உலகக்கோப்பை 2019 - டு பிளசிஸின் தென்னாப்பிரிக்காவுக்கு அதிர்ச்சியளித்த வங்கதேச அணி

வங்கதேச அணி படத்தின் காப்புரிமை Alex Davidson

நடப்பு உலகக் கோப்பை தொடரில் வங்கதேச அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

போட்டி குறித்து சுருக்கமான விவரம்

ஐசிசி ஆண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட், ஓவல் மைதானம்

வங்கதேசம் - 330/6 (50 ஓவர்), முஷ்ஃபிகுர் ரஹிம் 78, ஷகிப் 75

தென்னாப்பிரிக்கா - 309/8(50 ஓவர்) டு பிளஸிஸ் 62, முஸ்தாபிசுர் 3-67

உலகக் கோப்பைத் தொடரை வெற்றியுடன் துவங்கியிருக்கிறது வங்கதேச அணி. வலுவான தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக மிகச்சிறப்பான வெற்றியுடன் புள்ளிப் பட்டியலில் தனது வெற்றிக் கணக்கை துவக்கியிருக்கிறது.

தென்னாப்பிரிக்க அணி தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. தனது மூன்றாவது போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்கிறது டு பிளசிஸ் படை.

வங்கதேச அணி தென்னாப்பிரிக்காவுக்கு அதிர்ச்சியளிப்பது இது முதல் முறையல்ல. கடந்த 2007 உலகக் கோப்பையில் சூப்பர் 8 சுற்றில் 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய தென்னாப்பிரிக்காவை 184 ரன்களில் சுருட்டியது வங்கதேசம். அதன் பின்னர் கடந்த 2015-ம் ஆண்டு வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் தென்னாப்பிரிக்கா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-2 என தொடரை இழந்தது.

தற்போது மீண்டும் வங்கதேசத்திடம் தோல்வியடைந்துள்ளது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி.

ஐசிசி கிரிக்கெட்டின் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் தென்னாப்பிரிக்க அணி மூன்றாமிடத்தில் இருக்கிறது . வங்கதேசம் ஏழாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய போட்டியில் என்ன நடந்தது?

லண்டனின் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

ஆட்டத்தின் துவக்கத்தில் இருந்தே ஆறுக்கும் அதிகமான ரன் ரேட்டுடன் விளையாடிய வங்கதேசம் 50 ஓவர்கள் முடிவில் 330 ரன்கள் குவித்தது.

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் வரலாற்றிலேயே வங்கதேசத்தின் அதிகபட்ச ரன் இதுதான். முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிராக 2015-ம் ஆண்டு டாக்காவில் நடந்த ஒருநாள் போட்டியில் 329 ரன்கள் எடுத்திருந்தது.

வங்கதேசத்தின் அபார ரன் குவிப்பால் உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் சேஸிங்கில் சாதனை படைக்க வேண்டிய கட்டாயத்துடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா எந்த ஒரு தருணத்திலும் வங்கதேசத்தை விட முன்னிலையில் இருக்கவில்லை.

மிகவும் சிரமப்படாமலேயே வங்கதேசம் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திவிட்டது.

படத்தின் காப்புரிமை Alex Davidson/getty images

வங்கதேச அணி பேட்டிங் பிடித்தபோது மூன்றாவது விக்கெட்டுக்கு ஷகிப் அல் ஹசன் - முஷ்ஃபிகுர் ரஹிம் இணை 142 ரன்கள் சேர்த்து. முஷ்ஃபிகுர் 78 ரன்களும், ஷகிப் 75 ரன்களும் விளாசினர்.

கடைசி கட்டத்தில் மஹமதுல்லா அதிரடியாக விளையாடி 33 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்தார். தென்னாப்பிரிக்க அணி நேற்று உதிரியாக வழங்கியது மட்டும் 21 ரன்கள்.

வங்கதேசத்திடம் தென்னாப்பிரிக்க அணி வீழ்ந்ததும் 21 ரன்களில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபீல்டிங்கில் நேற்று சொதப்பியது டு பிளசிஸ் படை. மேலும் முக்கியமான விக்கெட்டுகளையும் சேஸிங்கில் சீரான இடைவெளியில் இழந்தது.

முக்கியமான சேஸிங்கில் குயின்டன் டீ காக் ரன் அவுட் ஆன விதம் நகைப்புக்குரிய விதத்தில் அமைந்தது. டு பிளசிஸ் 62 ரன்களில் ஆட்டமிழந்தார். வாண் டர் டஸன் நாற்பதாவது ஓவரில் 41 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

தென்னாப்பிரிக்காவுக்கு கடைசி மூன்று ஓவர்களில் ஒரு சிறு நம்பிக்கை இருந்தது. 18 பந்துகளில் 44 ரன்கள் தேவைப்பட்டபோது டுமினி களத்தில் இருந்தார். ஆனால் முஸ்தாஃபிசுர் ரஹ்மான் பந்துக்கு அவர் இரையாக, தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கனவு 48-வது ஓவரிலேயே சிக்கலாகிப் போனது.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வங்கதேசம்

கடந்த சில ஆண்டுகளில் வங்கதேசம் நன்றாக முன்னேறியிருக்கிறது. தரவரிசையில் முதல் ஐந்து இடங்களில் இருக்கும் அணிகளுக்கு சவால் அளிக்கும் விதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. சில சமயங்களில் அதிர்ச்சித் தோல்வியை பரிசாகத் தருகிறது.

இந்த உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்துடன் விளையாடிய முத்தரப்பு தொடரில் கோப்பையைக் கைப்பற்றியது வங்கதேசம். கடந்த 2015 உலகக் கோப்பைக்கு பிறகு இந்தியா, பாகிஸ்தான் அணிகளுடனான ஒருநாள் தொடரையும் கைப்பற்றியுள்ளது.

படத்தின் காப்புரிமை Alex Davidson

நேற்றைய ஆட்டத்தில் வங்கதேசத்தின் தொடக்க வீரர்களான தமீம் இக்பால் மற்றும் சவுமியா சர்க்கார் இருவரும் வலுவான தொடக்கம் தந்தனர். இவ்விருவரும் இணைந்து விரைவாக 60 ரன்கள் சேர்த்தனர்.

ஷகிப் மற்றும் ரஹிம் ஜோடி சேர்ந்தபிறகு ரன் விகிதம் குறையாமல் பார்த்துக்கொண்டனர். தொடர்ச்சியாக எதிர்முனைக்கு ஓடி ஓடி ரன்கள் சேர்த்தனர். எக்ஸ்டரா கவர் மற்றும் ஸ்கொயர் லெக் திசைகளில் பந்துகளை விரட்டவும் தவறவில்லை.

இவ்விருவரும் ஆட்டமிழந்ததும் வங்கதேச அணி நல்ல ரன்ரேட்டை தவறவிடும் வாய்ப்பு இருந்தபோதிலும் கடைசி நேரத்தில் மஹ்மத்துல்லாவின் அதிரடி ஆட்டம் மற்றும் மொசாதக் ஹொசைனின் சிறப்பான பங்களிப்பு ஆகியவற்றால் 46-வது ஓவருக்கு பிறகு 54 ரன்களைச் சேர்த்தது வங்கதேச அணி.

பந்துவீச்சில் தென்னாப்பிரிக்க அணியை விடவும் சிறப்பாகவே செயல்பட்டது. ஷகிப் மற்றும் மெஹந்தி ஹாசன் ஆடுகளத்தை நன்றாக பயன்படுத்தினர். மர்கிரம் விக்கெட்டை ஷகிப்பும் டு பிளசிஸ் விக்கெட்டை மெஹந்தி ஹாசனும் கைப்பற்றினர்.

வேகப்பந்து வீச்சாளர்கள் மொஹம்மத் சைஃபுத்தீன் மற்றும் முஸ்தாஃபிசுர் ரஹ்மான் ஆட்டத்தின் கடைசி 15 ஓவர்களில் சிறப்பாக வீசி வெற்றியை உறுதி செய்தனர்.

அரை இறுதிக்கு தகுதிபெறுவது இனி கடினம்?

இங்கிலாந்துக்கு எதிராக தென்னாப்பிரிக்கா தோல்வியடைந்த நிலையில் அதே ஆடுகளத்தில் வங்கதேசத்தை எதிர்கொண்ட சூழலில் தென்னாப்பிரிக்கா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறிவிட்டது.

வங்கதேசம் பேட்டிங் பிடித்தபோது ஐந்தாவது ஓவரில் சவுமியா சர்க்காரை அவுட்டாக்கும் வாய்ப்பை வீணடித்தது. மேலும் ஃபீல்டிங்கிலும் பல முறை சொதப்பியது. 47வது ஓவரில் மஹமதுல்லாவின் கேட்சை ரபாடா கோட்டை விட்டார். அப்போது மஹமதுல்லா 12 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

லுங்கி நிகிடி காயம் காரணமாக நான்கு ஓவர்கள் மட்டுமே பந்துவீசினார். பேட்டிங்கில் தென்னாப்பிரிக்க வீரர்கள் பலர் குறைந்தது 30 பந்துகளை சந்தித்தனர். ஆனால் ரன் ரேட்டை உயர்த்தும் நோக்கமின்றி விளையாடினர்.

இனி தென்னாப்பிரிக்கா வலுவான இந்திய அணியை புதன்கிழமை சந்திக்கவிருக்கிறது. ரவுண்ட் ராபின் சுற்றில் ஒவ்வோர் அணியும் 9 போட்டிகள் விளையாடவுள்ள நிலையில் இரண்டு போட்டிகளை ஏற்கனவே விளையாடிவிட்ட தென் ஆப்பிரிக்கா இன்னும் வெற்றிக்கணக்கை துவங்காமல் இருக்கிறது.

''புதன்கிழமை இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நாங்கள் கடும் சவாலாக விளங்குவோம் என்பதை உறுதியாக கூறுகிறேன்'' என வங்கதேசத்துக்கு எதிரான போட்டி முடிந்தபிறகு தென்னாப்பிரிக்க அணித் தலைவர் கூறியிருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: