2019 உலகக் கோப்பையில் தோனியின் பங்கு என்ன?

படத்தின் காப்புரிமை Getty Images

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கிரிக்கெட் உலகக்கோப்பை, இந்த விளையாட்டின் ரசிகர்களுக்கு ஒரு திருவிழா போன்றது. தற்காலத்தில் கிரிக்கெட்டின் வடிவம் வெகுவாக மாறியுள்ளது. 20-20 கிரிக்கெட் போட்டிகள் கிரிக்கெட் பற்றிய பார்வை மற்றும் அணுகுமுறையை மாற்றியுள்ளன. இவையனைத்தும் இருந்த போதும் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலகக்கோப்பையை பார்க்க இந்தியாவில் ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கும்.

இதற்கு காரணம் 1983-ல் நடந்த உலகக்கோப்பை. 1983ல் நடந்த உலகக்கோப்பையின்போது இந்திய அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு சென்றது. யாரும் நினைக்காத வண்ணம் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி வலிமையான மேற்கிந்திய அணியை வென்றது. இது இந்தியாவில் கிரிக்கெட்டின் வளர்ச்சி மற்றும் பிரபலத்துக்கு ஒரு தொடக்கமாக இருந்தது.

கபில்தேவ் ஒரே இரவில் இளம் கிரிக்கெட் வீரர்களின் சூப்பர் ஸ்டாராக மாறினார். இதையடுத்து கிரிக்கெட் உலகில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, அனில் கும்ப்ளே போன்ற வீரர்கள் மற்றும் இவர்களை தொடர்ந்து மகேந்திர சிங் தோனி, விராட் கோலி போன்ற வீரர்கள் உருவாயினர்

இந்திய கிரிக்கெட்டில் தோனி சகாப்தம்

இந்திய விளையாட்டு ரசிகர்களின் மனதில் நிலைபெற்றுவிட்ட ஒரு பெயர் தோனி. அவரது தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி பெரும் வெற்றிகளை ஈட்டியது.

2007-ல் டி20 உலகக்கோப்பையை வென்ற முதல் கேப்டனாக தோனி உருவெடுத்தார். அதன் பிறகு 2011-ஆம் ஆண்டில் நடந்த 50 ஓவர் உலகக்கோப்பையை வென்ற இரண்டாவது இந்திய கேப்டன் ஆனார் தோனி.

அதன் பிறகு 2013-ல் இங்கிலாந்தில் சாம்பியன் டிராஃபியை வென்றதுடன், மூன்று ஐசிசி கோப்பைகளை வென்ற கேப்டன் என்ற பெருமையை தோனி பெற்றார்.

இவரது தலைமையிலான இந்திய அணி பல டெஸ்ட் போட்டிகளையும், வெவ்வேறு கிரிக்கெட் போட்டிகளையும் வென்றுள்ளது. இவரது தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து மூன்று முறை ஆண்டின் சிறந்த டீ அணி என்ற விருதை வாங்கியுள்ளது.

தோனி ஒரு கிரிக்கெட் வீரர் அல்ல அவர் ஒரு சகாப்தம் .தன்னுடைய அணிக்காக அவர் எதையும் செய்வார் என ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹைடன் கூறியுள்ளார்.

2019 உலகக்கோப்பையில் தோனியின் பங்கு

இது தோனியின் கடைசி உலகக்கோப்பை போட்டியாக இருக்கலாம் என கருதப்படுகிறது. தோனி இந்த உலகக்கோப்பையில் விக்கெட் கீப்பராக இருப்பார் என்பதை யாரும் சந்தேகிக்க முடியாது. இந்திய அணியின் பேட்டிங்கில் தோனி இல்லாமல் மிடில் ஆர்டர் முழுமையாக இருக்காது. பேட்டிங்கை தவிர கீப்பிங்கில் அவரின் பங்கு சிறப்பாக இருக்கும்.

படத்தின் காப்புரிமை Getty Images

இதனை தவிர பந்துவீச்சாளர்களை மாற்றுவது, பேட்டிங்வரிசை மாற்றம் போன்றவற்றில் விராட் கோலிக்கு தகுந்த அறிவுரை தரும் அனுபவமிக்க வீரராக தோனி இருப்பார். பீல்டிங்கின்போது தோனி- கோலி கலந்தாலோசித்து மாற்றங்களை செய்வர் என்று எதிர்பார்க்கலாம்.

தோனியின் சிறப்பு

தோனி இந்த உலகக்கோப்பையின் போது இந்திய அணியின் வெற்றிக்கு பெரும் நம்பிக்கையாக இருப்பார் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

தோனி இந்த ஐபிஎல் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 12 இன்னிங்ஸ்களில் 416 ரன்கள் எடுத்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

சுனில் கவாஸ்கர் கூறுகையில், தோனியின் அனுபவம் இந்த தொடரில் மிகவும் முக்கியமானது. பேட்டிங் வரிசையில் மிடில் ஆர்டரில் தோனியின் பங்கு அதிகம் தேவைப்படும். அழுத்தம் நிறைந்த கட்டத்தில் அமைதியாக இருக்கும் ஒருவர் எப்போதும் அணிக்கு ஒரு பலம். அதனால் தோனியின் பங்கு அதிகம் என்று குறிப்பிட்டுயிருந்தார்.

ரிஷப் பந்த், தோனி அல்லது தினேஷ் கார்த்திக்?

2019 ஐசிசி உலகக்கோப்பை இந்திய அணியின் தேர்வுக்கு முன்பு, தோனியை அணியில் சேர்ப்பதில் முன்னாள் வீரர்கள் பலருக்கு விருப்பம் இல்லை.

சிலர் ரிஷப் பந்த் தான் சிறப்பாக விளையாடுவார் என சிலர் நம்பினர். அணியின் தேர்வின்போது ஹர்பஜன் சிங், தோனிக்கு பதிலாக யாரும் தேவையில்லை எனவும், கே எல் ராகுல் போதும் என்றும் கூறினார்.

தினேஷ் கார்த்திக் அணியில் சேர்க்கப் பட்டிருந்தாலும் தோனி விளையாட முடியாத சந்தர்பத்தில்தான் விளையாடுவார்.

மக்கள் தோனியை 'கேப்டன் கூல் ' என அழைக்கின்றனர். காரணம் அவர் தனிப்பட்ட விஷயங்களைவிட அணியை எப்போதும் முன்னிலையில் வைப்பார். அதனால் தன்னுடைய உணர்ச்சிகளை அவரால் கட்டுப்படுத்த முடிகிறது.

அவர் உலகக்கோப்பையில் இருப்பது அணியின் பங்களிப்பு மற்றும் வெற்றிகளில் ஒரு மைல் கல்லாக இருக்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :