மும்பை இந்தியன்ஸ் Vs சென்னை சூப்பர் கிங்ஸ்: கோப்பையை கைப்பற்றுமா சென்னை அணி?

சென்னை அணி படத்தின் காப்புரிமை Getty Images

ஐபிஎல் போட்டிகளில் நேற்று விசாகபட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை அணி.

அதிக இளம் வீரர்களை கொண்ட டெல்லி கேபிடல்ஸ் அணியை அனுபவ வீரர்கள் அதிகம் கொண்ட சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

டாஸில் தொடங்கிய வெற்றி

டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

டெல்லி அணியின் ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ஷிகர் தவன் மற்றும் பிருத்வி ஷா இருவரும் சேர்ந்து 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சஹார் வீசிய பந்தில் பிருத்வி ஷா அவுட் ஆனார்.

அதன்பின் ஷிகர் தவனும் ஹர்பஜன் சிங் வீசிய பந்தில் 18 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

அந்த அணியின் ஷ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் முறையே 13 ரன்களும் 38 ரன்களையும் எடுத்திருந்தனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

சென்னை அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 19 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு ரன்களை 131 ரன்களை எடுத்திருந்தது.

டெல்லி அணியின் மொத்த ஸ்கோர் 140 ரன்களுக்குள்ளாகவே அடங்கிவிடும் என்று எதிர்பார்த்த நிலையில், கடைசி ஓவரில், இஷான்ந்த் ஷர்மா, ஜடேஜா வீசிய பந்தில் ஒரு பவுண்டரியும், ஒரு சிக்ஸரும் அடித்து அணியின் மொத்த ரன்களை 147ஆக உயர்த்தினார். அந்த அணி கடைசி ஓவரில் 16 ரன்களை எடுத்திருந்தது.

இதன்மூலம் சென்னை அணி 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று நிர்ணயிக்கப்பட்டது.

கைகொடுத்த அனுபவ வீரர்கள்

சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய டூ ப்ளசிஸ் மற்றும் வாட்சன் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

இருவரும் அரை சதம் எடுத்திருந்தனர். ஒருகட்டத்தில் சென்னை அணி, இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 109 ரன்களை எடுத்திருந்தது. அதன்பிறகு வந்த ரெய்னா 11 ரன்களிலும், தோனி 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இருப்பினும் தொடக்க ஆட்டக்காரர்களின் நிதானமான ஆட்டத்தால் சென்னை அணி 19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 151 ரன்களை எடுத்து வெற்றி பெற்றுள்ளது.

இதன்மூலம் சென்னை அணி தனது நூறாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

மும்பை அணியுடன்

படத்தின் காப்புரிமை AFP/Getty images

நாளை நடைபெறவிருக்கும் இறுதிப்போட்டியில் மும்பை அணி சென்னை அணியை ஐதராபாத்தில் எதிர்கொள்கிறது.

ஐபிஎல்லின் இரண்டு பலம் வாய்ந்த அணிகளாக கருதப்படும் சென்னை மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு நுழைந்திருப்பது ரசிகர்களுக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது, அந்த அணியின் ரசிகர்களுக்கு ஒருபக்கம் மகிழ்ச்சியளித்தாலும், மும்பை அணியை வெற்றிக் கொள்ளுமா என்ற சந்தேகமும் எழாமல் இல்லை.

சென்னை சேப்பாக்கத்தில் நடந்த முதல் தகுதிச்சுற்று போட்டி உட்பட, ஐபிஎல்லின் இந்த சீசனில் சென்னை அணிக்கும், மும்பை அணிக்கும் நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் மும்பை அணியே வெற்றிப் பெற்றுள்ளது என்பதுதான் ரசிகர்களின் சந்தேகங்களுக்கு காரணம்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :