உலகக்கோப்பை 2019 - வங்கதேசம் நியூசிலாந்திடம் போராடி தோல்வி

NZvBAN படத்தின் காப்புரிமை ADRIAN DENNIS

உலகக்கோப்பை தொடரில் நேற்று வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து இடையேயான போட்டியில் கடுமையான போராட்டத்துக்கு பின்னர் நியூசிலாந்து வென்றது.

போட்டி குறித்து சுருக்கமான விவரம்

ஐசிசி ஆண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட், தி ஓவல்

வங்கதேசம் 244 (49.2 ஓவர்கள்) ஷகிப் 64, ஹென்ரி 4 -47

நியூசிலாந்து 248-8 (47.1 ஓவர்கள்) ராஸ் டெய்லர் 82

போட்டி முடிவு - நியூசிலாந்து இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.

உலகக்கோப்பையில் இரண்டாவது வெற்றி பெறுவதில் வங்கதேசமும் நியூசிலாந்தும் நேற்று கடுமையாக போராடின. இறுதியில் வங்கதேசத்தை வீழ்த்தி புள்ளிபட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது நியூசிலாந்து.

245 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் ஆட்டத்தை துவங்கிய நியூசிலாந்துக்கு ஆறாவது ஓவரிலேயே முதல் விக்கெட் விழுந்தது. மார்ட்டின் கப்டில் 14 பந்துகளில் 25 ரன்கள் விளாசிய நிலையில் சுழற்பந்து வீச்சாளர் ஷகிப் பந்தில் அவுட் ஆனார்.

வங்கதேச சுழற்பந்து வீச்சாளர்கள் நேற்று ஓவல் பிட்சை சிறப்பாக பயன்படுத்தினர். நியூசிலாந்தின் மற்றொரு அதிரடி ஆட்டக்காரர் காலின் முன்றொவையும் ஷகிப் 10-வது ஓவரில் வெளியேற்றினார்.

நியூசிலாந்து அணியின் அணித்தலைவர் கேன் வில்லியம்சனை 8 ரன்களில் அவுட்டாக்கும் வாய்ப்பு வங்கதேசத்துக்கு கிடைத்திருந்தது. வங்கதேச அணியின் விக்கெட் கீப்பர் முஷ்ஃபிகுர் ரன் அவுட் செய்யும் வாய்ப்பை தவறவிட்டார். அவர் பந்தை பிடிப்பதற்கு முன்னரே ஸ்டம்பை தகர்த்தார். இதனால் தப்பிப்பிழைத்த கேன், மூன்றாவது விக்கெட்டுக்கு ராஸ் டெய்லருடன் இணைந்து நிதானமாக விளையாடி ரன்களைச் சேர்த்தார்.

படத்தின் காப்புரிமை Lee Parker

32-வது ஓவரில் நியூசிலாந்து அணி 160 ரன்கள் எடுத்திருந்தபோது மெஹெந்தி ஹாசன் பந்துவீச்சில் கேன் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதே ஓவரில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் டாம் லாதம் விக்கெட்டையும் சாய்த்தார் ஹாசன்.

இதனால் ஆட்டத்தில் சிறிது பரபரப்புத் தொற்றியது. 39-வது ஓவரில் 82 ரன்கள் விளாசிய ராஸ் டெய்லரும் அவுட் ஆனார்.

பிரதான பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஆட்டமிழந்த நிலையில் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 57 ரன்கள் தேவைப்பட்டது.

ஜேம்ஸ் நீஷமும், கோலின் டி கிரந்தோமும் இணைந்து விக்கெட் 27 ரன்கள் சேர்த்தனர். ஆனால் ஆட்டத்தின் 43 மற்றும் 44-வது ஓவர்களில் நான்கு பந்துகள் இடைவெளியில் இவ்விருவரும் ஆட்டமிழந்தனர்.

இதனால் வங்கதேசத்தின் வெற்றி வாய்ப்பு நேரம் செல்லச்செல்ல அதிகரித்துக் கொண்டே இருந்தது.

மிட்சேல் சான்ட்னர் மற்றும் மேட் ஹென்றி இணைந்து 20 ரன்கள் சேர்த்தனர்.

46-வது ஓவர் முடிவில் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. இரண்டு விக்கெட்டுகள் கைவசம் இருந்தன.

47-வது ஓவரை வங்கதேச பௌலர் சைஃபுத்தீன் வீசினார். முதல் பந்தில் சான்ட்னர் ஒரு நல்ல லெந்த் பந்தை விளாசி இரண்டு ரன்கள் எடுத்தார். அடுத்த பந்து ஷாட்டாகவும் தமது உடலை நோக்கியும் வந்ததை உணர்ந்த சான்ட்னர் ஃபைன் லெக் திசையில் தட்டிவிட்டு ஒரு ரன் எடுத்தார். அப்போது நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு ஏழு ரன்கள் தேவை.

படத்தின் காப்புரிமை David Rogers

மூன்றாவது பந்தை ஃபுல் டாஸாக வீசினார் சைஃபுத்தீன். மேட் ஹென்றி மட்டையை சுழற்ற பந்து சிக்காமல் ஸ்டம்பை பதம் பார்த்தது. வங்கதேச ரசிகர்கள் நிமிர்ந்து உட்கார்ந்தனர்.

அந்த ஓவரில் அடுத்த இரண்டு பந்துகளில் ஃபெர்குசன் சந்தித்தார் ஆனால் ரன்கள் எதுவும் எடுக்கவில்லை. 47-வது ஓவரின் இறுதி பந்தை தொடர்ச்சியாக இரண்டு முறை வைடாக வீசினார் சைஃபுத்தீன். மூன்றாவது முறையாக அந்த ஓவரின் இறுதிப் பந்தை வீசியபோது ஃபெர்குசன் பேட்டில் பட்டு பந்து எட்ஜ் ஆகி, பௌண்டரியை நோக்கி விரைந்தது.

47-வது ஓவரின் முடிவில் ஸ்கோர் சமநிலைக்கு வந்தது. 48-வது ஓவரை முஸ்தாபிசுர் வீச சான்ட்னர் முதல் பந்தையே பௌண்டரிக்கு விளாசி அணியை வெற்றிபெறச் செய்தார்.

முன்னதாக பிளாக் கேப்ஸ் என அழைக்கப்படும் நியூசிலாந்து அணியின் சிறப்பாக பந்துவீசினர். மேட் ஹென்றி நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். சீரான இடைவெளிகளில் வங்கதேச வீரர்கள் பெவிலியன் திரும்பினர். இருப்பினும் ஷகிப் அல் ஹசன் மட்டும் தாக்குப் பிடித்து 64 ரன்கள் எடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்குச் சென்றுள்ளது. இதுவரை இரண்டு போட்டிகளில் வென்ற ஒரே அணி நியூசிலாந்து மட்டுமே.

அந்த அணி அடுத்தபடியாக சனிக்கிழமையன்று டான்டனில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. அதே வேலை வங்கதேசம் இங்கிலாந்தை கார்டிஃபில் எதிர்கொள்கிறது.

வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தத் தவறிய வங்கதேசம்

நியூசிலாந்து அணி தொடர்ச்சியாக அடுத்தடுத்து இரு விக்கெட்டுகளை இழந்தது. ஆனால் இந்த ஆட்டத்தில் வங்கதேசம் சில தவறுகளை செய்தது.

ஷகிப்பின் முதல் ஸ்பெல்லில் நியூசிலாந்தின் தொடக்க வீரர்கள் இருவரும் வெளியேறினர். ஆனால் வில்லியம்சனை எளிதில் அவுட் ஆக்கும் வாய்ப்பை தவறவிட்டது.

படத்தின் காப்புரிமை ADRIAN DENNIS

மேலும் ஃபீல்டிங்கில் துடிப்புடன் செயல்படாததால் கேட்ச் வாய்ப்புகளை வீணடித்தது. கிரந்தோம் - நீஷம் இணையை ரன் அவுட் செய்யும் வாய்ப்பு வங்கதேசத்துக்கு கிடைத்தது. ஆனால் தப்பிப் பிழைத்தது அந்த இணை.

சைஃபுத்தீன் ஹென்றி விக்கெட்டை எடுத்தாலும் அடுத்தடுத்து வைடு வீசினார்.

விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் ஒவ்வொரு பந்திலும் நெருக்கடி கொடுக்கத் தவறியது வங்கதேசம்.

தொடர்ந்து அசத்தும் நியூசிலாந்து பௌலர்கள்

நியூசிலாந்து அணி தொடக்க போட்டியில் இலங்கையை குறைந்த ரன்களில் சுருட்டியது. இம்முறை பேட்டிங்குக்கு சாதகமான ஒரு பிட்சில் வங்கதேச பேட்ஸ்மேன்களுக்கு தொடர் நெருக்கடி தந்தது.

20- 30 ஓவர்களுக்கு இடையே 69 ரன்களை குவித்தது வங்கதேசம் ஆனால் 30-40 ஓவர்களுக்கு இடையே 37 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

படத்தின் காப்புரிமை Christopher Lee-IDI

குறைவான வேகத்தில் பந்து வீசும் சுழற்பந்துவீச்சாளர் சான்ட்னர் நியூசிலாந்து அணியின் துருப்புச் சீட்டாக இருந்தார். 10 ஓவர்களில் 41 ரன்கள் மட்டுமே கொடுத்தார் மேலும் அபாயகரமான மஹமதுல்லா விக்கெட்டையும் வீழ்த்தினார்.

முதல் போட்டியில் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்திய ஹென்றி இம்முறையும் விக்கெட் வேட்டையை தொடர்ந்தார். தற்போது வரை ஏழு விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார் ஹென்றி.

ஃபெர்குசன் ஷார்ட் பால் மற்றும் யார்க்களை முறையாக பயன்படுத்தினார். டிரென்ட் போல்ட் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். நியூசிலாந்து அணி ஃபீலடிங்கிலும் சிறப்பாக செயல்பட்டது.

அந்த அணியின் பிரதான பௌலர் டிம் சவுத்தீ காயத்திலிருந்து மீண்டு வரும் பட்சத்தில் பிளாக் கேப்ஸுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்யும் அணிகள் மிகப்பெரிய இலக்கை நோக்கி பயணிப்பது அவ்வளவு எளிதாக இருந்துவிடாது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்