உலகக்கோப்பை 2019 - ஆஸ்திரேலியா வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது எப்படி?

ஆஸ்திரேலியா படத்தின் காப்புரிமை Gareth Copley-IDI

உலகக்கோப்பை தொடரில் மீண்டும் ஒரு த்ரில்லர் போட்டி நடந்து முடிந்துள்ளது - வெற்றி வாகை சுடுவதில் மாறி மாறி முன்னிலையில் இருந்தன ஆஸ்திரேலியாவும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளும். ஆனால் இறுதியில் தான் ஏன் 'ஐந்து முறை சாம்பியன்' என்பதை நிரூபித்தது ஆஸ்திரேலியா. புள்ளிப்பட்டியலிலும் இரண்டாமிடத்துக்கு முன்னேறியது.

போட்டி குறித்து சுருக்கமான விவரம்

ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக்கோப்பை, டிரென்ட் பிரிட்ஜ்

ஆஸ்திரேலியா 288(49 ஓவர்கள்) - கோல்டர் நைல் 92, ஸ்மித் 73,

வெஸ்ட் இண்டீஸ் 273-9(50 ஓவர்கள்) - ஹோப் 68, ஸ்டார்க் 5-46

போட்டி முடிவு - 15 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி

கடைசி ஓவரில் வெற்றிக்குத் தேவை 32 ரன்கள், கோல்டர் நைலின் கடைசி நான்கு பந்தையும் பௌண்டரிக்கு விளாசினார் வெஸ்ட் இண்டீஸ் அணியின் நர்ஸ். இறுதியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஆரோன் பின்ச் அணி.

கடைசி ஓவரில் அதிரடி காட்டிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அதற்கு முந்தைய நான்கு ஓவர்களில் ஒட்டுமொத்தமாக நான்கு ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

30 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தால் வெற்றி. கைவசம் ஆறு விக்கெட்டுகள் இருக்கின்றன. களத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அணித்தலைவர் ஜேசன் ஹோல்டர் இருக்கிறார். மறுமுனையில் கார்லோஸ் பிராத்வெய்ட் இருக்கிறார்.

2016-ம் ஆண்டு உலகக் கோப்பை டி20 தொடரின் இறுதியாட்டத்தில் கடைசி ஓவரில் 24 ரன்கள் தேவை என்ற இமாலய இலக்கை துரத்திய கார்லோஸ், இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் ஓவரில் தொடர்ச்சியாக நான்கு சிக்ஸர்கள் அடித்து ரசிகர்கள் எளிதில் நம்புவதற்கு கடினமான ஓர் ஆட்டத்தை விளையாடி அவரது அணிக்கு உலகக் கோப்பையை பெற்றிருந்தார்.

நான்கு சிக்ஸர் நாயகன் கார்லோஸ் மற்றும் துடிப்பான இளம் வீரரான கார்லோஸும் வலுவான ஆஸ்திரேலியாவை வெல்லக்கூடும் என்ற வாய்ப்பு இருந்தது.

ஆனால் 46-வது ஓவரில் தனது துருப்புச் சீட்டை களமிறங்கினார் ஆரோன் பின்ச்.

மிச்செல் ஸ்டார்க் வீசிய அந்த ஓவரில் பிராத்வெய்ட் மற்றும் ஜேசன் ஹோல்டர் இருவரும் பெவிலியன் திரும்பினார். நான்கு பந்துகளுக்குள் இரண்டு பிரதான பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கி ஆட்டத்தை ஆஸ்திரேலியாவின் பக்கம் திருப்பினார் ஸ்டார்க்.

படத்தின் காப்புரிமை David Rogers
Image caption மிச்செல் ஸ்டார்க்

46-வது ஓவரில் ஒரு ரன் மட்டும் எடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்தது வெஸ்ட் இண்டீஸ். 47 வது ஓவரில் மூன்று ரன்கள் எடுத்தது. 48-வது ஓவரை மீண்டும் ஸ்டார்க் வீசினார். ஒரு ரன் கிடைத்தது வெஸ்ட் இண்டீசுக்கு அதே சமயம் மற்றொரு விக்கெட்டையும் இழந்தது. 49-வது ஸ்டாய்னிஸ் ஒரு ரன் மட்டும் கொடுத்தார்.

அதன் பின்னர்தான் 6 பந்தில் 32 ரன்கள் என்ற இமாலய இலக்கை சந்தித்தது வெஸ்ட் இண்டீஸ்.

மிச்சேல் ஸ்டார்க் நேற்றைய தினம் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

நேற்றையபோட்டியோடு சேர்த்து இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தான் விளையாடிய ஏழு ஒருநாள் போட்டிகளில் 21 விக்கெட்டுகளை சாய்த்திருக்கிறார் ஸ்டார்க். மூன்று முறை ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார்.

ஆனால் நேற்றைய போட்டியின் ஆட்ட நாயகன் கடைசி கட்ட ஓவர்களில் சிறப்பாக பந்து வீசியது மட்டுமின்றி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்டார்க் கிடையாது. கடைசி ஓவரில் 16 ரன்கள் கொடுத்தது உட்பட தான் வீசிய 10 ஓவர்களில் 70 ரன்கள் கொடுத்த கோல்டர்- நைல் ஆட்ட நாயகன் விருதை வென்றார். அது ஏன்?

காரணம் இருக்கிறது.

ஆஸ்திரேலியா இதுவரை உலகக்கோப்பையில் ஐந்து முறை 50 ரன்களுக்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்திருக்கிறது. இந்த ஐந்து முறையும் ஆஸ்திரேலியா வென்றிருக்கிறது.

ஆஸ்திரேலியா பேட்டிங் செய்த போது என்ன நடந்தது?

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்திருத்தது. ஆஸ்திரேலிய அணியின் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணியில் டேரன் பிராவோவுக்கு பதிலாக எவின் லெவிஸ் சேர்க்கப்பட்டார்.

டிரென்ட் பிரிட்ஜில் முன்னதாக எட்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே தோற்ற வரலாறுடன் களமிங்கியது வெஸ்ட் இண்டீஸ்.

தாமஸ் வீசிய முதல் பந்தே வைடு. அது மட்டுமல்ல அந்த பந்தை விக்கெட் கீப்பரின் கையிலும் சிக்காமல் எல்லைக்கோட்டைத் தொட்டது. முதல் ஓவரின் முதல் பந்து முடிவதற்குள்ளேயே ஆஸ்திரேலிய அணிக்கு ஐந்து ரன்கள் வந்தது. அதே ஓவரில் வார்னருக்கு நோ பால் வீசினார் தாமஸ். முதல் ஓவரின் முடிவில் 10 ரன்கள் எடுத்தது ஆஸி.

படத்தின் காப்புரிமை Alan Martin

ஆட்டத்தின் நான்காவது ஓவரில் தாமஸின் பந்தில் ஆஸ்திரேலிய அணித்தலைவர் பின்ச் எதுவும் செய்ய முடியாமல் அவுட் ஆனார்.

அதே ஓவரில் தாமஸின் ஒரு பந்து கவாஜாவின் முகத்தை பதம் பார்த்தது. பிட்சில் பந்து நன்றாக பவுன்ஸ் ஆவதை பயன்படுத்திக்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஷார்ட் பால் மற்றும் பவுன்சர் மூலம் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு குடைச்சல் கொடுத்தனர்.

எட்டு ஓவர்களில் 38 ரன்களுக்குள் நான்கு விக்கெட்டுகள் இழந்தது ஆஸி. பின்ச், வார்னர், கவாஜா, மேக்ஸ்வெல் ஆகியோர் வெஸ்ட் இண்டீசின் அனல் பறந்த பந்துவீச்சுக்கு இரையானவர்கள்.

அதன்பின்னர் ஸ்டாய்னிஸ் மற்றும் அலெக்ஸ் கரே ஒரு முனையில் விரைவாக ரன்கள் சேர்த்து அவுட் ஆயினர். ஆனால் மறுமுனையில் ஆஸ்திரேலிய அணிக்கு அரண் போல இருந்தார் ஸ்மித்.

ஸ்மித்தை எதுவும் செய்யமுடியாமல் தவித்தனர் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள். 31 ஒவர்களில் 148 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா விளையாடிக்கொண்டிருந்தபோது களத்தில் ஸ்மித்துடன் பந்துவீச்சாளர் கோல்டர் நைல் ஜோடி சேர்ந்தார்.

கோல்டர்-நைல் களமிறங்கியதும் பந்துகளை பவுண்டரிக்கும் சிக்ஸர்களுக்கும் விளாசினார். அவரது அச்சமற்ற ஆட்டம் ஆஸ்திரேலியாவை அபாயத்தில் இருந்து மீட்டது.

ஸ்மித் 103 பந்துகளில் 73 ரன்கள் எடுத்திருந்தபோது தாமஸ் வீசிய பந்தில் காட்ரலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

காட்ரெல் கேட்ச் பிடித்த விதத்துக்கு மைதானம் கைதட்டி மரியாதை செய்தது. அபாரமான கேட்ச் அது.

49-வது ஓவரில் பிராத்வெய்ட் பந்தில் 92 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட் ஆனார் நைல். அவர் 60 பந்துகளில் எட்டு பௌண்டரி, நான்கு சிக்ஸர்கள் விளாசி 92 ரன்கள் எடுத்தார்.

படத்தின் காப்புரிமை Andy Kearns
Image caption கோல்டர்-நைல்

இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் எட்டு அல்லது அதற்கு கீழ் வரிசையில் களமிறங்கி அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் வோக்ஸ் (95*) , ரஸ்ஸல்(32*) ஆகியோருக்கு அடுத்தபடியாக மூன்றாமிடம் பிடித்தார்.

1983-ல் கபில்தேவின் ஆட்டத்தால் 9/4 என இருந்த இந்திய அணியின் ஸ்கோர் இறுதியில் 266 என்றானது. அதன்பிறகு இந்த போட்டியில் தான் முதல் நான்கு விக்கெட்டுகள் விழுந்தபிறகு அதிக ரன்கள் சேர்க்கப்பட்டிருக்கிறது.

38/4 என இருந்த ஆஸ்திரேலியா பின்னர் 250 ரன்களைச் சேர்த்திருக்கிறது.

1999-லிருந்து தற்போது வரை உலகக் கோப்பை ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி 37 போட்டிகள் விளையாடியுள்ளது இதில் மூன்றில் தான் தோல்வி. 1999, 2003, 2007, 2015 உலகக்கோப்பை 'சாம்பியன்' ஆஸ்திரேலியா.

ஸ்டார்க் வீசிய 'வைடு'

289 ரன்கள் எனும் இலக்கை துரத்தத் தயாரானது வெஸ்ட் இண்டீஸ். முதல் பந்தை கெய்ல் எதிர்கொண்டார். ஸ்டார்க் முதல் பந்தையே வைடாக வீசினார். ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கரே அதைத் தவறவிட்டார். ஆஸ்திரேலிய அணியை போலவே வெஸ்ட் இண்டீஸ் அணியும் முதல் ஓவரின் முதல் பந்து நிறைவு செய்யப்படுவதற்கு முன்பே ஐந்து ரன்களை உதிரி மூலம் பெற்றது.

ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் லெவிஸ் அவுட் ஆனார். மூன்றாவது ஓவரில் ஸ்டார்க் வீசியபோது இரண்டு முறை 'ரிவ்யூ' மூலம் கெய்ல் தப்பினார்.

படத்தின் காப்புரிமை Alan Martin

ஐந்தாவது ஓவரில் மீண்டும் ஸ்டார்க் பந்தில் கெய்லுக்கு அவுட் கொடுக்கப்பட இம்முறை ரிவ்யூ கேட்டும் கள அம்பயரின் தீர்ப்பே இறுதியானது எனும் சூழலால் பெவிலியன் திரும்பினார் கிறிஸ் கெய்ல்.

ஹெட்மேயரின் மோசமான ஒரு ரன் அவுட், சிக்ஸருடன் ஆட்டத்தை துவங்கிய ரஸ்ஸல் மீண்டும் ஒரு சிக்ஸருக்கு ஆசைப்பட்டு அவுட் ஆனது, ஒரே ஓவரில் முக்கியமான நேரத்தில் அடுத்தடுத்து அவுட் ஆன ஹோல்டர், பிராத்வெய்ட் ஆகியவற்றால் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியைத் தழுவியது.

இப்போட்டியில் தோல்வியடைந்தபோதிலும் புள்ளிப்பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் மூன்றாமிடத்தில் நீடிக்கிறது.

இந்த ஆட்டத்தின் நடுவர்கள் சிறப்பாக செயல்படவில்லை பல்வேறு தவறான தீர்ப்புகளை தந்தனர் என இணையதளத்தில் ரசிகர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

பிபிசி கிரிக்கெட் செய்தியாளர் ஜோனாதன் அக்நியூ ''இந்த போட்டியில் ஆஸ்திரேலியா வென்ற விதத்தை பார்க்கும்போது எந்தவொரு சூழலிலும் எந்தவொரு அணியையும் வெல்ல முடியும் என அதன் வீரர்கள் நம்பிக்கை கொள்ளக் கூடும்,'' என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :