உலகக்கோப்பை கிரிக்கெட் 2019 - ஆப்கானிஸ்தான் அணி இலங்கையிடம் தோல்வியடைந்தது எப்படி?

மலிங்கா படத்தின் காப்புரிமை Getty Images

உலகக் கோப்பை தொடரில் நேற்று இலங்கை ஆப்கானிஸ்தான் இடையேயான போட்டியில் இலங்கை வெற்றி பெற்றது.

போட்டி குறித்து சுருக்கமான விவரம்

ஐசிசி ஆண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட், கார்டிஃப்

இலங்கை 201 (36.5 ஓவர்கள்) குஷால் பெரேரா 78, நபி 4-30

ஆப்கானிஸ்தான் 152 (32.4ஓவர்கள்) நஜிபுல்லா 43, பிரதீப் 4-31

போட்டி முடிவு - இலங்கை 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

குறைந்த ரன்களே அடிக்கப்பட்ட ஒரு திரில்லர் நிறைந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெறுவதை தடுத்துள்ளது இலங்கை அணி.

202 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்கைத் துரத்திய ஆப்கானிஸ்தான் அணி 57-5 என தடுமாறியது. ஆனால் அதன்பிறகு ஆப்கானிஸ்தான் கேப்டன் குல்பதின் நயிப் மற்றும் நஜிபுல்லா ஜர்தான் இணை 64 ரன்கள் சேர்த்தால் ஆட்டத்தில் பரபரப்புத் தொற்றியது

நுவான் பிரதீப் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி, நஜிபுல்லாவை 43 ரன்களில் திமுத் கருணாரத்னே அவுட்டாக்க, ஒன்பது விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் வெற்றிக்கு 42 ரன்கள் தேவைப்பட்டது.

ஆனால் மலிங்காவின் யார்க்கருக்கு ஹமித் ஹசன் விக்கெட்டை பறிகொடுத்தார். இலங்கை அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

கடைசியாக விளையாடிய 10 ஒருநாள் போட்டிகளில் ஸ்காட்லாந்து அணியுடனான ஒரு போட்டியைத் தவிர இலங்கை தொடர்ந்து தோல்வியடைந்து வந்தது. இந்நிலையில் உலகக் கோப்பையில் தனது வெற்றிக்கணக்கை துவக்கியுள்ளது இலங்கை அணி.

படத்தின் காப்புரிமை Getty Images

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இலங்கையின் தொடக்க வீரர்கள் திமுத் கருணாரத்னே மற்றும் விக்கெட் கீப்பர் குஷால் பெரேரா இணை வெளுத்துக் கட்டினர்.

முதல் விக்கெட்டுக்கு இந்த இணை 13.1 ஓவரில் 92 ரன்கள் எடுத்தது.

ஒரு கட்டத்தில் 21.2 ஓவர்களில் 144/2 என இருந்தது இலங்கை அணியின் ஸ்கோர். குறைந்தது 300 ரன்களை இலங்கை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆட்டத்தில் 22வது ஓவரில் ஆட்டத்தையே தலைகீழாக மாற்றிக்காட்டினார் ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர் முகமது நபி.

நபியின் அந்த ஓவரில் குஷால் மெண்டிஸ், மேத்யூஸ், தனஞ்சய டி சில்வா வரிசையாக பெவிலியன் திரும்பினர். ஒரே ஓவரில் இலங்கை அணியின் ஸ்கோர் 149/5 என்றானது.

படத்தின் காப்புரிமை Getty Images

அதன் பின்னர் இலங்கை அணி மீளவே இல்லை வரிசையாக விக்கெட்டுகள் விழுந்தன. மழை காரணமாக பின்னர் ஆட்டம் 41 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது. ஆனால் இலங்கை அணி 37-வது ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு 201 ரன்களை இலக்கு வைத்தது இலங்கை. அந்த அணி சார்பில் குஷால் பெரேரா 81 பந்துகளில் 8 பௌண்டரிகளோடு 78 ரன்கள் விளாசினார். அதற்கடுத்தபடியாக திமுத் 30 ரன்களை எடுத்திருந்தார்.

ஆனால் இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி உதிரியாக விட்டுக்கொடுத்தது மட்டும் 35 ரன்கள்.

குறைந்த ஸ்கோர் கொண்ட போட்டி என்றாலும் அதிகளவு ரன்களை உதிரியாக கொடுத்தது ஆப்கானிஸ்தான் அணிக்கு சிக்கலாக அமைந்தது.

இலங்கை அணி பந்துவீச்சில் ஆரம்பத்தில் இருந்தே இறுக்கிப் பிடித்தது. இதனால் ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள் ரன்கள் சேர்ப்பதைவிட விக்கெட்டை காப்பாற்றிக் கொள்வதில் திணறினர்.

நஜிபுல்லா மட்டுமே 43 ரன்கள் எடுத்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

நுவான் பிரதீப் நான்கு விக்கெட்டுகளையும் லசித் மலிங்கா மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றி வெற்றிக்கு வழிவகுத்தார்கள்.

நுவான் பிரதீப்புக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் ரவுண்ட் ராபின் சுற்று புள்ளிப்பட்டியலில் ஆறாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது இலங்கை அணி.

ஆப்கானிஸ்தான் அணி இரு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் தோற்ற நிலையில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்க அணி ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகியவை முதல் நான்கு இடங்களில் நீடிக்கின்றன.

இந்தியா இன்று தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது.

நியூசிலாந்து இன்று வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :