உலகக்கோப்பை கிரிக்கெட் - தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வங்கதேசம் ரன் வேட்டை

ஷகீப் அல் ஹசன் மற்றும் வங்கதேச அணியின் விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹீம் படத்தின் காப்புரிமை Alex Davidson / getty
Image caption வங்கதேச அணியின் ஷகீப் அல் ஹசன் (இடது) மற்றும் முஷ்பிகுர் ரஹீம்

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 2019ஆம் ஆண்டுக்கான உலக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன.

முதல் இன்னிங்சின் 50 ஓவர்கள் இறுதியில் வங்கதேசம் ஆறு விக்கெட் இழப்புக்கு 330 ரன்கள் எடுத்திருந்தது.

தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் வங்கதேசத்துக்கு எக்ஸ்ட்ரா ரன்களை வாரி இரைத்தனர். வங்கதேசம் இந்தப் போட்டியில் 21 எக்ஸ்ட்ரா ரன்களை பெற்றது.

லண்டன் ஓவல் மைதானத்தில் தற்போது நடந்துவரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

தொடக்க வீரர் தமீம் இக்பால் 16 ரன்களில் பெலுக்வாயோ பந்துவீச்சில் க்விண்டன் டீ காக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

இன்னொரு தொடக்க வீரர் சௌமியா சர்காரும் கிறிஸ் மோரிஸ் பந்துவீச்சில் டீ காக்கிடம் கேட்ச் கொடுத்து 42 ரன்களில் அவுட் ஆனார்.

அடுத்து களமிறங்கிய ஷகீப் அல் ஹசன் மற்றும் வங்கதேச அணியின் விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹீம் நிலைத்து நின்று ஆடினார்கள்.

வங்கதேச அணிக்கு 12வது ஓவரில் இரண்டாவது விக்கெட் வீழ்ந்தது. மூன்றாவது விக்கெட்டை 36வது ஓவரிலேயே தென்னாப்பிரிக்க பந்து வீச்சாளர்களால் கைப்பற்ற முடிந்தது.

36வது ஓவரின் முதல் பந்தில் 84 பந்துகளில் 75 ரன்கள் எடுத்திருந்த அல் ஹசன் இம்ரான் தாஹிரின் பந்துவீச்சில் போல்ட் ஆனார்.

விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹீம் வங்கதேச அணிக்காக அதிகபட்சமாக 80 பந்துகளில் 78 ரன்கள் எடுத்தார். அவர் பெலுக்வாயோ பந்துவீச்சில் துஸ்ஸேனுக்கு கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய முகமது மிதுன் 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மஹ்மதுல்லா உடன் ஜோடி சேர்ந்த மொசதக் உசைன் 20 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து மோரிஸ் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

மஹ்மதுல்லா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 33 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். 49வது ஓவரில் ஏழாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய மெஹிதி ஹசன் ஆட்டமிழக்காமல் ஐந்து ரன்கள் எடுத்தார்.

தென்னாப்பிரிக்காவின் இம்ரான் தாஹிர், கிறிஸ் மோரிஸ் மற்றும் பெலுக்வாயோ ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :