ஷிகர் தவான் உலகக் கோப்பை போன்ற பெரும் தொடர்களில் சச்சின், கோலியை விஞ்சும் நாயகனா?

ஷிகர் தவான் படத்தின் காப்புரிமை Michael Steele

ஐசிசி தொடர்கள் வந்துவிட்டாலே ஷிகர் தவான் ஃபார்முக்கு வந்துவிடுகிறார் மற்ற நேரங்களில் சொதப்புகிறார் - இது இந்திய அணியின் ரசிகர்களின் செல்லப் புலம்பல்.

மீம்கள் முதல் ட்வீட்கள் வரை தவானை செல்லமாக கிண்டல் செய்கின்றன.

ஆனால் உண்மையில் ஷிகர் தவான் பெருந்தொடர்களின் நாயகனா? சற்று விரிவாக பார்ப்போம்.

ஷிகர் தவான் ஐசிசியின் ஒருநாள் போட்டிகளுக்கான சிறந்த பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 14-வது இடத்தில் இருக்கிறார்.

கடந்த ஒன்பது ஆண்டுகளில் 130 போட்டிகளில் விளையாடிவிட்டார் ஷிகர் தவான்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கடந்த 2010-ம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியொன்றில் அறிமுகமானார்.

அவர் தனது முதல் போட்டியில் சந்தித்த பந்துகள் எண்ணிக்கை -2 | எடுத்த ரன்கள் - 0

முதல் போட்டியில் டக் அவுட் ஆன தவான் ஒன்பது மாதங்களுக்கு பிறகு அடுத்த போட்டியிலேயே அரை சதம் அடித்தார்.

அவரது கிரிக்கெட் வாழ்க்கையை இந்த இரண்டே போட்டிகள் சுருக்கமாக சொல்லிவிடும்.

ஆம். திடீரென ஃபார்முக்கு வந்துவிட்டால் சிறப்பாக விளையாடும் தவான், சோடை போனால் தொடர்ச்சியாக மோசமான ஆட்டத்தையும் வெளிப்படுத்துவார்.

ஆனால் அவரது செயல்திறன் தொய்வடையும்போதெல்லாம் இழந்த ஃபார்மை மீட்டு சிறப்பாக செயல்படும் திறன்படைத்தவர்.

படத்தின் காப்புரிமை AFP PHOTO

2011 வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஐந்து போட்டிகளில் விளையாடிய தவானுக்கு பின்னர் 2013 சாம்பியன்ஸ் டிராபியில்தான் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த தொடரில் இந்திய அணி கோப்பையை கைப்பற்ற முக்கிய காரணகர்த்தாவாக விளங்கிய நாயகர்களில் ஷிகர் தவானும் ஒருவர்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சதம் (114), வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சதம் (102*) பாகிஸ்தானுக்கு எதிராக 41 பந்தில் 48 ரன்கள், இலங்கைக்கு எதிராக அரை சதம் (68), இறுதிப்போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 24 பந்தில் 31 ரன்கள் என 5 போட்டிகளில் 363 ரன்கள் குவித்து அத்தொடரில் அதிக ரன்கள் குவித்த நாயகனாக உருவெடுத்தார்.

அப்போதிலிருந்து ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடர்களிலும் ஆசிய கோப்பைகளிலும் இந்திய அணிக்கு முக்கிய பேட்ஸ்மேனாக அவர் விளங்கி வருகிறார்.

சாம்பியன்ஸ் டிராபி

இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள தவான் 77.88 எனும் சராசரியோடு 701 ரன்களை குவித்திருக்கிறார்.

இந்த பத்து போட்டிகளில் மூன்றில் சதமும் மேலும் மூன்று போட்டிகளில் அரை சதமும் விளாசியிருக்கிறார்.

கங்குலி 13 போட்டிகளில் தலா மூன்று சதம், அரை சதம் விளாசி 665 ரன்கள் எடுத்துள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபியை பொருத்தமட்டில் விராட் கோலி அதிக சராசரிவைத்திருக்கிறார். அதற்கடுத்த இடத்தில் தவான் உள்ளார்.

ஆனால் அதிக சதமடித்தவர்கள் பட்டியலில் தவானுக்கே முதலிடம்.

ரோகித் 10 போட்டிகளில் ஏழில் குறைந்தது 50 ரன்களை கடந்துள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபியில் தவான்

ஷிகர் தவான் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிராக சதமெடுத்துள்ளார். இலங்கை, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிராக அரை சதம் கண்டுள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபியில் குறைந்தபட்சமாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 21 ரன்கள் எடுத்தார். அதிகபட்சமாக இலங்கைக்கு எதிரான போட்டியில் 125 ரன்கள் குவித்தார்.

ஐசிசி உலகக்கோப்பை ஒருநாள் தொடர்

சச்சின் டெண்டுல்கர் ஆறு சதமும், கங்குலி நான்கு சதமும் விளாசியுள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக ஷிகர் தவான் தான் விளையாடிய 10 போட்டிகளில் மூன்றில் சதமெடுத்துள்ளார்.

ரோகித் ஷர்மா விளையாடிய 10 போட்டிகளில் ஐந்து போட்டிகளில் குறைந்தது 50 ரன்கள் எடுத்துள்ளார்.

சராசரி அடிப்படையில் ரோகித் முதலிடம் வகிக்கிறார். ஆனால் சச்சின் டெண்டுல்கர் 45 போட்டிகளில் விளையாடி சராசரியாக 56 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் அடித்தார்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

உலகக்கோப்பையில் தவான்

தென்னாப்பிரிக்கா, அயர்லாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக சதமும் பாகிஸ்தானுக்கு எதிராக அரை சதமும் அடித்துள்ளார்.

விளையாடிய 10 போட்டிகளில் மூன்றில் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

ஆசியக் கோப்பை

ஆசியக்கோப்பையில் அதிக சதம் எடுத்தவர் கோலி. அதற்கடுத்த இடத்தில் சச்சின் மற்றும் தவான்உள்ளனர்.

சச்சினுக்கு அடுத்தபடியாக 22 ஆசியக் கோப்பை போட்டிகளில் விளையாடிய ரோகித் ஏழு போட்டிகளில் குறைந்தது 50 ரன்கள் எடுத்துள்ளார்.

ஆசியக்கோப்பையில் தவானின் குறைந்தபட்சம் 10 ரன்கள். அதிகபட்சம் 127 ரன்கள்.

ஹாங்காங் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக அவர் சதமடித்துள்ளார். இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அரை சதமடித்துள்ளார் ஷிகர் தவான்.

ஐசிசி தொடர்களில் நாயகன் யார்?

சாம்பியன்ஸ் டிராபி, உலகக் கோப்பை, ஆசியக்கோப்பை ஆகிய மூன்று விதமான தொடர்களிலும் குறைந்தது 50-க்கு மேல் சராசரி வைத்திருப்பவர்கள் கங்குலி மற்றும் ஷிகர் தவான்தான்.

சதங்கள் அடிப்படையில் ரோகித் மற்றும் கோலியை விட முன்னணியில் உள்ளார் தவான்.

எனினும் இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிராக அவர் இன்னும் சதம் எடுக்கவில்லை. குறிப்பாக நியூசிலாந்து அணிக்கு எதிராக அவர் ஐசிசி தொடர்களில் விளையாடவில்லை.

ஐசிசி தொடர்களில் தற்போது இந்திய அணியில் உள்ள ரோகித், கோலி, தவான் மூவருமே வெவ்வேறு வகையில் நாயகனாக இருந்திருக்கிறார்கள்.

தவான் பெருந்தொடர்களில் விளையாடிய 29 போட்டிகளில் குறைந்தது 14 போட்டிகளில் 50 ரன்களை கடந்துள்ளார்.

2013 மற்றும் 2017 சாம்பியன்ஸ் டிராபி தொடர்களை இரண்டிலும் அதிக ரன்கள் குவித்தவர் தவான். இரண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் தங்க மட்டை வென்ற நபர் தவான் மட்டுமே.

2015 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஐந்தாமிடம் பிடித்தார். ஆனால் அதிக ரன்கள் விளாசிய இந்திய வீரர் தவான்தான். அவர் எட்டு போட்டிகளில் 412 ரன்கள் விளாசியிருந்தார்.

படத்தின் காப்புரிமை DIBYANGSHU SARKAR

தவான் இதுவரை ஒருநாள் போட்டிகளில் 17 சதங்கள் விளாசியுள்ளார். அதில் எட்டு, பெருந்தொடர்களில் எடுக்கப்பட்டவை.

ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிராக அவர் இதுவரை ஒரு சதம் கூட எடுத்ததில்லை.

ஆஸ்திரேலியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்