யுவராஜ் சிங் - இந்திய அணிக்கு ஆற்றிய பங்களிப்பு என்ன?

யுவராஜ் சிங் படத்தின் காப்புரிமை MANAN VATSYAYANA

''நான் எப்போதும் என்னை நம்புவதை நிறுத்தியதில்லை...எப்போதும் உங்களை நம்புங்கள்'' - இன்று (10.06.2019) ஓய்வு முடிவை அறிவித்த போது யுவராஜ் சிங் இப்படிச் சொன்னார்.

யுவராஜ் சிங் தன் மீது நம்பிக்கை கொண்டிருந்தார்; இந்திய கிரிக்கெட் வாரியம் யுவராஜ் மீது நம்பிக்கை கொண்டிருந்தது; இந்திய ரசிகர்கள் யுவராஜை நம்பினார்கள்.

இதனால்தான் யுவராஜ் சிங் அடிக்கடி இந்திய அணியில் உள்ளே - வெளியே ஆட்டம் ஆடியிருக்கிறார்.

யுவராஜ் சிங் காலத்தில் விளையாடிய சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் வரலாற்றைப் பார்த்தால் யுவராஜ் அளவுக்கு ஃபார்ம் அவுட் ஆனதும் பின்னர் மீண்டும் வந்து 'மேட்ச் வின்னிங்' இன்னிங்ஸ் விளையாடியவர்களும் மிகக்குறைவு.

19 வயதில் இந்தியாவுக்கு கிரிக்கெட் ஆட வந்த யுவராஜ் சிங் கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கு பிறகு ஓய்வு பெற்றுள்ளார்.

''எனது 25 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்வுதான் எனக்கு எல்லாம் கற்றுக்கொடுத்தது'' என்கிறார் யுவராஜ் சிங்.

படத்தின் காப்புரிமை Simon Hofmann
Image caption யுவராஜ் சிங்

19 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 2000-ம் ஆண்டில் அக்டோபர் மாதம் நைரோபியில் ஐசிசி நாக் அவுட் டிராஃபியில் காலிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா விளையாடியது.

சச்சின், கங்குலி, டிராவிட் , வினோத் காம்ளி என நட்சத்திர வீரர்கள் வரிசையாக அவுட் ஆக, சர்வதேச போட்டியில் முதன்முறையாக பேட்டிங் செய்த யுவராஜ் சிங் ஆஸ்திரேலியாவின் கிளென் மெக்ராத், பிரெட் லீ, கில்லெஸ்பி, ஸ்டீவ் வாக் என நட்சத்திர பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு 80 பந்துகளில் 12 பௌண்டரிகளோடு 84 ரன்கள் குவித்து அவுட் ஆனார் யுவராஜ் சிங்.

வலுவான ஆஸ்திரேலியாவை இந்தியா கால் இறுதியில் வெளியேற்றியது. 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இந்தியா அரை இறுதிக்கு முன்னேற உறுதுணையாக இருந்த யுவராஜ் சிங் ஆட்டநாயகன் விருது வென்றார்.

படத்தின் காப்புரிமை ALEXANDER JOE

சர்வதேச போட்டியில் பேட்டிங் பிடித்த முதல் ஆட்டத்திலேயே அரை சதம் விளாசி ஆட்ட நாயகன் விருதை வென்ற யுவராஜ் சிங், அதன் பின்னர் ஒருநாள் போட்டிகளில் 27 முறை ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

உலக அளவில் 27 முறை ஆட்ட நாயகன் வென்றவர்கள் யுவராஜ் சிங் மற்றும் ஏபி டி வில்லியர்ஸ். ஒருநாள் போட்டிகளில் 27 முறைக்கு மேல் ஆட்டநாயகன் விருது வென்றவர்கள் 13 பேர். அதில் சச்சின்(62), கோலி (32), கங்குலி(31) ஆகியோர் மட்டுமே யுவராஜை விட முன்னிலையில் உள்ள இந்திய வீரர்கள். அந்த வகையில் யுவராஜ் சிங் மிகச்சிறந்த மேட்ச் வின்னர்களில் ஒருவர் என்பது மிகத்தெளிவு.

படத்தின் காப்புரிமை INDRANIL MUKHERJEE

மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேனாக களமிறங்கும் யுவராஜ் சிங், சர்வதேச போட்டிகளில் தனது வேகம் குறைந்த இடது கை சுழற்பந்து வீச்சில் பல பேட்ஸ்மேன்களை திணறடித்திருக்கிறார்.

அபாரமான சிக்ஸர்களுக்கும் ஃபீல்டிங்குக்கும் அறியப்படும் யுவராஜ் சிங் உண்மையில் பந்துவீச்சிலும் இந்திய அணிக்கு குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார்.

கங்குலிக்கும் தோனிக்கும் அவர் முக்கிய துருப்புச் சீட்டாக விளங்கினார். குறிப்பாக 2011 உலகக்கோப்பையில் யுவராஜ் சிங் வலையில் ஏகப்பட்ட பேட்ஸ்மேன்கள் வீழ்ந்தனர்.

ஒட்டுமொத்தமாக சர்வதேச அரங்கில் 148 பேரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 161 இன்னிங்சில் பந்து வீசி 111 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார்.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் (2000) தொடர் நாயகன் விருது பெற்ற யுவராஜ் சிங், 2007 டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்ல மிகப்பெரிய பங்காற்றினார். 2011 உலகக்கோப்பையை இந்தியாவை இறுதி வரை அழைத்து வந்ததில் மிகப்பெரிய பங்கு அவருடையது.

மிகப்பெரிய தொடர்களிலும் முக்கியமான போட்டிகளிலும் இந்தியாவுக்கு நம்பகமான வீரராக இருந்த யுவராஜ் சிங், தொடர்ச்சியாக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறியிருந்தார். இதனால் அடிக்கடி போட்டிகளில் சேர்க்கப்பட்டாலும் அடிக்கடி நீக்கப்பட்டார்.

படத்தின் காப்புரிமை Clive Mason

யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி மூன்றாண்டுகள் கழித்து வங்கதேச அணிக்கு எதிராக முதல் சதத்தை எடுத்தார்.

கிளென் மெக்ராத், முத்தையா முரளிதரன், ஷேன் வார்னே, ஷேன் பாண்ட், ஃபிளின்டாப், காலிமோர், வாசிம் அக்ரம், சோயிப் அக்தர், பிரெட் லீ, ஸ்டெயின், ஸ்டூவர்ட் பிராட், மலிங்கா உள்ளிட்ட சிறந்த பந்துவீச்சாளர்களை சந்தித்திருக்கிறார் யுவராஜ்.

இதில் முரளிதரனிடம் ஒன்பது முறை வீழ்ந்திருக்கிறார். ஜான்சன், வாஸ் உள்ளிட்டோரிடம் ஆறு முறைவீழ்ந்துள்ளார் .

2007-ல் டிராவிட் விலகியபிறகு தோனி கேப்டனாகவும், யுவராஜ் சிங் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர். தோனி - யுவராஜ் சிங் இணையின் காலகட்டத்தில் இந்திய அணி பல உச்சங்களை அடைந்தது.

2007 உலகக்கோப்பையில் யுவராஜ் சிங்கின் அதிரடி ஆட்டம் இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேற உதவியது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக அவர் அரை சதம் விளாசியிருந்தார்.

2011 உலகக்கோப்பையில் நான்கு அரை சதம் மற்றும் சென்னையில் ஒரு சதம் உட்பட 362 ரன்களை குவித்தார். மேலும் 15 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த உலகக்கோப்பைத் தொடரில் நான்கு முறை ஆட்டநாயகன் விருதை வென்றார். 2011 உலகக்கோப்பையின் தொடர் நாகயகனும் அவர் தான்.

1996-ல் இலங்கையின் அரவிந்த டி சில்வா மற்றும் 1999-ல் தென்னாப்பிரிக்காவின் லான்ஸ குளூஸ்னர் ஆகியோருக்கு பிறகு உலகக்கோப்பை தொடரொன்றில் நான்கு ஆட்டநாயகன் விருது வென்றவர் யுவராஜ் சிங் மட்டுமே.

2011 உலகக்கோப்பைக்கு பிறகு அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது 30.

மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்ட பின்னர் சில மாதங்களிலேயே அவர் கிரிக்கெட் விளையாடத் துவங்கினார்.

படத்தின் காப்புரிமை Ryan Pierse

புற்றுநோய் வந்தபிறகும் தனது விடாமுயற்சி மற்றும் நம்பிக்கை மூலம் சிறப்பாக விளையாட முயற்சிசெய்தார். அவருக்கு இந்திய அணியிலும் இடம் கிடைத்தது.

2012 நவம்பர் முதல் 2014 ஏப்ரல் வரை அவர் இந்திய அணியில் இருந்தார். இந்த காலகட்டங்களில் அவ்வப்போது டி20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் ஒருநாள் போட்டிகளில் அவர் பெரியளவில் சோபிக்கவில்லை.

2014 டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 43 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். ஆனால் இறுதிப்போட்டியில் 21 பந்துகளை சந்தித்து அவர் 11 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இலங்கை அணியிடம் இந்தியா கோப்பையை இழக்க மிகமுக்கிய காரணியாக யுவராஜின் அந்த இன்னிங்ஸ் அமைந்தது. இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்த அந்த ஆட்டத்துக்கு பிறகு யுவராஜ் சிங் 2015 உலகக் கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை.

அதன்பின்னர் சுமார் 20 மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் தனது கடும் உழைப்பால் இந்திய அணியில் நுழைந்தார்.

இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது டி20 அணியில் யுவராஜ் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் கடைசி போட்டியில் சேஸிங்கில் யுவராஜ் ஒன்பது பந்தில் ஐந்து ரன்கள் எடுத்திருந்தபோது இந்திய அணியின் வெற்றிக்கு ஆறு பந்தில் 17 ரன்கள் தேவைப்பட்டது.

ஆண்ட்ரூ டை வீசிய அந்த ஓவரில் முதல் பந்தை பௌண்டரிக்கும் இரண்டாவது பந்தை சிக்சருக்கும் விளாசினார் யுவராஜ். ரெய்னாவின் அபாரமான ஒரு பௌண்டரி மூலம் இந்தியா ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டி20 தொடரை 3-0 என ஒயிட்வாஷ் செய்து வென்றது.

நான்கு ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு 2017-ல் ஒருநாள் போட்டிகளில் அவர் அணியில் சேர்க்கப்பட்டார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் மூன்று போட்டிகளில் 210 ரன்கள் குவித்தார்.

2017 சாம்பியன்ஸ் டிராஃபியில் லீக் சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் அபாரமாக ஒரு அரை சதம் விளாசினார். ஆனால் இறுதிப்போட்டியில் 22 ரன்களில் அவுட் ஆனார்.

2017-க்கு பிறகும் யுவராஜ் சிங் உள்ளூர் போட்டிகளில் விளையாடி உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க முயற்சி செய்தார். ஆனால் 2017 உலகக்கோப்பையில் அவர் சேர்க்கப்படவில்லை.

இந்நிலையில் ஓய்வை அறிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை LAKRUWAN WANNIARACHCHI

2017-ம் ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 39 ரன்கள் எடுத்ததே அவரது கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டியாக அமைந்தது. இப்போட்டியில் பிஷூ பந்தில் அவர் அவுட் ஆனார்.

2011-ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் பங்கேற்றதுதான் யுவராஜின் கடைசி டெஸ்ட் போட்டி.

யுவராஜ் சிங் ஐபிஎல்லிலும் ஒரு மிகப்பெரிய நட்சத்திர வீரராக திகழ்ந்தார். அவரை ஏலத்தில் எடுக்க பல அணிகள் போட்டி போட்டு வந்துள்ளன. பல்வேறு அணிகளிலும் அவர் விளையாடியிருக்கிறார்.

இரண்டு முறை ஹாட்ரிக் விக்கெட் எடுத்து ஐபிஎல்லில் அவர் சாதனை படைத்துள்ளார். ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன மிகச்சில வீரர்களில் யுவராஜும் ஒருவர்.

2014 ஐபிஎல் ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அவரை 14 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது, 2015 சீசனில் 16 கோடி ரூபாய்க்கு அவர் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இணைந்தார்.

படத்தின் காப்புரிமை RAVEENDRAN

யுவராஜ் சிங்கின் இன்றைய ஓய்வு அறிவிப்புக்கு பிறகு சச்சின் டெண்டுல்கர் ஒரு ட்வீட் செய்திருக்கிறார்.

'' என்ன ஒரு அருமையான கரியரை பெற்றீர்கள் யுவி ! அணிக்குத் தேவைப்பட்ட போதெல்லாம் உண்மையில் ஒரு சாம்பியன் வீரராக திகழ்ந்தீர்கள். களத்துக்கு உள்ளேயும் சரி வெளியேயும் சரி உங்களின் ஏற்ற இறக்க வாழ்வில் மிகப்பெரிய அளவில் போராடினீர்கள். உங்களது இரண்டாவது இன்னிங்க்ஸுக்கு வாழ்த்துக்கள் மேலும் நீங்கள் கிரிக்கெட்டுக்கு செய்த எல்லாவற்றுக்கும் நன்றி.'' என அந்த ட்வீட்டில் குறிப்பிட்டிருக்கிறார் சச்சின் டெண்டுல்கர்.

'' உங்கள் கதை எப்போதும் நிலைத்திருக்கும்'' என ட்வீட் செய்துள்ளார் ஹர்பஜன் சிங்.

யுவராஜ் சிங்கின் சில முக்கியமான இன்னிங்ஸ்கள்

1. 2002 - நாட்வெஸ்ட் கிரிக்கெட் கோப்பை

இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் பெற்ற வெற்றிகளில் மிக முக்கியமானதாக கருதப்படும் போட்டி இது.

நாட்வெஸ்ட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும் இங்கிலாந்தும் மோதின. இங்கிலாந்து 325 ரன்கள் குவித்தது. இமாலய இலக்கைத் துரத்தியது இந்தியா.

படத்தின் காப்புரிமை Tom Shaw

2000 -2002 நாட்வெஸ்ட் தொடருக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் தொடர்ந்து இந்திய அணி சேஸிங்கில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்தது. இந்திய அணி சச்சின் டெண்டுல்கரை சேஸிங்கில் மலைபோல நம்பியிருந்த காலகட்டத்தில் கோப்பையை வெல்லும் முனைப்போடும் இந்தியா இலக்கைத் துரத்தியது.

146 ரன்களில் 5 விக்கெட்டுகளை இந்தியா இழந்திருந்தபோது யுவராஜ் சிங் மற்றும் கைஃப் ஜோடி சேர்ந்தனர்.

யுவராஜ் சிங் 63 பந்தில் 69 ரன்கள் எடுத்தார். கைப் 87 ரன்கள் எடுத்தார். இந்தியா இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று கிரிக்கெட் உலகை அதிர வைத்தது.

2. ஆறு பந்தில் ஆறு சிக்ஸர்

உலகக்கோப்பை டி20 போட்டியில் லீக் சுற்றில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 218 ரன்கள் குவித்தது இந்தியா.

இப்போட்டியில் 12 பந்துகளில் அரை சதம் கடந்து உலக சாதனை படைத்தார் யுவராஜ் சிங். 16 பந்துகளில் 58 ரன்கள் எடுத்திருந்த யுவராஜை ஃபிளின்டாஃப் அவுட் செய்தார்.

படத்தின் காப்புரிமை Laurence Griffiths

ஆட்டத்தின் 18-வது ஓவரில் ஃபிளின்டாஃப் பந்தில் இரண்டு பவுண்டரிகள் விளாசிய யுவராஜ் சிங், 19-வது ஓவரில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஆறு பந்துகளிலும் ஆறு சிக்ஸர்கள் விளாசி தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றார்.

3. உலகக் கோப்பை காலிறுதி ஆட்டம், 2011

1992, 1996, 1999, 2003 உலகக்கோப்பைகளில் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் தோற்றிருந்தது. 2003 உலகக் கோப்பையை இந்தியா ஆஸ்திரேலியாவிடம் இழந்திருந்தது.

1999,2003,2007 உலகக் கோப்பையை ஆஸ்திரேலியாவை வென்றிருந்த நிலையில் 2011 உலகக்கோப்பையில் காலிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை சந்தித்தது இந்தியா.

படத்தின் காப்புரிமை Matthew Lewis
Image caption யுவராஜ் சிங்

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தது. ஹாடின், கிளார்க் விக்கெட்டை யுவராஜ் சிங் வீழ்த்த, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 260 ரன்கள் எடுத்தது ஆஸி.

இந்தியா 187/5 என்ற ஸ்கோரில் இருந்தபோது ரெய்னாவும் யுவராஜ் சிங்கும் ஜோடி சேர்ந்து இந்தியாவை வெற்றிபெற வைத்தனர். யுவராஜ் சிங் 65 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினார்.

யுவராஜ் சிங்கின் இன்னிங்ஸால் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவின் நின்ற வெற்றிப்பயணம் முடிவுக்கு வந்தது

4. யுவராஜ் சிங் 150*

2017-ம் ஆண்டு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்தது இங்கிலாந்து.

கட்டாக்கில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா வோக்ஸின் அபார பந்துவீச்சில் 25 ரன்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தது.

படத்தின் காப்புரிமை Jan Kruger-IDI

நான்கு ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இடம்பெற்ற யுவராஜ் சிங் தோனியுடன் இணைந்து ஒரு மெகா இன்னிங்ஸ் விளையாடினார்.

50 ஓவர்கள் முடிவில் இந்தியா 381 ரன்கள் குவித்தது.

யுவராஜ் சிங் 127 பந்துகளில் 150 ரன்கள் குவித்தார். தோனி 122 பந்துகளில் 134 ரன்கள் எடுத்தார்.

தோனி - யுவராஜ் சிங் இணை நான்காவது விக்கெட்டுக்கு 256 ரன்களைச் சேர்ந்தது.

ஆட்டத்தின் 43-வது ஓவரில் யுவராஜ் ஆட்டமிழக்கும்போது 21 பௌண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் விளாசியிருந்தார்.

புற்றுநோய் பாதிப்புக்கு பின் ஆறு ஆண்டுகள் கழித்து யுவராஜ் அடித்த இந்த சதம்தான் அவரது கடைசி சதம். இந்த போட்டியில் அவர் எடுத்த 150 ரன்கள்தான் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் யுவராஜ் சிங்கின் அதிகபட்ச ரன். இப்போட்டியில் யுவராஜ் சிங் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

படத்தின் காப்புரிமை AAMIR QURESHI

30 வயதிலேயே 250 -க்கும் அதிகமான ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றிருத்த யுவராஜ் சிங் புற்றுநோய் பாதிப்புக்கு பிந்தைய இன்னிங்சில் விளையாடிய போட்டிகளோடு சேர்த்து 304 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 14 சதம், 52 அரை சதம் விளாசியுள்ளார்.

நடு வரிசையில் இறங்கக்கூடிய ஒரு இடது கை அதிரடி வீரர், பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் எனும் அம்சத்தை சிறப்பாக பயன்படுத்தி ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்கை முக்கிய துருப்புச்சீட்டாக்கி உலகக்கோப்பையை வென்றது இந்தியா.

இனி அவரது இடத்தை முழுமையாக நிரப்பப்போகும் வீரர் யார்?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்