கிரிக்கெட் விதிமுறைகளை திருத்த வைத்த சர்ச்சைக்குரிய அலுமினியம் பேட்

தனது சிலையோடு டென்னிஸ் லில்லி படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தனது சிலையோடு டென்னிஸ் லில்லி

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னால், 1975ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி ஆஷ்சஸ் கிரிக்கெட் தொடர் போட்டி ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் பெர்த்திலுள்ள டபிள்யூஏசிஏ மைதானத்தில் நடைபெற்றது.

ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் எடுத்திருந்தபோது, இயன் போத்தாம் வீசிய பந்தை டென்னிஸ் லில்லி ஓங்கி அடித்தபோது, பலத்த சப்தம் உருவாகி, பந்து உருண்டோடியது. மூன்று ரன்கள் கிடைத்தன.

ஆனால், இந்த அலுமினிய பேட் கிரிக்கெட் வரலாற்றில் பெரும் சர்ச்சையாகி, கிரிக்கெட் விதிமுறைகளில் புதிய விதிகளை சேர்க்க காரணமாக அமைந்துவிட்டது.

இந்த பிரச்சனையின் சிறப்பு என்ன? ஏன் இது சர்ச்சையானது?

இந்த போட்டியில் டென்னிஸ் லில்லி பயன்படுத்திய பேட், எல்லாரும் பயன்படுத்தியது போல மரத்தால் செய்யப்பட்டதல்ல. அதனால் பந்தை அடித்தவுடன் பலத்த சப்தம் எழுந்தது.

இந்த போட்டி நடைபெற்ற 12 நாட்களுக்கு முன்னர், டென்னிஸ் லில்லி இதே பேட்டை மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக விளையாடியபோது பயன்படுத்தியிருந்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption டென்னிஸ் லில்லியால் பயன்படுத்தப்பட்ட அலுமினியம் பேட்

நடுவர்கள் எதிர்ப்பு

மேற்கிந்திய தீவுகள் அணியோடு விளையாடியபோது, டென்னிஸ் லில்லி அலுமினிய பேட் பயன்படுத்தியதை யாரும் எதிர்க்கவில்லை.

ஆனால், இங்கிலாந்தோடு விளையாடியபோது, அந்நாட்டு கிரிக்கெட் அணியின் தலைவர் மைக் பிரேர்லி எதிர்ப்பு தெரிவித்தார்.

அலுமினிய பேட்டை பயன்படுத்தினால், பந்தின் வடிவம் பாதிப்படையும் என்று அவர் புகார் தெரிவித்தார்.

இதன் காரணமாக, நடுவர்கள் மேக்ஸ் ஓ'கனெல் மற்றும் டான் வெஸர் இருவரும், டென்னிஸ் லில்லி அலுமினிய பேட்டை பயன்படுத்தக்கூடாது என்று தெரிவித்துவிட்டனர்.

கிரிக்கெட் விளையாட்டில் அலுமினிய பேட் பயன்படுத்தக்கூடாது, மரத்தால் செய்யப்பட்ட பேட்தான் பயன்படுத்த வேண்டுமென எந்த விதிமுறையிலும் குறிப்பிடப்படவில்லை என்று வாதிட்ட டென்னிஸ் லில்லி, கோபத்தில் அலுமினிய பேட்டை வீசி எறிந்தார்.

இறுதியில், ஆஸ்திரேலிய கிரிகெட் அணியின் தலைவர் கிரெக் சாப்பல் மைதானத்திற்குள் வந்து, மரத்தால் செய்யப்பட்ட பேட் கொண்டு விளையாட டென்னிஸ் லில்லியை சம்மதிக்க வைத்தார்.

மரத்தால் செய்யப்பட்ட பேட் கொண்டு விளையாட்டை தொடர்ந்த டென்னிஸ் லில்லி, மேலும் 3 ரன்கள் சேர்த்துவிட்டு அவுட் ஆனார்.

படத்தின் காப்புரிமை Getty Images

அலுமினிய பேட் எங்கிருந்து வந்தது?

முன்னதாக, பேஸ் பால் விளையாட்டிலும் மரத்தால் செய்யப்பட்ட பேட்தான் பயன்படுத்தப்பட்டது. ஆனால் பின்னர், மரத்தால் செய்யப்பட்ட பேட்டுக்கு பதிலான அலுமினிய பேட் பயன்படுத்தப்பட்டது.

இதனால் தூண்டப்பட்ட கிரிக்கெட் கிளப் விளையாட்டு வீரர் கிரெயே மோனாகான் அலுமினியத்தால் செய்யப்பட்ட பேட்டை உருவாக்கினார்.

இந்த கிரிக்கெட் கிளப்பில், கிரெயே மோனாகானும், டென்னிஸ் லில்லியும் நண்பர்கள், வர்த்தகத்தில் அவர்கள் கூட்டாளிகளும் கூட.

இதனால், அலுமினிய பேட் கொண்டு டென்னிஸ் லில்லி முதலில் விளையாடினார். ஆனால், நடுவர்கள் அதற்கு தடை விதித்து விட்டனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 1981ம் ஆண்டு இங்கிலாந்துக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையே நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இயன் போத்தாமின் விக்கெட்டை வீழ்த்தும் டென்னிஸ் லில்லி.

பேட் பற்றிய விதிமுறைகள் மாற்றம்

இந்த அலுமினிய பேட் சர்ச்சைக்கு பின்னர், ஆஸ்திரேலியாவில் அலுமினிய பேட்களின் விற்பனை சூடுபிடித்தது.

ஆனால், இந்த சம்வம் நடைபெற்று சில நாட்களுக்கு பின்னர், கிரிக்கெட் விளையாட்டின் விதிமுறையில் பல புதிய விதிகள் சேர்க்கப்பட்டன. மரத்தால் செய்யப்பட்ட பேட்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.

இந்த சர்ச்சை ஏற்படுவதற்கு முன்னால், பேட் பயன்படுத்துவது பற்றிய எந்தவித விதிகளும் இருக்கவில்லை. புதிய விதிகள் சேர்க்கப்பட்டவுடன், அனுமினிய பேட் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. ஆனால், இந்த சம்பவம், கிரிக்கெட் விளையாட்டு வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வாகிபோனது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அலுமினியம் பேட்டோடு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டென்னிஸ் லில்லி. 1979ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம்.

கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியை மிரட்டிய டென்னிஸ் லில்லி

இந்த அலுமினிய பேட் சர்ச்சையில் சிக்கிய டென்னிஸ் லில்லி, அந்த போட்டியில் பந்து வீசி அசத்தினார். 4 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசையை நிலைகுலைய செய்தார்.

அந்த போட்டி தொடரில் 3:0 என்ற புள்ளிக்கணக்கில் இங்கிலாந்து ஒரு போட்டியில்கூட வெல்லாமல் ஆஸ்திரேலியா வெற்றி கண்டது.

கிரிக்கெட் அறிவிப்புகளில் இந்த தொடர் அலுமினிய பேட் சர்ச்சை தொடர் என்று குறிப்பிடப்பட்டது.

"அதுவொரு சந்தைப்படுத்தும் வித்தை"

"மெனேஸ்" என்கிற தனது சுயசரிதையில் டென்னிஸ் லில்லி இந்த அலுமினிய பேட் சர்ச்சை பற்றி குறிப்பிட்டுள்ளார்.

"எமது பேட்களை சந்தைப்படுத்துவதற்கு நான் காட்டிய வித்தை அது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் இயன் போத்தம் அலுமினிய பேட் சர்ச்சை பற்றி தான் எழுதிய புத்தகத்தில் ("Botham's Book of the Ashes - A life Time Love Affair with Cricket's Greatest Rivalry") குறிப்பிட்டுள்ளார்.

"லில்லி, சிறந்த பந்துவீச்சு வீரர்களில் ஒருவர். ஆனால், பேட்டிங் செய்பவராக அவர் தொடர்ந்து சரியாக விளையாடவில்லை. அலுமினியத்தால் செய்யப்பட்ட பேட்டை பயன்படுத்தி கூடுதல் ஆதாயம் அடைய அவர் விரும்பினார்" என்று இயன் போத்தம் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :