உலகக்கோப்பை கிரிக்கெட் 2019: செளதாம்ப்டன் மைதானத்தில் கொண்டாட்டத்திலும் வென்றது இந்தியா

ஆண்கள் கிரிக்கெட் உலக்கோப்பை தொடரில் தான் விளையாடிய முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது இந்திய அணி.

படத்தின் காப்புரிமை Getty Images

முக்கியச் சாலையில் இருந்து மைதானத்தின் வெஸ்ட் கேட் நுழைவாயிலை அடைய கிரிக்கெட் ரசிகர்கள் நீண்ட தூரம் நடக்க வேண்டியிருந்தது. போட்டி நடந்த ஹேம்ப்ஷையர் மைதானம் இங்கிலாந்தில் உள்ள பிற கிரிக்கெட் மைதானங்களில் இருந்து வேறுபட்டது.

பிற மைதானங்களைப் போல இந்த மைதானத்துக்கு போக்குவரத்து வசதி ஒன்றும் அவ்வளவாக இல்லை. சௌதாம்ப்டன் நகரின் மையத்தில் இருந்து இங்கு வர 20 கிலோமீட்டர் பயணிக்க வேண்டும்.

ரசிகர்கள் அதகளம்

டேக்சி, கடைகள் அல்லது அதிக எண்ணிக்கையிலான உணவகங்களை இந்த மைதானத்தின் அருகில் பார்க்க முடியாது.

பெரும்பாலும் தங்கள் சொந்த வாகனத்திலேயே ரசிகர்கள் இங்கு வருகிறார்கள். ரயில் மூலம் இணைக்கப்படாத இந்தப் பகுதிக்கு வரும் பேருந்துகளின் எண்ணிக்கையும் சொற்பம்.

இவையாவும் கிரிக்கெட் ரசிகர்களை தடுக்கவில்லை.

படத்தின் காப்புரிமை Getty Images

"லண்டனில் இருந்து சௌதாம்ப்டன் நகருக்கு ரயில் மூலம் காலை எட்டு மணிக்கு நான் வந்தேன். உடனடியாக டேக்சி கிடைக்கவில்லை. டாஸ் போடும் நிகழ்வை என்னால் பார்க்க முடியாதோ என்று சற்று பயந்தேன்," என்கிறார் லண்டனில் இருந்து வந்திருந்த இந்திய ரசிகர் வினீத் சக்சேனா.

சௌதாம்ப்டன் நகரில் தங்குபவர்களும் மைதானத்தின் அருகே விடுதிகள் இல்லாததால் நகரின் மையத்திலேயே தங்க வேண்டும். 10.30 மணிக்குத் தொடங்கும் போட்டிக்கு 7.30 மணிக்கே மைதானத்தில் கூடத் தொடங்கிவிட்டார்கள் ரசிகர்கள்.

"நாங்கள் சிங்கப்பூரில் இருந்து வந்துள்ளோம். முதல் பந்தில் இருந்தே எதையும் பார்க்காமல் எங்களால் தவறவிட இயலாது. கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எனக்குத் தெரியும். எனவே லண்டனில் இருந்து கிளம்பும் முதல் ரயிலில் கிளம்பி வந்துவிட்டோம், " என்கிறார் தனது குடும்பத்துடன் வந்திருந்த விவேக்.

இசை

இவரைப் போலவே, டாஸ் போடும் தருணம் முதலே போட்டியைக் காண வேண்டும் என ஏராளமான ரசிகர்கள் மைதானத்தில் இருக்க வேண்டும் என்றும் தங்கள் ஆதர்ச வீரர்களை முன்னரே காண வேண்டும் என்றும் வந்திருந்தனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

"என் மேலாளர் எனக்கு விடுப்பு கொடுக்கவில்லை. நான் பொய் காரணம் சொல்லிவிட்டு வந்துள்ளேன். இது தவறு என்று தெரியும். ஆனால் எல்லாம் 'தல' தோணிக்காகத்தான்," என்கிறார் தனது பெயரை வெளியிடவோ, தம்மைப் புகைப்படம் எடுக்கவோ அனுமதிக்காத ரசிகர் ஒருவர்.

டோனி மற்றொரு தொடரை ஆடாமல் போகலாம், எனக்கு இது மிகுந்த உணர்ச்சி மிகுந்த தருணம் என்கிறார் அவர்.

பாதுகாப்பு பணியில் இருப்பவர்கள், இந்தியா பாகிஸ்தான் அணி விளையாடினால் அதிகமான கூட்டம் வரும் என்கிறார்கள். அப்போது இசை கொண்டாட்டங்களுக்கு குறைவிருக்காது.

"எனக்கு ஸ்டேடியத்திற்குள் எந்த அணி விளையாடுகிறதென தெரியாது. ஆனால், இசையை வைத்தே சொல்லிவிடுவேன்... ஏதோவொரு ஆசிய நாடுதான் விளையாடுகிறதென்று" என்கிறார்.    

டாஸில் வென்றிருக்கலாம்

தென் ஆப்ரிக்கா அணி டாஸில் வென்றிருக்கலாம், ஆனால் ஆட்டம் தொடங்கியதிலிருந்து கொண்டாட்டங்களில் வென்றது இந்தியாதான்.

அந்த அளவுக்கு இந்தியர்கள் மைதானத்தில் குழுமி இருந்தார்கள். எந்த அளவுக்கென்றால் 9:1 என்ற அளவில் திரும்பிய பக்கம் எல்லாம் இந்தியப் பார்வையாளர்களின் ஆரவாரம், கொண்டாட்டம்.

"நாங்கள் குஜராத் ஆர்மி. ஜடேஜா விளையாடவில்லை என்று தெரிந்ததும் எனக்கு ஏமாற்றமாகி போய்விட்டது. ஆனால், பும்ரா எங்கள் நாளை சிறப்பாக மாற்றினார். ரோஹித்தும், சாகலும் அதகளப்படுத்திவிட்டார்கள்." என்கிறார்கள் அமெரிக்காவிலிருந்து வந்திருந்த தீபக்கும் அவரது நண்பர்களும்.

நல் தொடக்கமா?

இந்தியா முதல் போட்டியில் வென்று இருக்கிறது. இது உண்மையில் அனைத்து ரசிகர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கிறதா என்றால், அது கேள்விக்குறிதான்.

விஜயவாடாவை பூர்வீகமாக கொண்ட வருண் லண்டன் புற நகரில் கடை நடத்தி வருகிறார்.

இந்த போட்டி குறித்த அவரது கருத்து வேறுமாதிரியாக இருக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

அவர், "முதல் வெற்றி மகிழ்ச்சிதான். ஆனால், இது சிறப்பான வெற்றி என்று கூற முடியாது. தென் ஆப்பிரிக்கா முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்தது. அந்த அணியின் சிறப்பான இரண்டு பந்து வீச்சாளர்கள் இந்த போட்டியில் இல்லை. அந்த தொய்வுதான் இந்தப் போட்டியில் எதிரொலித்து இருக்கிறது. அவர்கள் ஒரு வேளை சிறப்பாக ரன் எடுத்திருந்தால், இந்தியாவுக்கு அது பெரும் சுமையாக அமைந்திருக்கும்" என்கிறார்.

தவான், கோலியின் மோசமான விளையாட்டு பல ரசிகர்களை கவலை அடைய செய்துள்ளது.

நல்ல உணவு, மோசமான இணையம்

வெற்றி காற்று இந்தியா பக்கம் வீசுகிறது என்று தெரிந்த உடனே, மைதானத்தில் உள்ள உணவகங்களில் நல்ல கூட்டம் கூட தொடங்கியத்து.

இரண்டு மூன்று உணவகங்களில் பன்னீர் பட்டர் மசாலா, ஆலு டிக்கா போன்ற இந்திய உணவுகள் விற்கப்பட்டன.

"ரைத்தா, புலாவ் என்று மைதான உணவகங்களில் விற்கப்படும் உணவு மோசமில்லை" என்று நடுத்தர வயது பெண் சொல்ல, அவரது மகன் மெல்லமாக, "அம்மா... கிரிக்கெட் பற்றி பேசுங்கள்" என்றார்.

உணவு சிறப்பு என்றாலும், இணைய வசதி மோசமாக இருந்ததாக கூறுகிறார்கள்.

திருவனந்தபுரத்தில் உள்ள என் சகோதரனுடன் ஸ்கைப்பில் பேச முயன்றேன். ஆனால் இன்டர்நெட் சதி செய்து விட்டது என்றார் ஆனந்த் எனும் ரசிகர்.

ரசிகர்கள் மட்டுமல்ல பத்திரிகையாளர்களும் மோசமான இணைய வசதியால் சிரமப்பட்டார்கள்.

இறுதியில் வென்றது கிரிக்கெட்

கிரிக்கெட்டை கொண்டாட உலகின் பல பகுதியிலிருந்து ரசிகர்கள் லண்டனில் கூடி இருக்கிறார்கள்.

என்னிடம் பேசிய பல ரசிகர்கள் ஐரோப்பா, இந்தியா, அமெரிக்கா என பல நாடுகளிலிருந்து வந்தவர்கள். அவர்கள் அனைவரையும் இணைப்பது எது? கிரிக்கெட்தான்... கிரிக்கெட் மட்டும்தான்.

"நாங்கள் மொழியால், இனத்தால், உணவுப் பழக்கத்தால் வேறுபட்டவர்கள். ஆனால், எங்களை இணைப்பது கிரிக்கெட் எனும் மதம்தான். இறுதியில் வென்றது கிரிக்கெட்தான்" என்கிறார் விஷால்.

"உங்களாலேயே உணர முடியும். மைதானமே ஒரு குட்டி இந்தியாவாக உள்ளது. ஒரே இடத்தில் இந்தியாவின் பல்வேறு இன மக்கள் இங்கே கூடி இருக்கிறார்கள். ஏன் இது போல எல்லா சமயங்களிலும் இனத்தை கடந்து கரம் கோர்த்து நிற்க முடியவில்லை?" என்று கேட்கிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :