ஐதராபாத் சன் ரைசர்ஸ் Vs டெல்லி கேபிட்டல்ஸ் : ரிஷப் பந்தின் சிக்ஸர் ஆசை, அமித் மிஸ்ராவின் ரன் அவுட் - பரபரப்பு நிமிடங்கள்

ரிஷப் பந்த் படத்தின் காப்புரிமை TWITTER/ RISHABH PANT

ரிஷப் பந்த், பிரித்வி அதிரடி ஆட்டத்தால் விறுவிறுப்பான எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது டெல்லி கேபிடல்ஸ்.

இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்சுடன் நடக்கும் இறுதிப்போட்டிக்கான இரண்டாவது தகுதிச் சுற்றில் போட்டியிடத் தேர்வாகியுள்ளது டெல்லி கேபிடல்ஸ்.

முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 162 ரன்கள் எடுத்தது. 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது பேட்டிங் செய்ய வந்த டெல்லி எட்டு விக்கெட்டுகளை இழந்து 19-வது ஓவரின் 5வது பந்தில் வெற்றி இலக்கைத் தொட்டது.

டெல்லி அணியின் பிரித்வி ஷா 56 ரன்களும், ரிஷப் பந்த் 49 ரன்களும் எடுத்து விறுவிறுப்பான இந்த வெற்றியை சாத்தியமாக்கினர்.

படத்தின் காப்புரிமை PTI
Image caption பிரித்வி ஷா

கடைசி வரை ஆட்டம் எந்தப் பக்கம் செல்லும் என்பது கணிக்க முடியாததாக இருந்தது.

முதலில் டாஸில் வென்ற டெல்லி முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர்களும் விளையாடிய ஹைதராபாத் 162 ரன்கள் எடுத்தது. பிறகு பேட் செய்ய வந்த டெல்லி 14 ஓவர்கள் வரை மிக எளிதாக இலக்கை நோக்கி நடைபோட்டது. 14 ஓவர் முடிவில் அந்த அணியின் ஸ்கோர் 111 ரன்களாக இருந்தது.

அப்போது ரிஷப் பந்தும், காலின் மன்றோவும் களத்தில் இருந்தனர்.

15-வது ஓவரை வீச வந்தார் ஹைதராபாத் அணியின் லெக் ஸ்பின்னர் ரஷீத் கான். அவரது நான்காவது மற்றும் கடைசி ஓவர் அது. ஓவரின் முதல் பந்திலேயே மன்ரோ வீழ்ந்தார். நான்காவது பந்தில் புதிய பேட்ஸ்மேன் அக்ஷர் படேல் ரஷித் கான் சுழலில் சிக்கி விக்கெட் கீப்பர் சாஹாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

இரண்டு விக்கெட்டுகளை பறிகொடுத்த அந்த ஓவரில் டெல்லி ரன் ஏதும் எடுக்கவில்லை. ஓவரின் முடிவில் அணியின் ஸ்கோர் 111 ரன்னுக்கு 5 விக்கெட் என்பதாக இருந்தது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ரஷீத் கான்.

அணி மேற்கொண்டு சரிவதை டெல்லியின் ரிஷப் பந்த் தடுத்து நிறுத்தினார். 18வது ஓவரில் 22 ரன்கள் விளாசிய அவர் மீண்டும் ஆட்டத்தை டெல்லியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். ஓவரின் முதல் நான்கு பந்துகளில் அவர் இரண்டு சிக்சர், இரண்டு பவுண்டரி எடுத்தார். இந்த ஓவரின் முடிவில் டெல்லி ஐந்து விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்த 12 பந்துகளில் அவர்கள் 8 ரன் எடுத்தாலே வெற்றிக்குப் போதும் என்ற நிலை இருந்தது.

அப்போது வெற்றி கைக்கெட்டும் தொலைவில் இருப்பதாக தெரிந்தது.

விறுவிறுப்பான கடைசி ஓவர்

ஆனால், 19-வது ஓவரை வீசவந்த புவனேஸ்வர் குமார் டெல்லிக்கு அதிர்ச்சி அளித்தார். 21 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருந்த ரிஷப் பந்த் விக்கெட்டை அவர் வீழ்த்தினார்.

கடைசி 9 பந்துகளில் வெற்றிக்கு ஐந்து ரன்கள் தேவைப்பட்டபோது ஓரிரு ரன்கள் எடுப்பதை தவிர்த்து சிக்ஸர் அடிக்க முயன்று அவுட் ஆனார் ரிஷப் பந்த். இதன் மூலம் அரை சதம் எடுக்கும் வாய்ப்பையும் இழந்தார். அவர் அவுட் ஆனதும் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றியது.

படத்தின் காப்புரிமை AFP/GETTY IMAGES
Image caption ரிஷப் பந்த்

கடைசி ஓவரை வீச வந்தார் கலீல் அஹமது. கீமோ பால் - அமித் மிஸ்ரா ஜோடி பேட் செய்துகொண்டிருந்தது. வெற்றி பெற இவர்களுக்கு 5 ரன்களே தேவையாக இருந்தது.

கலீல் வீசிய முதல் பந்தே வைடு ஆனது. எனவே ஆறு பந்தில் 4 ரன்கள் எடுத்தால் போதும் என்ற நிலையில் இருந்தது டெல்லி.

அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்தார் மிஸ்ரா. இரண்டாவது பந்தில் கீமோ பால் ரன் எடுக்கவில்லை. மூன்றாவது பந்தில் அவர் ஒரு ரன் எடுத்தார். இப்போது மூன்று பந்தில் இரண்டு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது டெல்லி.

கடைசி ஓவரின் நான்காவது பந்தில் அமித் மிஸ்ரா பேட்டிங் செய்துகொண்டிருந்தார். கலீல் அஹமது பந்து வீச அது அமித் மிஸ்ரா பேட்டில் படாமல் விக்கெட் கீப்பருக்குச் சென்றது.

ஆனால் அமித் மிஸ்ரா ரன்கள் எடுக்க விரைந்தார். இதை கவனித்த ஹைதராபாத்தின் விக்கெட் கீப்பர் சாஹா, பந்தை கலீல் அஹமதுவுக்கு வீசினார். தனது முனையில் உள்ள ஸ்டம்பை பதம் பார்த்து அமித் மிஸ்ராவை ரன் அவுட் ஆக்க முயன்றார் கலீல் அஹமது. ஆனால் அமித் மிஸ்ரா திடுமென தான் ஒடிக்கொண்டிருந்த பகுதியில் இருந்து பிட்சியின் மையப்பகுதியில் ஸ்டம்பை மறைக்கும் விதமாக ஓடினார். இதனால் கலீலின் குறி தவறியது.

இந்த பந்தில் முதலில் சாஹா கேட்ச் பிடித்தபோதே பந்து அமித் மிஸ்ரா பேட்டில் பட்டதா என மூன்றாவது அம்பயர் சோதித்தார். அதில் பந்து பேட்டில் பட வில்லை என்பதால் அமித் மிஸ்ரா தப்பினார். ஆனால் எதிரணி ரன் அவுட் செய்யும் வாய்ப்பை வேண்டுமென்றே தடுக்கும் விதமாக ஓடியதால் அமித் மிஸ்ராவுக்கு அவுட் கொடுக்கப்பட்டது.

கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தை எதிர்கொண்ட கீமோ பால் நல்லபடியாக பவுண்டரி விளாசியதால் டெல்லி தப்பித்தது.

இல்லையெனில் ரிஷப் பந்த் அவுட் ஆன விதமும் மற்றும் அமித் மிஸ்ராவின் செயலும் டெல்லி கேபிட்டல்ஸ் ரசிகர்களை வெகுவாக பாதித்திருக்கும் மேலும் பெரும் விமர்சனத்தையும் உண்டாகியிருக்கும்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption அமித் மிஸ்ரா

இதே போட்டியில் ஹைதராபாத் பேட்டிங் செய்தபோதும் ஒரு சம்பவம் நடந்தது.

ஆட்டத்தின் 20 வது ஓவரில் ஐந்தாவது பந்தை டெல்லி பௌலர் கீமோ பால் வீச தீபக் ஹூடா எதிர்கொண்டார். வைடாக வீசிப்பட்ட பந்தை ஹூடா அடிக்கத் தவறிவிட்டு ரன் ஓடினார். விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், பந்து வீச்சாளர் முனையில் இருக்கும் ஸ்டம்பை நோக்கி ரன் அவுட் செய்வதற்காக பந்தை வீசினார்.

அப்போது தீபக் ஹூடா ஓடிவந்தபோது கீமோ பால் இடையில் இருந்ததால் அவரால் விரைவாக ரன் எடுக்க முடியவில்லை. இந்நிலையில் நடுவர் டெல்லி அணித்தலைவர் ஷ்ரேயாஸ் அய்யரிடம் பேசினார், பின்னர் ரிஷப் பந்த் டெல்லி அணித்தலைவரிடம் பேசினார். அதன்பின்னரே ரன் அவுட் தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஐபிஎல்லில் எலிமினேட்டர் போட்டியில் ஹைதராபாத் தோற்று தொடரில் இருந்து வெளியேறுவது நேற்றைய போட்டியுடன் மூன்றாவது முறையாகும்.

கடந்த சீசனில் பௌலிங்கில் அசத்திய ஹைதரபாத் அணி இம்முறை முதலில் பேட்டிங் செய்து 200 ரன்களுக்கு குறைவாக எடுத்த போட்டிகளில் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு வெல்லத் தவறியது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :