இந்தியா ஆஸ்திரேலியா : 32 ஆண்டுகளுக்கு பிறகு லீக் சுற்றில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா

விராட் கோலி படத்தின் காப்புரிமை ADRIAN DENNIS

உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவை நான்காவது முறையாக வென்றுள்ளது இந்திய அணி.

1987 உலகக் கோப்பையில் நடந்த லீக் சுற்றில் சென்னையில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் ஒரு ரன் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது.

அதே உலகக்கோப்பையில் மற்றொரு லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோதும்போது 56 ரன்களில் இந்தியா வென்றது. டெல்லியில் கிடைத்த அந்த வெற்றிக்கு பிறகு 32 ஆண்டுகள் கழித்து உலகக் கோப்பையில் முதல் கட்ட லீக் சுற்று போட்டியில் ஆஸ்திரேலியாவை வென்றுள்ளது இந்தியா.

இந்த போட்டியில் இந்தியாவின் பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என அனைத்தும் சிறப்பாக இருந்ததாக கேப்டன் கோலி கூறியிருக்கிறார்.

உலகக் கோப்பைக்கு முன்பு இந்தியாவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கோலி அணி இழந்தது.

10 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றிருந்த ஆஸ்திரேலிய அணியின் வெற்றிப்பயணத்தை இந்திய அணி முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறது.

'' இந்தியாவில் நடந்த தொடரை இழந்த பிறகு இது மிகப்பெரிய சிறப்பான வெற்றி. முதல் பந்தில் இருந்தே சரியான நோக்கத்துடன் ஆட்டத்தை அணுகினோம், இந்தியாவுக்கு அருமையான தொடக்கம் அமைந்தது. பேட்டிங்குக்கு சிறப்பான ஆடுகளத்தில் நாங்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டுளோம்.

முப்பது ரன்கள் கூடுதலாக எடுத்திருக்கிறோம் என்றபோதிலும் ஒழுங்காக பந்து வீசினால் தான் வெற்றி என்பதை உணர்ந்திருந்தோம். மிகவும் தொழில் நேர்த்தியுடன் கூடிய ஆட்டத்தை வெளிப்படுத்தினோம்''

- இப்படிச் சொன்னவர் இந்திய அணித் தலைவர் விராட் கோலி.

படத்தின் காப்புரிமை ADRIAN DENNIS

'' அவர்கள் எங்களை விட அனைத்துத் துறையிலும் சிறப்பாக செயல்பட்டார்கள். குறிப்பாக கடைசி 10 ஓவர்களில் கிட்டத்தட்ட 120 ரன்கள் எடுத்தார்கள். வலுவான பேட்டிங் தேவைப்பட்ட ஆட்டத்தில் அவர்கள் நன்றாக ஆடினார்கள்'' என போட்டி முடிந்தபின்னர் சொன்னவர் ஆரோன் பின்ச்.

'' இந்த போட்டியின் முடிவு மிகவும் மகிழ்ச்சி தருவதாக அமைந்துள்ளது. அணியின் சிறப்பான ஆட்டத்தால் வெற்றி கிடைத்தது. இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்றது மகிழ்ச்சியைத் தருகிறது. ஒட்டுமொத்தமாக அணியின் செயல்திறன் குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். நாங்கள் ஃபீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டோம்.

நாங்கள் சிறப்பான கேட்ச் பிடித்தோம். நல்ல பௌலிங் துறையையும் நல்ல சுழற்பந்து வீச்சாளர்களையும் பெற்றிருக்கிறோம். நாங்கள் வலைப்பயிற்சியில் கடுமையாக உழைத்தோம். அதற்கான விடை தான் இந்த போட்டியின் முடிவு. நாங்கள் இன்று செய்யவேண்டிய அனைத்தையும் செய்துவிட்டோம். அவர்கள் சிறப்பான அணி என்பது எங்களுக்குத் தெரியும், வரும் காலங்களிலும் அனைத்து துறைகளிலும் சிறப்பாக விளையாட வேண்டும்'' என்றார் நேற்றைய போட்டியின் ஆட்டநாயகன் ஷிகர் தவான்.

படத்தின் காப்புரிமை DIBYANGSHU SARKAR

1999 உலகக்கோப்பையில் மே 23 அன்று, இங்கிலாந்தின் லீட்சில் நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 275 ரன்கள் எடுத்தது. இரண்டாவது பேட் செய்த ஆஸ்திரேலியா 265 ரன் எடுத்து தோல்வியைத் தழுவியது. இதுதான் கடைசியாக உலகக் கோப்பை போட்டிகளில் சேசிங்கில் ஆஸ்திரேலியா தோற்றது.

அதற்கு பிறகு 2003,2007,2011,2015 என நான்கு உலகக் கோப்பை தொடர்களில் ஒரு முறை கூட ஆஸ்திரேலியா சேசிங்கில் தோற்கவில்லை. 19 உலகக் கோப்பை ஆட்டங்கள் கழித்து தற்போதுதான் உலகக் கோப்பை போட்டி ஒன்றில் சேஸிங்கில் தோற்றுள்ளது ஆஸ்திரேலியா.

2015 உலக கோப்பையில் அரை இறுதியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியடைந்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்றைய போட்டியில் கவனமாக விளையாடி வென்றுள்ளது இந்திய அணி.

கிரிக்கெட் என்பது குழு விளையாட்டு என்றாலும் இந்திய அணி பொதுவாக 'ஒன் மேன் ஷோ' மூலமாக வெற்றி பெறுவதில் பிரசித்தி பெற்றது.

யாராவது ஒரு பேட்ஸ்மேனில் அதிரடி சதம், யாராவது ஒருவரின் அதிரடியான ஃபினிஷிங், எதாவது ஒரு சுழற்பந்து வீச்சாளரின் அட்டகாசமான பந்துவீச்சு - இப்படித் தான் இந்தியா பெரும்பாலான போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

ஒரு குழுவாக அனைத்து துறைகளிலும் மிகச்சிறப்பான பங்களிப்பை வழங்கி எதிரணியை விட எல்லா துறையிலும் சிறப்பாக செயல்பட்டு இந்தியா வெற்றி காணுவது சற்று அரிதான நிகழ்வு.

அந்த வகையில் நேற்றைய போட்டியில் இந்தியா மிகச்சிறப்பான வெற்றியைப் பெற்றது என்பதைத் தான் கோலி, பின்ச், தவான் ஆகியோரின் பேச்சுக்களில் இருந்து அறியலாம்.

கடைசி ஓவர்களில் அசத்திய இந்தியா

44.2 ஓவர்கள் முடிவில் நேற்றைய போட்டியில் இந்தியா இரண்டு விக்கெட்டு இழப்புக்கு 282 ரன்கள் எடுத்திருந்தது.

44.2 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி எடுத்திருந்ததும் 282 ரன்கள்தான் ஆனால் ஆறு விக்கெட்டுகளை இழந்திருந்தது.

ஆட்டம் முடிய 25 பந்துகள் இருந்த நிலையில் ஹர்டிக் பாண்ட்யா அவுட் ஆனதற்கு பிறகு களமிறங்கினார் மகேந்திர சிங் தோனி.

ஸ்டார்க் வீசிய 47-வது ஓவரில் இந்நாள் அணித்தலைவர் கோலியும் முன்னாள் அணித் தலைவர் தோனியும் இணைந்து 15 ரன்கள் குவித்தனர்.

48-வது ஓவரை ஸ்டாய்னிஸ் வீசினார். ஒன்பது ரன்கள் வந்தன.

மீண்டும் 49-வது ஒவர் ஸ்டார்க்குக்கு. இம்முறை தோனி ஒரு சிக்ஸர் ஒரு பௌண்டரி உட்பட 13 ரன்கள் எடுத்தார். இந்த ஓவரில் எந்தவொரு பந்தையும் 140 கி.மீ க்கு குறைவான வேகத்தில் இடது கை வேகப் பந்துவீச்சாளர் மிச்சேல் ஸ்டார்க் வீசவில்லை.

ஸ்டார்க் தான் வீசிய 10 ஓவர்களில் 74 ரன்கள் கொடுத்திருந்தார்.

படத்தின் காப்புரிமை Henry Browne

ஆட்டத்தின் கடைசி ஓவரின் முதல் பந்தில் தோனி ஆட்டமிழந்தார். அவர் 14 பந்துகளில் 27 ரன்கள் எடுத்திருந்தார். கோலியும் அதே ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் 77 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தார்.

ஆனால் கே.எல்.ராகுல் ஒரு பௌண்டரி ஒரு சிக்ஸர் உதவியுடன் மூன்று பந்தில் 11 ரன்கள் எடுத்தார்.

ஆஸ்திரேலிய அணிக்கு 353 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால் தோனி - ராகுல் போல ஆஸ்திரேலியாவுக்கு இந்த கடைசி ஓவர்களில் அதிரடியாக ஆட 'நம்பகமான' பேட்ஸ்மேன்கள் இல்லை. இதனால் ஆஸ்திரேலியா வெற்றிக்கு அருகில் கூட வரவில்லை.

47-வது ஓவரின் கடைசி பந்தில் கோலி ஒரு ரன் எடுத்தபோது இந்தியாவின் ஸ்கோர் 316ஐ தொட்டது. உலகக் கோப்பை வரலாற்றிலேயே ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக எந்தவொரு அணியும் இதற்கு முன்னர் 316 ரன்களை கடந்ததில்லை. ஆனால் இந்தியா 352 ரன்கள் எடுத்தது.

நேற்றைய தினம் ஆஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 316 ரன்கள் மட்டுமே எடுத்தது. 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

பும்ரா - புவனேஷ்வர் குமாரின் சிறப்பான பந்துவீச்சு

ஆஸ்திரேலிய அணி நேற்றைய தினம் 39 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்திருந்தது.

ஒரு முனையில் ஸ்மித் நிதானமாக விக்கெட்டை இழக்காமல் ரன்களைச் சேர்த்து வர மறு முனையில் மேக்ஸ்வெல் பௌண்டரிகளை விளாசி 9 பந்துகளில் 21 ரன்கள் எடுத்திருந்தார்.

இந்தியா கடைசி 11 ஓவர்களில் 122 ரன்கள் விளாசியது. ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 11 ஓவர்களில் 118 ரன்கள் தேவைப்பட்டது.

அனுபவம் வாய்ந்த ஸ்மித் மற்றும் அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் களத்தில் இருக்கும் வரை, 'நவீன கால' ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இது 'சாத்தியப்படும் இலக்கு' என நம்பப்பட்டது.

முன்னதாக ஆட்டத்தின் 38-வது ஓவரில் புவனேஷ்வர் குமார் 15 ரன்களை கொடுத்தார். எனினும் 40-வது ஓவரை புவனேஷ்வர் குமாரிடம் கொடுத்தார் கோலி. இதற்கு இந்தியாவுக்கு பெரும் பலன் கிடைத்தது.

நாற்பதாவது ஓவரின் நான்காவது பந்தை சற்று வேகம் குறைவாக வீசினார் புவனேஷ்வர் குமார். ஸ்மித் இடது காலை ஆன் ஸ்டம்ப் பக்கம் நகர்த்தி விளையாட முயன்றார். பந்து அவர் பேட்டைத் தொடாமல் காலைத் தொட்டது. புவனேஷ்வர் குமார் அப்பீல் செய்ய கள நடுவர் அவுட் கொடுக்கவில்லை.

கோலி மூன்றாவது அம்பயரிடம் மேல் முறையீடு செய்தார். இதையடுத்து எல்.பி.டபிள்யூ முறையில் ஸ்மித் அவுட் ஆனதாக அறிவிக்கப்பட்டது.

படத்தின் காப்புரிமை DIBYANGSHU SARKAR

அதே ஓவரின் கடைசி பந்தில் ஆல்ரவுண்டர் ஸ்டாய்னிசை போல்ட் ஆக்கி வெளியேற்றினார் புவனேஷ்வர் குமார்.

மூன்றே பந்துகளில் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமானது.

எனினும் களத்தில் மேக்ஸ்வெல் இருந்தார். அப்போது பும்ராவுக்கு பதிலாக சாஹலை பந்துவீச அழைத்தார் கோலி. 41-வது ஓவரின் நான்காவது பந்தில் மேக்ஸ்வெல் அடித்த பந்தை டீப் மிட் விக்கெட் திசையில் இருந்த ஜடேஜா ஓடி வந்து அபாரமாக கேட்ச் பிடித்தார்.

படத்தின் காப்புரிமை DIBYANGSHU SARKAR

ஒருநாள் போட்டிகளில் இதுவரை மேக்ஸ்வெல்லுக்கு 28 பந்துகள் வீசியிருக்கிறார் சாஹல். இதில் மூன்று முறை அவர் அவுட்.

14 பந்துகளில் 28 ரன்கள் எடுத்திருந்த மேக்ஸ்வெல் அவுட்டானதும் ஆஸ்திரேலியாவின் வெற்றி வாய்ப்பு மங்கத் துவங்கியது.

பயன் தராத கேரி கலகம்

கடந்த வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு நாயகனாக திகழ்ந்த கோல்டர் நைலை நான்கு ரன்களில் பெவிலியனுக்கு அனுப்பினார் பும்ரா. கம்மின்ஸையும் அவர் எட்டு ரன்களில் வெளியேற்றினார்.

ஒருமுனையில் அலெக்ஸ் கேரி மட்டும் அதிரடியாக விளையாடினார். கடைசி வரை பேட்டிங் செய்த அவர் 35 பந்துகளில் 55 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலியா 316 ரன்களை எட்டுவதற்கு அவர் முக்கிய காரணம். ஆனால், அவரது கடைசிகட்ட அதிரடி ஆஸ்திரேலியாவுக்குப் பயன்தரவில்லை.

முன்னதாக ஆஸ்திரேலியா இன்னிங்ஸை துவக்கிய போது பவர்பிளேவில் பும்ராவும் புவனேஷ்வர் குமாரும் ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்கள் ஃபின்ச் மற்றும் டேவிட் வார்னருக்கு கடும் சவால் கொடுத்தனர்.

ஆஸ்திரேலியா அணி முதல் ஏழு ஓவர்களில் வெறும் 19 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. பும்ரா மூன்று ஓவர்கள் வீசினார் அதில் ஒரு ஓவர் மெய்டன். புவனேஷ்வர் குமார் தனது முதல் ஸ்பெல்லில் ஐந்து ஓவர்கள் வீசி 12 ரன்கள் கொடுத்தார்கள்.

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களை விடவும் இவ்விரு பிரதான பந்து வீச்சாளர்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதில் ஆஸ்திரேலியா தோற்றது. இவ்விருவரும் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

ஃபீல்டிங்கில் அசத்திய இந்தியா

ஆஸ்திரேலிய வீரர்கள் ஃபீல்டிங்கில் சில தவறுகளை செய்தனர். ஆட்டத்தின் துவக்கத்தில் மிச்செல் ஸ்டார்க் பந்தில் ரோகித் ஷர்மாவை அவுட் செய்யும் சற்று கடினமான வாய்ப்பை கோல்டர் நைல் தவறவிட்டார். அதைப் பயன்படுத்திய ரோகித் ஷர்மா அரை சதம் விளாசினார்.

ஆட்டத்தின் 38-வது ஓவரில் ஹர்டிக் பாண்டியா டக் அவுட் ஆக வேண்டிய சூழலில் இருந்து தப்பித்தார். கோல்டர் நைல் பந்தில் ஹர்டிக் பாண்டியாவை அவுட்டாக்கும் வாய்ப்பை தவற விட்டவர் ஆஸ்திரேலியாவின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி.

அதன் பின்னர் ஹர்டிக் பாண்டியா சிக்ஸர்களாக விளாசினார். நான்கு பௌண்டரி, மூன்று சிக்ஸர் உதவியுடன் அவர் 27 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார்.

படத்தின் காப்புரிமை ADRIAN DENNIS

ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கின்போது கேதர் ஜாதவ் உதவியுடன் ஃபின்ச்சை ரன் அவுட் செய்தார் ஹர்டிக் பாண்டியா. இந்திய பௌலர்கள் முதல் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் தவித்தபோது ரன் அவுட் மூலம் ஆஸ்திரேலிய அணித்தலைவர் பெவிலியன் திரும்பினார்.

ஆட்டத்தில் கடைசி ஓவரில் விஜய் சங்கரின் உதவியுடன் மிச்செல் ஸ்டார்க்கை ரன் அவுட் செய்தார் புவனேஷ்வர் குமார்.

ஃபீல்டிங்கில் மாற்று வீரராக களமிறங்கிய ஜடேஜா இரண்டு கேட்ச் பிடித்தார்.

தடுமாறிய வார்னர்

வார்னர் நேற்றைய தினம் அரை சதம் எடுத்தார். ஆனால் பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளத்தில் வழக்கமாக அதிரடியாக ஆடும் வார்னர், சாதனை இலக்கை துரத்தும் ஒரு சேசிங் போட்டியில் 84 பந்துகளைச் சந்தித்து 56 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

வார்னரின் அரிதான மிகப்பொறுமையான அரை சதங்களுள் ஒன்றாக அமைந்தது நேற்றைய இன்னிங்ஸ்.

படத்தின் காப்புரிமை DIBYANGSHU SARKAR

முன்னதாக ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் பும்ராவின் பந்தில் அதிர்ஷ்டவசமாக விக்கெட்டை இழக்கும் வாய்ப்பில் இருந்து தப்பிப் பிழைத்தார் வார்னர்.

பும்ரா வீசிய பந்து ஸ்டம்பில் பட்டபோதிலும் பெய்ல்ஸ் விழாததால் தப்பித்தார். நேற்றுடன் இந்த உலகக் கோப்பையில் இதுபோல நடப்பது 5-வது முறை ஆகும்.

பேட்டிங்கில் கவனமாக செயல்பட்ட இந்தியா

இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்திருந்தது. முதல் ஏழு ஓவர்களில் இந்தியா பொறுமையாக விளையாடியது. 22 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ரோகித் 22 பந்துகளில் 9 ரன்கள் எடுத்திருந்தார்.

கோல்டர் நைல் வீசிய எட்டாவது ஓவரில் தவான் மூன்று பௌண்டரிகள் விளாச இந்தியாவுக்கு 14 ரன்கள் கிடைத்தது.

தவான் 53 பந்தில் அரை சதம் கடந்தார். ரோகித் 61 பந்துகளில் அரை சதம் விளாசினார். ரோகித் ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக அடிக்கும் நான்காவது அரை சதம் இது.

ஆட்டத்தின் 23-வது ஓவரில்தான் இந்த இணை பிரிந்தது. ரோகித் 70 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 122 ரன்கள்.

படத்தின் காப்புரிமை ADRIAN DENNIS

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உலகக்கோப்பையில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஜோடியாக குவித்த அதிகபட்ச ரன் இதுதான்.

அரை சதம் விளாசிய பிறகு தவான் பௌண்டரிகளை விளாச கோலி கவனமுடன் பந்துகளை எதிர்கொண்டார். 20 பந்துகளில் 12 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

இந்திய அணி ஐந்துக்கு கீழ் ரன்ரேட் குறைந்து விடாமல் பார்த்துக்கொண்டது.

96 பந்தில் சதம் கண்டார் தவான். ஆட்டத்தின் 37-வது ஓவரில் அவர் 109 பந்துகளில் 16 பௌண்டரிகள் உதவியுடன் 117 ரன்கள் எடுத்தார்.

தவான் ஆட்டமிழந்த பிறகு ரன் ரேட்டை உயர்த்தும் பணிக்காக அனுப்பப்பட்ட ஹர்டிக் பாண்டியா தனது பணியை சிறப்பாக செய்தார். கடைசி கட்ட ஓவர்களில் தோனி வழக்கம் போல அதிரடியாக விளையாடினார். ஆனால் இறுதி ஓவரில் அவுட்டானார். அணித் தலைவர் கோலி நின்று நிதானமாக விளையாடி 77 பந்துகளில் 82 ரன்கள் குவித்தார்.

படத்தின் காப்புரிமை Henry Browne

பதற்றப்படாத இந்திய அணியின் பேட்டிங் 50 ஓவர்கள் முடிவில் வலுவான ஸ்கோரை எட்ட உதவியது.

இந்திய அணி தற்போது விளையாடிய இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று நான்கு புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாமிடத்தில் உள்ளது. இந்தியாவைப் போல இந்த உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை தோல்வியே காணாத நியூசிலாந்து அணி ஆறு புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

வரும் வியாழக்கிழமை நியூசிலாந்தை எதிர்கொள்கிறது இந்தியா.

தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா என வலுவான இரு அணிகளை வீழ்த்தி உலகக் கோப்பை போட்டியை துவக்கியிருக்கும் இந்திய அணி அடுத்த போட்டியில் நியூசிலாந்தையும் அதற்கடுத்த போட்டியில் இந்த உலகக் கோப்பையின் அதிகம் எதிர்ப்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கும் பாகிஸ்தானுடனான போட்டியையும் எதிர்கொள்கிறது.

இப்போதைக்கு இந்திய அணிக்கு அரை இறுதி வாய்ப்பு மிகப்பிரகாசமாக உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :