உலகக்கோப்பை கிரிக்கெட் 2019: உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் யார்? ஸ்மித்தா, கோலியா?

இந்திய அணி படத்தின் காப்புரிமை IAN KINGTON

பிரிட்டனில் நடைபெற்று வரும் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில், இன்று ஓவல் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இந்திய - ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டி நடைபெறும் ஓவல் மைதானம் மற்றும் அதை சுற்றிலுள்ள பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை மழை பொழிந்ததால் சோர்ந்து போயிருந்த ரசிகர்களை, நேற்று (சனிக்கிழமை) நிலவிய வறண்ட வானிலை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்றே கூறலாம்.

வலைப் பயிற்சியில் ஈடுபடுவதற்காக நேற்று லண்டன் ஓவல் மைதானத்திற்கு வந்த இந்திய அணி வீரர்களுக்கு வெளியே திரண்டிருந்த ஏராளமான ரசிகர்கள் கரகோஷத்துடன் வரவேற்பை அளித்ததுடன், வீரர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

"தோனியை பார்த்துவிட்டாலே போதும், ஆனால் வாய்ப்பு கிடைத்தால் அவரிடம் ஒரு ஆட்டோகிராஃப் வாங்கிவிட வேண்டும்" என்று கூறுகிறார் அந்த மைதானத்திற்கு முன்பு திரண்டிருந்த ஏராளமான இந்திய ரசிகரிகளில் ஒருவரான நாராயண்.

இந்திய அணி வீரர்களின் பேருந்து மைதானத்தின் முகப்பு பகுதியை வந்தடைந்தவுடன் அங்கு கூடியிருந்த ரசிகர்கள் பலத்த கரகோஷத்துடன் வரவேற்பு அளித்தனர்.

தோனி, ரோஹித், புவனேஷ் குமார் உள்ளிட்ட வீரர்கள் பேருந்திலிருந்து வெளியே இறங்கும்போது கூடுதல் ஆர்ப்பரிப்புடன் வரவேற்ற நிலையில், சிறிது நேரத்தில் 'கோலி இன்னும் வரவில்லையே' என்று ஒருவர் கேட்டார். அதற்கு மற்றொரு ரசிகர், 'கோலி நேற்று வந்தார். சௌதாம்ப்டனை போன்று இன்றும் கோலி வரமாட்டார்' என்று கூறினார். இவ்வாறாக பல கேள்விகளுக்கும் ரசிகர்கள் பதில்களுடனே வலம் வந்தனர்.

இந்த சூழ்நிலையில், மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் தங்களது அணியின் வீரர் ஸ்டீவ் ஸ்மித்தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று நேற்று (சனிக்கிழமை) ஓவல் மைதானத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் கருத்துத் தெரிவித்துள்ளார்.

உலகின் சிறந்த பேட்ஸ்மேனான ஸ்மித் மற்றும் போட்டியின் போக்கையே மாற்ற கூடிய வீரரான வார்னர் ஆகியோரின் வருகை இந்தியாவுக்கெதிரான போட்டியில் ஆஸ்திரேலியாவின் பலத்தை கூட்டுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Charlie Crowhurst
Image caption ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஆரோன் பின்ச்

ஆனால், பின்ச்சின் கருத்துக்கு இந்திய ரசிகர்கள் மறுப்புத் தெரிவிக்கின்றனர்.

"ஸ்மித்தான் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என்று பின்ச் எப்படி கூறுவார்? இந்திய அணியின் கேப்டன் கோலியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டியின் புள்ளிவிவரங்கள் ஸ்மித்தைவிட சிறப்பானதாகவே உள்ளன. இந்திய அணியின் கேப்டன் மற்றும் வீரர்களை தூண்டிவிடும் வகையிலேயே பின்ச் இவ்வாறு கூறியுள்ளார். ஆனால், இது உண்மையில் எடுபடாது" என்று கூறுகிறார் நாட்டிங்காமை சேர்ந்த கிரிக்கெட் ரசிகரான அஜய்.

"பின்ச்சின் கருத்துக்கு கோலியின் பேட் ஓவல் மைதானத்தில் பதிலளிக்கும். கோலி கண்டிப்பாக அதிக ரன்களை விளாசுவார்" என்று கூறுகிறார் ஓவல் மைதானத்தின் முன்பு கூடியிருந்த மற்றொரு கிரிக்கெட் ரசிகரான சௌரவ் பட்டாச்சார்யா.

இந்திய அணியின் சார்பாக செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற ரோஹித் ஷர்மாவிடம் பின்ச்சின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, அதற்கு நேரடியாக பதிலளிக்காமல், இந்திய அணி போட்டியில் கவனம் செலுத்த விரும்புவதாக தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Harry Trump-IDI
Image caption ஸ்டீவ் ஸ்மித்

பிரிட்டனிலுள்ள காலநிலையை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் அணிகளே இங்கு அதிகம் வெற்றிப்பெற்றிருக்கின்றன என்பதன் அடிப்படையில் போட்டியை எதிர்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வரலாறு என்ன சொல்கிறது?

இன்று மதியம் நடைபெற்றவுள்ள, இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான போட்டியை ஆவலுடன் எதிர்நோக்குபவர்கள், இவ்விரு அணிகள் இதற்கு முன்னர் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிகளில் நேருக்குநேர் மோதியை கண்டிப்பாக நினைத்து பார்ப்பார்கள் என்று கூறலாம்.

Image caption சௌரவ் பட்டாச்சார்யா மற்றும் அவரது மனைவி

2015ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியின் அரையிறுதிப் போட்டி இந்தியாவுக்கு மறக்க முடியாத ஒன்று என்றால், அதே அளவுக்கு 2011ஆம் ஆண்டு காலியிறுதியில் தோல்வியுற்று போட்டியிலிருந்து வெளியேறியது ஆஸ்திரேலிய அணிக்கு மோசமான நினைவுகளை ஏற்படுத்தும்.

2015ஆம் ஆண்டு அரையிறுதி போட்டியை போன்றே 2003ஆம் ஆண்டு இறுதிப் போட்டியும் மறக்க முடியாத ஒன்று. அப்போதும், முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 359 ரன்களை குவிக்க, அடுத்து ஆடிய இந்திய அணி 234 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

1999ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில், சூப்பர் சிக்ஸ் பிரிவில் இவ்விரு அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில், முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 282 ரன்களை அடித்தது. ஆனால், கங்குலி, சச்சின், ட்ராவிட், அசாருதீன் ஆகிய நட்சத்திர வீரர்களை கொண்டிருந்த இந்திய அணியால் அந்த போட்டியிலும் சோபிக்க இயலவில்லை.

மேற்குறிப்பிட்டவைகளில் பெரும்பாலான போட்டிகளில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு பேட்ஸ்மேனோ அல்லது பவுலரோ சிறப்பாக செய்யப்பட்டதை தொடர்ந்தே அந்த அணி வெற்றிபெற்று வந்துள்ளது.

அதாவது, 2003ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியை எடுத்துக்கொண்டால், ரிக்கி பாண்டிங் மற்றும் மார்ட்டின், 1999ஆம் ஆண்டில் மார்க் வாக் மற்றும் மெக்ராத் ஆகியோரை உதாரணமாக குறிப்பிட முடியும்.

முக்கியமான போட்டிகளின்போதே ஆஸ்திரேலியாவின் முக்கிய வீரர்கள் ஃபார்முக்கு திரும்புவர். எனவே, 2019ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவின் முகமாக மாறப்போகும் வீரர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு சரிசமமான பலத்துடன் திகழும் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் ஆஸ்திரேலியாவுக்கு கடும் நெருக்கடியை கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :