உலகக்கோப்பை கிரிக்கெட் 2019: ஆப்கானிஸ்தான் உடன் வெற்றி; முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கும் நியூசிலாந்து

Cricket World Cup படத்தின் காப்புரிமை Alex Davidson
Image caption போட்டிக்குப் பிறகு ரஷீத் கான் உடன் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன்

கிரிக்கெட் உலக்கோப்பைத் தொடரில் தாம் இதுவரை விளையாடியுள்ள மூன்று போட்டிகளிலும் வென்ற நியூசிலாந்து, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது.

நேற்று, சனிக்கிழமை டாண்டனில் நடந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வென்று தனது மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது நியூசிலாந்து.

புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் ஆப்கானிஸ்தானுக்கு இந்தப் போட்டி மூன்றாவது தொடர் தோல்வி.

இலங்கை அணிக்கு எதிரான முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்திலும் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு விக்கெட் வித்தியாசத்திலும் வென்ற நியூசிலாந்து அணிக்கு இந்தப் போட்டியும் எளிதில் வெற்றிபெறும் ஒன்றாகவே இருந்தது.

டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஆப்கானிஸ்தான் ஓரளவு நன்றாகவே ஆட்டத்தை தொடங்கியது.

11வது ஓவரில் தொடக்க வீரர் ஹஸ்ரதுல்லா சசாய் 34 ரன்களுக்கும், 12வது ஓவரில் இன்னொரு தொடக்க வீரர் நூர் அலி சத்ரான் 31 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ரஹ்மத் ஷா நான்கு பந்துகளை மட்டுமே சந்தித்து ரன் எடுக்காமல் அவுட் ஆனார்.

பின்பு களமிறங்கிய ஹஷ்மதுல்லா ஷாஹிதி தவிர அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இவர் 99 பந்துகளில் 59 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

ஐந்து ஓவர்கள் வீசிய நீசம் 31 ரன்கள் மட்டுமே கொடுத்து ஐந்து விக்கெட்டுகளையும், நான்கு ஓவர்கள் வீசிய ஃபெர்குசன் 37 ரன்கள் மட்டுமே கொடுத்து நான்கு விக்கெட்டுகளையும் வீழ்த்த, 41.1 ஓவரிலேயே 172 ரன்களில் ஆட்டமிழக்க வழிவகுத்தது.

படத்தின் காப்புரிமை Alex Davidson

ஆப்கானிஸ்தான் வீரர்களில் நால்வர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எட்டினர். மற்றவர்களில் ரஹ்மத் ஷா மற்றும் ரஷீத் கான் ஆகியோர் ரன் எதுவும் எடுக்கவில்லை.

நியூசிலாந்து அணிக்கும் தொடக்கம் அவ்வளவு ஒன்றும் சிறப்பாக இல்லை. மார்ட்டின் கப்டில் இரண்டாவது இன்னிங்சின் முதல் ஓவரின் முதல் பந்திலேயே அஃப்தாப் அலாமின் பந்துவீச்சில் நஜிபுல்லாவுக்கு கேட்ச் கொடுத்து ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

காலின் மன்றோவுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் கேன் வில்லியம்சன் 99 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ராஸ் டெய்லர் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் அரை சதத்தைத் தவறவிட்டார்.

புள்ளிப்பட்டியலில் இராண்டாம் இடத்தில் இருக்கும் இங்கிலாந்தைவிட இரண்டு புள்ளிகள் முன்னிலை பெற்றிருந்தாலும் நியூசிலாந்து அணி இந்தப் போட்டியில் ரன் ரேட்டை அதிகரிக்கவில்லை.

173 ரன்கள் எனும் வெற்றி இலக்கை அடைய நியூசிலாந்து அணிக்கு 32.1 ஓவர்கள் தேவைப்பட்டன.

இன்று நடக்கும் போட்டியில், சிறப்பான ரன் ரேட்டுடன் ஆஸ்திரேலியா இந்தியாவை வென்றால் ஆஸ்திரேலியா முதலிடம் பெற வாய்ப்புள்ளது.

இதுவரை எந்தப் போட்டியிலும் வெற்றிபெறாத தென்னாப்பிரிக்க அணியுடன் நியூசிலாந்து வியாழக்கிழமை மோதவுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்