உலகக் கோப்பை 2019 - ஜோ ரூட், ஜாஸ் பட்லர் சதமடித்தும் பாகிஸ்தான் அணியிடம் இங்கிலாந்து தோல்வி

பாகிஸ்தான் படத்தின் காப்புரிமை LINDSEY PARNABY

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரவுண்ட் ராபின் சுற்றில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியுள்ளது பாகிஸ்தான் அணி.

ஆசிய அணியிடம் சொந்த மண்ணில் இங்கிலாந்து தோற்றது அந்நாட்டு ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

போட்டி குறித்து சுருக்கமான விவரம்

ஐசிசி ஆண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட், ட்ரென்ட் பிரிட்ஜ்

பாகிஸ்தான் 348-8(50 ஓவர்கள்) முகமது ஹபீஸ் 84, வோக்ஸ் 3-71

இங்கிலாந்து 334-9(50 ஓவர்கள்) ரூட் 107, வஹாப் 3-82

போட்டி முடிவு - பாகிஸ்தான் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் மிக மோசமாக தோல்வியைத் தழுவியிருந்தது. கடந்த 11 ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக தோல்வியடைந்திருந்தது.

குறிப்பாக உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 0-4 என இங்கிலாந்து அணியிடம் தோல்வியைச் சந்தித்திருந்தது. இதையடுத்து இப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு அதிக வெற்றி வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் நிபுணர்கள் கருதினர்.

ஆனால் திரைப்படங்களில் பூஜ்ஜியத்திலிருந்து ராஜ்ஜியத்தை பிடிக்கும் கதாநாயகன் போல சர்வதேச அளவில் நடக்கும் ஐசிசி தொடர்களில் மோசமான தோல்வியிருந்து மீண்டுவந்து அபார வெற்றியடையும் வரலாற்றை கொண்டிருக்கும் பாகிஸ்தான் அணி மீண்டும் அத்தகையதொரு வெற்றி பெற்றுள்ளது.

உலகக் கோப்பை 2019 தொடரின் முதல் சில ஆட்டங்களில் ஓர் அணியே ஆட்டம் முழுவதும் கோலோச்சியிருந்தது. இந்நிலையில் வங்கதேசம் தென்னாப்பிரிக்காவுக்கு அதிர்ச்சித் தோல்வியை பரிசாகத் தந்த மறுநாள் பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணியை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. இன்று ஆப்கானிஸ்தான் அணி இலங்கையை எதிர்கொள்கிறது.

இங்கிலாந்து அணி ஒருநாள் போட்டிகளில் மிகப்பெரிய அளவில் ரன்களை குவிக்கும் வழக்கத்தை வைத்திருக்கிறது. இதனால் பாகிஸ்தான் நிர்ணயித்த 349 ரன்கள் எனும் இலக்கை கடந்து உலகக் கோப்பைத் தொடரில் வரலாற்றுச் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப வெற்றியை நெருங்கி வந்த இங்கிலாந்து அணி, இரண்டு சத நாயகர்கள் ஆட்டமிழந்ததும் வெற்றிப்பாதையிலிருந்து விலகி 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை Alan Martin
Image caption ஜாஸ் பட்லர்.

2019 உலகக்கோப்பை தொடரின் முதல் சதத்தை நேற்று இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் விளாசினார். அவருக்கு அடுத்தபடியாக 75 பந்துகளில் சதமடித்து அசத்தினார் ஜாஸ் பட்லர். எனினும் இங்கிலாந்து அணி 334 ரன்களில் கட்டுப்படுத்தப்ட்டது.

ரவுண்ட் ராபின் சுற்றில் பத்து அணிகளும் ஒருமுறை தங்களுக்கும் மோதிக்கொள்ள வேண்டும். இதில் இங்கிலாந்து அணி தனது மூன்றாவது ஆட்டத்தில் வரும் சனிக்கிழமையன்று வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. பாகிஸ்தான் அணி வெள்ளிக்கிழமையன்று மற்றொரு ஆசிய அணியான இலங்கையை எதிர்கொள்கிறது.

நாட்டிங்ஹாமில் நேற்று என்ன நடந்தது?

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ஃபகர் ஜமான், இமாம் உல் ஹக் இருவரும் இங்கிலாந்து பந்துவீச்சை சிதறடித்து விரைவாக ரன்கள் சேர்த்தனர். இந்த ஜோடியை மொயின் அலி 15-வது ஓவரில் பிரித்தார்.

ஃபகர் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் 21-வது ஓவரில் இமாம் உல் ஹக்கும் மொயின் அலியின் சுழற்பந்தில் பெவிலியன் திரும்பினார். அப்போது பாகிஸ்தான் அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்திருந்தது.

அதன்பின்னர் பாபர் அசாம், முகமது ஹபீஸ் இணை பொறுப்புடன் விளையாடியது. அவ்வப்போது பந்துகளை எல்லைக்கோட்டுக்கு விரட்டவும் இவ்விருவரும் தவறவில்லை.

இந்த இணையையும் மொயின் அலிதான் பிரித்தார். பாபர் 66 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார்.

அதன்பின்னர் ஹபீஸ் மற்றும் பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பரும் அணித்தலைவருமான சர்பராஸ் அகமது இணைந்து ரன் ரேட்டை குறையாமல் பார்த்துக்கொண்டனர். ஹபீஸ் 84 ரன்களில் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 348 ரன்கள் எடுத்து. பாகிஸ்தானின் அணித்தலைவர் சர்பராஸ் 44 பந்துகளில் ஐந்து பௌண்டரி உதவியுடன் 55 ரன்கள் எடுத்தார்.

இங்கிலாந்து அணி உதிரியாக மட்டும் 20 ரன்களை வழங்கியது.

இங்கிலாந்து அணியின் பகுப்பாய்வாளர் ஒருவரின் கருத்துப்படி கடந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இங்கிலாந்து அணியின் ஃபீல்டிங் அற்புதமாக இருந்த நிலையில், பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் மிக மோசமாக அமைந்திருந்தது.

களத்தில் தவறுகள் நடந்தது மட்டுமின்றி ராய் ஒரு முக்கியமான கேட்சை கோட்டை விட்டார். முகமது ஹபீஸ் 14 ரன்களில் இருந்தபோது ஒரு கேட்ச் மூலம் அவரை அவுட் ஆக்கும் வாய்ப்பை வீணடித்தார் ராய்.

அதன்பின்னர் ஹபீஸ் 84 ரன்களில்தான் வெளியேறினார்.

கிறிஸ் வோக்ஸ் நேற்று நான்கு கேட்ச் பிடித்தார், மூன்று பேரின் விக்கெட்டுகளை சாய்த்தார். ஆனால் எட்டு ஓவர்களில் 71 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் அடில் ரஷீதின் பந்துகளை பாகிஸ்தான் வீரர்கள் பதம்பார்த்தனர். இவ்விருவரின் பந்துகளிலும் விக்கெட் விழவில்லை. மேலும் ஓவருக்கு சராசரியாக கிட்டத்தட்ட எட்டு ரன்களை கொடுத்தார் ஆர்ச்சர். அடில் ரஷீத் ஐந்து ஓவர்களில் 43 ரன்கள் கொடுத்தார்.

மொயின் அலி மற்றும் மார்க்வுட் மட்டும் சிக்கனமாக வீசினர்.

ஐந்து ஓவர்களில் ஆட்டத்தை மாற்றிய பாகிஸ்தான்

தென்னாப்பிரிக்க அணித்தலைவர் டு பிளசிஸ் போலவே பாகிஸ்தான் அணித்தலைவரும் சுழற்பந்து ஆயுதத்தை தொடக்க ஓவர்களில் பயன்படுத்தினார். ஷதாப் கான் பந்தில் 8 ரன்களில் ஆட்டமிழந்தார் ராய்.

பேட்ஸ்டோ வஹாப் ரியாஸ் பந்தில் 32 ரன்களில் நடையை கட்டினார். இங்கிலாந்து அணித் தலைவர் இயான் மோர்கன் 9 ரன்களிலும் பென் ஸ்டோக்ஸ் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 21.2 ஓவர்கள் முடிவில் 118 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்தது இங்கிலாந்து.

அடுத்த 28 ஓவர்களில் 231 ரன்கள் எடுக்க வேண்டும் என மலைக்க வைக்கும் இலக்குடன் இங்கிலாந்து நம்பிக்கையுடன் ஆடியது.

படத்தின் காப்புரிமை Alan Martin
Image caption ஜோ ரூட், ஜாஸ் பட்லர்

ஜோ ரூட் - ஜாஸ் பட்லர் இருவரும் பொறுப்பாகவும் அதிரடியாகவும் விளையாடினர்.

இந்த இருவரும் களத்தில் இருந்தபோது ஒரு கட்டத்தில் 12 ஓவர்களில் 104 ரன்கள் இங்கிலாந்தின் வெற்றிக்குத் தேவைப்பட்டது.

ஆட்டத்தின் 39-வது ஓவரில் ஷதாப் கான் 107 ரன்கள் எடுத்திருந்த ரூட்டை வெளியேற்றினார்.

அதன்பின்னர் மொயின் அலி ஜாஸ் பட்லர் இணைந்தனர். ஆட்டத்தின் 45-வது ஓவரில் பட்லர் சதமடித்த அடுத்தப் பந்திலேயே முகமது ஆமீர் பந்தில் வகாப் ரியாஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

படத்தின் காப்புரிமை Alan Martin

பட்லரின் விக்கெட் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

அதன்பின்னர் முகமது ஆமீர், வகாப் ரியாஸ் இணை முழுமையாக ஆட்டத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரத் துவங்கியது.

47-வது ஓவரில் ஆமீர் 15 ரன்கள் கொடுத்தார், வகாப் ரியாஸ் வீசிய 48-வது ஓவரில் கிறிஸ் வோக்ஸ் ஒரு சிக்ஸர் விளாசினார். இதையடுத்து ஆட்டத்தில் பரபரப்பு தொற்றியது. எனினும் மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ் என இருவரையும் அதே ஓவரில் பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் வகாப் ரியாஸ்.

முக்கியமான 49வது ஓவரில் முகமது ஆமீரில் நான்கு ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து ஜோஃப்ரா ஆர்ச்சரின் விக்கெட்டை வீழ்த்தினார். கடைசி ஓவரில் இங்கிலாந்து பத்து ரன்களை அடித்தபோதும் வெற்றி பெற முடியவில்லை.

உலகக் கோப்பையில் இந்த இலக்கைச் சேசிங் செய்வதன் மூலம் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து 14 ரன்களில் தோற்றது. முன்னதாக கடந்த 2011 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 339 ரன்கள் எனும் வெற்றி இலக்கை துரத்தி 338 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டத்தை 'டை' ஆக்கியிருந்தது இங்கிலாந்து அணி.

படத்தின் காப்புரிமை LINDSEY PARNABY

உலகக் கோப்பை வரலாற்றில் மிகப்பெரிய இலக்கை சேஸிங்கில் வென்றது அயர்லாந்துதான். 2011 உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 329 ரன்கள் எடுத்து வென்றது அயர்லாந்து.

அயர்லாந்தின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை தற்போது தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் கோட்டை விட்டுள்ளன.

இங்கிலாந்து அணியின் முன்னாள் அணித்தலைவர் மைக்கேல் வான் இங்கிலாந்து அணியின் மோசமான ஃபீல்டிங்குக்கு 30-40 ரன்கள் விலையாக கொடுக்கப்பட்டது என்றார்.

இங்கிலாந்து இதுவரை உலகக்கோப்பையை வென்றதே இல்லை.

முன்னதாக ரவுண்ட் ராபின் முறை கடைப்பிடிக்கப்பட்ட ஒரே உலகக் கோப்பையான 1992-ம் ஆண்டு நடந்த ஐசிசி தொடரில் இம்ரான் கான் தலைமையில் பாகிஸ்தான் அணி உலகக் கோப்பை வென்றது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்