கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தோல்வி: அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது ஐதராபாத் அணி

மும்பை இந்தியன்ஸ் படத்தின் காப்புரிமை AFP/GETTY IMAGES

ஐபிஎல்லின் நேற்றைய முதல் போட்டியில் பஞ்சாப் அணியை சென்னை அணியும், இரண்டாம் போட்டியில், கொல்கத்தா அணியை மும்பை அணியும் எதிர்கொண்டன.

மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தினால் கொல்கத்தா அணி முதல் நான்கு இடங்களை பிடிக்கும் என்ற நிலையில் நேற்று நடைபெற்ற போட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.

ஆனால் கொல்கத்தா அணி வெற்றி பெறவில்லை. அந்த அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையிடம் தோல்வியடைந்தது. இதையடுத்து சன் ரைசர்ஸ் அணி முதல் நான்கு இடங்களுக்குள் நுழைந்தது.

கொல்கத்தாவின் தோல்வி ஐதராபாத் அணிக்கு அதிர்ஷ்டத்தை வழங்கியது.

14 போட்டிகளில் ஆறு வெற்றிகளை பெற்று ஐதராபாத் அணி 12 புள்ளிகளை பெற்றிருந்தது.

நேற்றைய தோல்விக்கு பிறகு கொல்கத்தா அணியும் 14 போட்டிகளில் ஆறு வெற்றியை பெற்று 12 புள்ளிகளை பெற்றது. ஆனால் ரன் விகித அடிப்படையில் ஐதராபாத் அணி அடுத்த சுற்றுக்கு தேர்வானது.

இன்று ப்ளே ஆஃப் சுற்றின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

புதன்கிழமையன்று நடைபெறும், ப்ளே ஆஃப் சுற்றின் இரண்டாம் போட்டியில், டெல்லி கேபிடல்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

தோல்வி கண்ட சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி

நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை அணியை வீழ்த்தியது பஞ்சாப் அணி.

ஆனால் இதனால் சென்னை அணிக்கு எந்த இழப்பும் இல்லை. பஞ்சாப் அணிக்கு எந்த லாபமும் இல்லை.

பஞ்சாப் அணி ஏற்கனவே ஐபிஎல் போட்டிகளில் இருந்து வெளியேறிவிட்டது. சென்னை அணி ஏற்கனவே புள்ளி வரிசை பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது.

பஞ்சாப் அணிக்கு இலக்காக வைக்கப்பட்ட 171 ரன்களை நான்கு விக்கெட் இழப்புகளில் 18 ஓவர்களில் அடைந்து, சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் அணி.

பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் 36 பந்துகளில், ஏழு பவுண்டரிகள் மற்றும் ஆறு சிக்ஸர்களுடன் 71 ரன்களை எடுத்தார்.

முதலில் பேட் செய்த சென்னை அணியின், டு ப்ளசிஸ் 96 ரன்களையும், சுரேஷ் ரெய்னா 53 ரன்களையும் எடுத்தனர்.

வெற்றி பெற்ற மும்பை, வெளியேறிய கொல்கத்தா

இரண்டாம் போட்டியில் மும்பை அணிக்கு 134 ரன்கள் இலக்காக வைக்கப்பட்டது. 16.1 ஓவர்களில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து இலக்கை அடைந்தது அந்த அணி.

அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா ஆட்டமிழக்காமல் 55 ரன்களை எடுத்தார்.

8 பவுண்டரிகளுடன் ரோஹித் ஷர்மா 48 பந்துகளில் 55 ரன்களை எடுத்தார்.

வாழ்வா சாவா என்று அமைந்த இந்த போட்டியில் டாஸை வென்று, முதலில் பேட் செய்தும் கொல்கத்தா அணிக்கு பலனில்லை.

படத்தின் காப்புரிமை Getty Images

கொல்கத்தா அணியினர் மும்பை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இருபது ஓவர்களில் 133 ரன்களை மட்டுமே எடுத்தனர்.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் லின், 29 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்களுடன் 41 ரன்களை எடுத்தார்.

மற்றொரு ஆட்டக்காரர் ராபின் உத்தப்பா 47 பந்துகளில் 40 ரன்களை எடுத்தார்.

கடந்த இரு போட்டிகளில் நன்றாக விளையாடிய ஷுப்மன் கில் இந்த போட்டியில் வெறும் ஒன்பது ரன்களை மட்டுமே எடுத்தார். அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் வெறும் மூன்று ரன்களை மட்டுமே எடுத்திருந்தார்.

கொல்கத்தா அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ரசல், ரன் ஏதும் எடுக்கவில்லை.

ப்ளே ஆஃப் இன்று தொடக்கம்

ஐபிஎலின் இந்த சீசனில், 56 போட்டிகளுக்கு பிறகு 14 போட்டிகளில் 9 வெற்றிகளை பெற்று 18 புள்ளிகளுடன் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி வரிசையில் முதல் இடத்தில் உள்ளது.

அதே புள்ளிகள் மற்றும் வெற்றி எண்ணிக்கையில் இருக்கும் சென்னை அணி, ரன் விகித அடிப்படையில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

படத்தின் காப்புரிமை AFP

ஏழு வருடங்களுக்கு பிறகு ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள டெல்லி கேபிடல்ஸ் அணி 18 புள்ளிகளை கொண்டு மூன்றாம் இடத்தில் உள்ளது. சென்னை மற்றும் மும்பை அணியைக் காட்டிலும் குறைவான ரன் விகிதம் இருப்பதால் மூன்றாவது இடத்தில் உள்ளது அந்த அணி.

14 போட்டிகளில் ஆறு வெற்றிகளை பெற்று 12 புள்ளிகளுடன் ஐதராபாத் அணி நான்காவது இடத்தில் உள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :