சூப்பர் ஓவரில் வென்ற மும்பை இந்தியன்ஸ், சொதப்பிய ஹைதராபாத் அணி

மும்பை இந்தியன்ஸ் படத்தின் காப்புரிமை Mitesh Bhuvad

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்திய மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

மும்பை வாங்கடே மைதானத்தில் வியாழக்கிழமையன்று சன்ரைசர்ஸ் ஹைத்தராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் வெற்றி பெறும் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பதால், இந்த ஆட்டம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் டி காக் ஆகியோர் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஆனால் சிறப்பாக விளையாடிய சுழற்பந்து வீச்சாளர்கள் நபி, ரஷித் கான் ரன் குவிப்பை கட்டுப்படுத்தினர். 5 பவுண்டரியுடன் 24 ரன்களை விளாசிய ரோஹித்தை அவுட்டாக்கினார் கலீல் அகமது.

பின்னர் சூரியகுமார்-டிகாக் களத்தில் இருக்க, 11-ஆவது ஓவரில் ஸ்கோர் 81-ஐ கடந்தது.

1 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 23 ரன்களை சேர்த்த சூரியகுமாரும், கலீல் அகமது பந்தில் வெளியேறினார்.

படத்தின் காப்புரிமை Mitesh Bhuvad

அதிரடி ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா 1 சிக்ஸர், பவுண்டரியுடன் 18 ரன்களை எடுத்து புவனேஸ்வர் குமார் பந்தில் அவுட்டானார்.

சிறப்பாக ஆடிய டி காக் தனது நான்காவது அரைசதத்தை பதிவு செய்தார்.

2 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 69 ரன்களுடன் டி காக்கும், 9 ரன்களுடன் க்ருணால் பாண்டியாவும் களத்தில் இருந்தனர்.

20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை குவித்தது மும்பை அணி.

ஹைதராபாத் தரப்பில் கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி 42 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். புவனேஸ்வர், முகமது நபி இருவரும் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

163 ரன்கள் வெற்றி இலக்குடன் களத்தில் இறங்கியது ஹைதராபாத் அணி.

முதலில் ஆடிய ரித்திமன் சாஹா, மார்ட்டின் கப்டில் தொடக்கம் முதலே அபாரமாக ஆடினர். 4 ஓவரில் 40 ரன்களை எட்டிய நிலையில், 5 பவுண்டரியுடன் 25 ரன்களை விளாசிய சாஹாவை அவுட் செய்தார் பும்ரா.

அதன் பின்னர் கப்டில் 15, கேப்டன் கேன் வில்லியம்ஸன் 3 ரன்களுடனும், விஜய் சங்கர் 12 ரன்களுக்கும் அவுட்டாகி வெளியேறினர். ஹார்திக் பாண்டியா பந்துவீச்சில் 2 ரன்களுடன் வெளியேறினார் அபிஷேக் சர்மா.

படத்தின் காப்புரிமை Mitesh Bhuvad

ஹைத்திராபாத் அணி ரன் குவிக்க திணறி வந்தாலும், 37 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்தார் மணிஷ் பாண்டே. கடைசி இரண்டு ஓவர்களில் 29 ரன்கள் தேவை என்ற நிலைக்கு தள்ளப்பட்டது ஹைதராபாத்.

கடைசி பந்தில் 7 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் மணிஷ் பாண்டே சிக்ஸர் அடித்ததால் ஸ்கோர் 162 என சமநிலையை எட்டியது.

மணிஷ் பாண்டே 2 சிக்ஸர், 8 பவுண்டரியுடன் 47 பந்துகளில் 71 ரன்களை விளாசி அவுட்டாகாமல் இருந்தார். மும்பை தரப்பில் பும்ரா, க்ருணால் பாண்டியா மற்றும் ஹார்திக் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு ஹைதராபாதும் 162 ரன்களை எடுத்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது.

படத்தின் காப்புரிமை Mitesh Bhuvad

இதையடுத்து சூப்பர் ஓவர் முறை அறிமுகம் செய்யப்பட்டது.

முதலில் ஆடிய ஹைதராபாத் 2 விக்கெட் இழப்புக்கு 8 ரன்களை குவித்தது. இரண்டாவதாக ஆடிய மும்பை விக்கெட் இழப்பின்றி 9 ரன்களை எடுத்து வென்றது.

புள்ளிகள் பட்டியலில் 16 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. ஹைதராபாத் 12 புள்ளிகளுடன் 4 ஆவது இடத்தில் உள்ளது.

பிளே ஆஃப் சுற்றில் கடைசி ஓரிடத்துக்கு ஹைதராபாத், கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :