உலகக்கோப்பை கிரிக்கெட்: என்ன நடக்கிறது இங்கிலாந்தில்? - பிபிசி செய்தியாளரின் நேரடி அனுபவம்

உலகக் கோப்பை கிரிக்கெட்: என்ன நடக்கிறது இங்கிலாந்தில்? - பிபிசி செய்தியாளரின் நேரடி அனுபவம் படத்தின் காப்புரிமை Getty Images

(பிபிசி தமிழ் சேவையை சேர்ந்த செய்தியாளர் சிவகுமார் உலகநாதன் உலகக் கோப்பை கிரிக்கெட் குறித்து செய்தி சேகரிக்க பிரிட்டன பயணித்திருக்கிறார். அங்கிருந்து நேரடியாக தகவல்களை வழங்குகிறார்)

பயணத்திற்கு முந்தைய நாள் தான் எனக்கு  விசா கிடைத்தது. உலகக்கோப்பை குறித்து செய்தி சேகரிக்க  நான் ஆர்வமாக உள்ளேன். என் ஆர்வத்திற்கு ஏற்றவாறு இந்தத் தொடரும் அமையுமென எதிர்பார்க்கிறேன். கிரிக்கெட்டும் வாழ்க்கையும் `ரோலர் கோஸ்டர்' போன்றது. நான் லண்டன் வந்ததிலிருந்து எதை பார்க்கிறேனோ அதை வர்ணிக்கிறேன்.

இம்முறை விருந்தல்ல

"இந்த முறை இங்கிலாந்து அணி நன்கு விளையாடுவதால், இது இங்கிலாந்தில் நடந்த முந்தைய ஐசிசி உலகக்கோப்பையை போல் இல்லாமல் மிகவும் பொழுதுபோக்கான தொடராக  இருக்கும். இந்த முறை நாங்கள் யாருக்கும் விருந்தளிக்க போவதில்லை. கோப்பையை எங்களிடையே வைத்துக்கொள்ள போகிறோம்" என்று வாகன ஓட்டுநர் அவருடைய கருத்தைத்  தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

தெருக்கள் எல்லா ஞாயிற்றுக்கிழமைகளை போலவும் அன்று பரபரப்பாக இல்லை. திங்கள் காலையன்று வேலைக்கு செல்பவர்களால் தெருக்கள் பரபரப்பாக இருந்தன. பதாகைகள் மற்றும் உலககோப்பையைப் பற்றிய விளம்பரங்கள் மைதானங்களைத் தவிர வேறெங்கும் இல்லை.

ஆனால் நிறைய ஆசியர்கள் கிரிக்கெட்டைப் பற்றியும் தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்கள் பற்றியும் பேசுவதை பார்க்க முடிந்தது. இது ஐரோப்பியர்கள் இங்கிலாந்துக்கு சென்று விளையாட்டைப் பார்க்க தூண்டுகோலாக இருக்கிறது.

பிரிட்டனின் கனா

"ஆமாம் . இந்த முறை ஐசிசி உலகக்கோப்பை எங்களுக்கு சிறப்பானதாக அமையும். எங்கள் அணி தற்போது நன்றாக விளையாடுகிறது. எங்கள் அணியின் பேட்டிங் எல்லா அணியையும் நிச்சயம் பாதிக்கச்செய்யும்" என ஒரு பிரிட்டிஷ் பயணி உள்ளூரில் பயணம் செய்யும்போது கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆங்கிலேயர்கள் இந்த தொடர் தங்களுக்கு சிறப்பாக இருக்கும் என நம்புகின்றனர். இங்கிலாந்து அணி 1992ல் இருந்து அரையிறுதி போட்டிக்குக் கூட சென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

"இந்த தொடரை எப்படி கொண்டாடுவீர்கள்" என கேட்டபோது, "நாங்கள் ஆசியர்கள் கொண்டாடுவதை போல் இதை கொண்டாடமாட்டோம். கால்பந்து என்றால் அது வேறு. ஆனால் கிரிக்கெட்டை பொறுத்தவரை நாங்கள் பார்ப்போம், ரசிப்போம் எங்கள் அணி வெற்றி பெற வேண்டும் என நினைப்போம்" என கூறினார் அந்த பயணி.

முதலில் இந்தியா ஆடட்டும்

"இந்தியா இன்னும் முதல் ஆட்டம் ஆட வேண்டும். அதன் பிறகு அனைவரும் எப்படி மாறுகிறார்கள் என பார்க்கலாம். இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான போட்டி மான்செஸ்ட்டரில் நடக்கிறது. அதுதான் இந்த தொடரின் சிறந்த ஆட்டமாக இருக்கும். யார் இந்த தொடரை வெல்லப்போகிறார் என்பது முக்கியமல்ல" என காஃபி ஷாப்பில் மிகவும் ஆவலுடன் தன்னுடைய கருத்தை தெரிவித்தார் தீபாளி.

"லண்டனில் சில தெருக்களில் இந்தியர்கள்தான் அதிகம் இருப்பார்கள். சௌதல் என்ற இடத்தை ஒரு சிறிய பஞ்சாப் என்று கூறலாம். தமிழர்களை டூடிங்கில் காணலாம். வேம்ப்லே மற்றும் மற்ற இடங்களில் குஜராத்திகள் இருப்பார்கள். ஆனால் கிரிக்கெட் இவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும். நமது மேட்ச்சின்போது நீங்களே தெரிந்து கொள்வீர்கள்" என்று தீபாளியின் தோழி கூறினார்.

இந்தியர்கள் வாழும் இடங்களில் இந்திய அணியின் வீரர்களின் பெயர்களை பொறித்த மேலாடை, காஃபி கோப்பை, கீ செயின் ஆகியவற்றை சகஜமாக பார்க்கலாம்.

இந்தியர்களே எச்சரிக்கையாக இருங்கள்

ஆனால், இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்கள் மட்டுமே  உற்சாகமாக இருப்பவர்கள்  அல்ல. வங்க தேசத்தினர் மற்றும் ஆஃப்கனிஸ்தானை சேர்ந்தவர்கள் தங்கள் நாட்டிற்கு  வேண்டிய ஆதரவை அளிப்பார்கள்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆக்ஸ்வார்ட் தெருவில் இருக்கும் ஓர் ஆஃப்கானிஸ்தான் கடைக்காரர், "உங்களுக்கு ரஷீத் கானை பிடிக்குமா" என்று கேட்டார். அதற்கு  ` "ஏனில்லை அவர் மிகவும் அற்புதமான பந்து வீச்சாளர். பல ஆஃப்கானிஸ்தான் மேட்சிலும் ஐபிஎல்லிலும் அவரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது" என்ற என்னுடைய பதில் அவருடைய முகத்தில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

"ஐரோப்பியர்கள் கிரிக்கெட் அதிகம் பார்க்க மாட்டார்கள். அவர்களுக்கு கால்பந்து மற்றும் டென்னிஸ்தான் பிடிக்கும். எப்போதும் எதிர்மறையான காரணங்களுக்கு உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் ஆஃப்கானிஸ்தான், கிரிக்கெட் மற்றும் ரஷீத் கான் போன்ற வீரர்களால்தான் நல்ல விஷயங்களுக்காக கவனம் பெறுகிறது" என்று கூறும் அவர் சிறு வயதிலேயே ஆப்கனிலிருந்து லண்டனுக்கு குடிபெயர்ந்திருக்கிறார்.

"இந்தியா மற்றும் பாகிஸ்தான் எச்சரிக்கையாக இருங்கள். நாங்கள் உங்கள் அளவுக்கு வந்து இந்த தொடரில் உங்களுக்கு அதிர்ச்சியை கொடுப்போம்" என்று செல்லமாக மிரட்டல் தொடுக்கிறார்.

பிரிட்டனில் இந்த கிரிக்கெட் தொடர் நிறைய நபர்களுக்கு இடையே மகிழ்ச்சியான முரணை ஏற்படுத்தியிருக்கிறது. ஆசியர்களின் அதிகமான கொண்டாட்டம் ஆங்கிலேயர்களை மலைக்க செய்துள்ளது. இவை அனைத்தையும் கடந்து இந்த தொடரில் தங்களது ஆட்டம் எல்லோரையும் திகைக்க வைக்கும் என  ஆங்கிலேயர்கள் கூறுகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்