ஏபி டி வில்லியர்ஸ் அணியில் சேர்க்கப்படாததற்கு வருத்தமில்லை - தென்னாப்பிரிக்கா தேர்வுக்குழு ஒருங்கிணைப்பாளர்

ஏ பி டி வில்லியர்ஸ் படத்தின் காப்புரிமை Gallo Images

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அணித் தலைவர் ஏ பி டிவில்லியர்சை உலகக்கோப்பை விளையாட அழைக்காததில் வருத்தமில்லை என அந்நாட்டின் தேர்வுக்குழு ஒருங்கிணைப்பாளர் லிண்டா ஜோன்டி தெரிவித்துள்ளார்.

35 வயதாகும் டி வில்லியர்ஸ் கடந்த 2018-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனால் உலகக் கோப்பை அணி அறிவிக்கப்படும் வேளையில் தான் உலகக் கோப்பையில் விளையாட தயாராக இருப்பதாக டிவில்லியர்ஸ் கூறியிருந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் நடக்கும் உலகக்கோப்பையில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சூழலில் இந்த செய்தி வெளிவந்திருக்கிறது.

இந்நிலையில் தேர்வுக் குழு ஒருங்கிணைப்பாளர் இது குறித்து விளக்கமளித்திருக்கிறார்.

'' கடந்த ஏப்ரல் 18-ம் தேதி உலகக் கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்படும்போது 'டி வில்லியர்ஸ் மீண்டும் அணியில் இணைய தயாராக இருப்பதாக' தெரியவந்தது. ஆனால் தென்னாப்பிரிக்காவின் திட்டங்களை அந்த சமயத்தில் மாற்ற முடியாது. காலம் கடந்துவிட்டது.

நான் டிவில்லியர்ஸிடம் 2018-ம் ஆண்டில் ஓய்வு பெற வேண்டாம் என கெஞ்சினேன். உலகக்கோப்பைக்காக உரிய ஓய்வு எடுத்து தயார்படுத்திக் கொள்ளலாம் எனக் கூறினேன். ஆனால் உலகக் கோப்பையில் விளையாட வேண்டுமெனில் அதற்கு முன்பு தென்னாப்பிரிக்க மண்ணில் நடக்கும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் தொடர்களில் விளையாட வேண்டும். அப்போதுதான் உலகக்கோப்பை விளையாடுவதற்கான அணியைத் தேர்வு செய்யும்போது அவரது பெயர் கருத்தில் கொள்ளப்படும் என்றேன்.

ஆனால் அந்த சமயத்தில் அவர் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச ப்ரீமியர் லீக்கில் விளையாடச் சென்றுவிட்டார்.

படத்தின் காப்புரிமை Gallo Images

அவரது இடத்தை நிரப்ப கடுமையாக உழைத்த வீரர்களை கண்டறிந்து சேர்த்தோம். அவர்கள் உலகக்கோப்பையில் விளையாடுவதற்கான வாய்ப்பைப் பெற தகுதியானவர்கள்.

தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டு பிளசிஸ் மற்றும் பயிற்சியாளர் ஒட்டிஸ் கிப்சன், ஏ பி டிவில்லியர்ஸுக்கு மீண்டும் அணியில் இணைய வேண்டும் என ஆசை இருப்பதை எங்களிடம் பகிர்ந்தபோது எங்கள் அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

டி வில்லியர்ஸ் நிச்சயம் உலகில் சிறந்த வீரர்களில் ஒருவர் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் இவற்றுக்கு அப்பால் நாம் அணிசேர்க்கையில் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பது தார்மீக ரீதியான அடிப்படைக் கொள்கை. ஆகவே உலகக் கோப்பைக்கு டி வில்லையர்சை திரும்ப அழைக்காததில் எந்தவொரு வருத்தமும் இல்லை'' என அவர் தெரிவித்திருக்கிறார்.

டி வில்லியர்ஸ் தென்னாப்பிரிக்க அணிக்காக 114 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 228 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கிறார்.

யார் இந்த டி வில்லியர்ஸ் ?

ஏ பி டி வில்லியர்ஸுக்கு 'மிஸ்டர் 360 டிகிரி' என்ற புனைப்பெயர் உண்டு. பாரம்பரிய மற்றும் புதுமையான மட்டை வீச்சு உத்திகளைக் கையாண்டு மைதானத்தின் எல்லாப் பக்கங்களிலும் பந்தை அடிக்கும் திறமை காரணமாக அவருக்கு இந்தப்புனை பெயர் வந்தது.

ஆட்டத்தின் போக்கை சில பந்துகளில் மாற்றிவிடும் திறன் படைத்தவர் ஏ பி டி வில்லியர்ஸ்.

2004-ம் ஆண்டு நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் டி வில்லியர்ஸ் அறிமுகமானார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 8765 ரன்கள் குவித்துள்ளார்.

டி வில்லியர்ஸின் 22-வது மற்றும் கடைசி சதம் கடந்த மார்ச்சில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வந்தது.

படத்தின் காப்புரிமை Gallo Images

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக சதமடித்த தென் ஆப்ரிக்க வீரர் என்ற பெருமையும் டி வில்லியர்ஸுக்கு உண்டு. 2011-ல் 75 பந்துகளில் சதமடித்தார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ள டி வில்லியர்ஸ், ஜனவரி 2015-ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் 31 பந்துகளில் சதமடித்துளார்.

ஓய்வு பெறும்போது என்ன சொன்னார்?

டிவிட்டரில் தனது பக்கத்தில் ஒரு காணொளியை வெளியிட்ட டிவில்லியர்ஸ், அனைத்து வித சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

''நேர்மையாகச் சொல்ல வேண்டுமெனில் நான் சோர்வடைந்துவிட்டேன்'' என அந்த காணொளியில் தெரிவித்துள்ள டி வில்லியர்ஸ் இது கடினமான முடிவு என்றும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவை தென் ஆப்ரிக்கா வெற்றி கொண்டுள்ள நிலையில்தான் ஓய்வு பெறுவதற்கு இதுவே சரியான தருணம் என கருதுவதாக டி வில்லியர்ஸ் தெரிவித்தார் .

'' எந்தப் போட்டிகளில் விளையாடவேண்டும் எங்கு நடக்கும் போட்டிகளில் மட்டும் விளையாட வேண்டும் மேலும் எந்த ஃபார்மெட்டில் தென்னாப்பிரிக்காவுக்கு விளையாட வேண்டும் என நான் முடிவு செய்வது சரியானதாக இருக்காது'' எனத் தெரிவித்தார் டி வில்லியர்ஸ்.

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் நிர்வாகத்துக்கும், பயிற்சியாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துள்ளார் அதிவேக சத நாயகன்.

அயல்நாடுகளில் விளையாடுவது குறித்து எந்த திட்டமும் இல்லை. ஆனால் உள்ளூர் கிரிக்கெட்டில் டைட்டன்ஸ் அணிக்காக விளையாட தயாராக இருப்பேன் என நம்புவதாக டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

2004-ம் ஆண்டு நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் டி வில்லியர்ஸ் அறிமுகமானார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 8765 ரன்கள் குவித்துள்ளார்.

டி வில்லியர்ஸின் 22-வது மற்றும் கடைசி சதம் கடந்த 2018 மார்ச்சில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வந்தது.

வியாழக்கிழமையன்று இந்தியா தென்னாப்பிரிக்க அணியை ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ''தற்போது உலகக் கோப்பையில் நமது அணியை ஆதரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். நீண்ட தூரம் செல்லவேண்டியதிருக்கிறது. நமது வீரர்கள் அதைச் சாத்தியப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது'' என டி வில்லியர்ஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்க அணி சவுதாம்ப்டனில் வரும் திங்களன்று வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சந்திக்க விருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்