக மொத்தமுள்ள 20 ஓவர்களில், 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்களை ஹைதராபாத் அணி குவித்தது.

படத்தின் காப்புரிமை TWITTER@KL RAHUL 11
Image caption கே. எல். ராகுல்

அதேவேளையில் , 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் தனது ஆட்டத்தை துவக்கிய பஞ்சாப் அணி தொடக்கத்தில் கிறிஸ் கெயிலின் விக்கெட்டை சொற்ப ரன்களில் இழந்தது.

தொடக்க வீரர் கே. எல். ராகுல் 56 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தார். ஆனால், பஞ்சாப் அணியின் மற்ற வீரர்கள் அவருக்கு இணையாக விளையாடாத காரணத்தால் அந்த அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் மட்டும் எடுத்தது.

அதேபோல் மிக சிறப்பாக பந்துவீசிய ரஷீத் கானின் பந்துவீச்சில் பஞ்சாப் அணி வீரர்கள் பெரிதும் தடுமாறினர். அவர் வீசிய நான்கு ஓவர்களில் 21 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனால் சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த வெற்றியின் மூலம் 12 போட்டிகளில் விளையாடியுள்ள சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி 12புள்ளிகள் பெற்றுள்ளது. மேலும் இந்த அணி புள்ளிகள் அட்டவணையில் நான்காவது இடத்தில் நீடித்து வருகிறது.

அதேவேளையில், 12 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி 10 புள்ளிகள் பெற்றுள்ளது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :