ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் : டேவிட் வார்னர் சதம்; முகமது ஆமீர் 5 விக்கெட்டுகள் - பாகிஸ்தான் தோற்றது ஏன்?

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் படத்தின் காப்புரிமை Andy Kearns

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த போட்டியில் ஆஸ்திரேலியாவும் பாகிஸ்தானும் மோதின. இதில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

ஐசிசி ஆண்கள் உலகக்கோப்பை, டான்டன்

ஆஸ்திரேலியா 307(49 ஓவர்கள்) வார்னர் 107, ஃபின்ச் 82, முகமது ஆமீர் 5-30

பாகிஸ்தான் 266(45.4 ஓவர்கள்) : இமாம் 53, கம்மின்ஸ் 3 - 33

ஆஸ்திரேலியா 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

டேவிட் வார்னர் மீண்டும் அணிக்குள் வந்து அடித்த முதல் சதம், முகமது ஆமீரின் ஐந்து விக்கெட்டுகள், பாகிஸ்தானின் சொதப்பல் ஃபீல்டிங் என சுவாரஸ்யமாக முடிந்திருக்கிறது ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி.

ஒரு ஆண்டு தடைக்கு பிறகு அணிக்குள் நுழைந்த டேவிட் வார்னர் வழக்கத்துக்கு மாறாக அதிரடி பாணியை கைவிட்டு பொறுமையாக விளையாடினார். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தடுமாறி அரை சதம் எடுத்து அவுட் ஆன வார்னர் நேற்று பாகிஸ்தானுக்கு எதிராக சதமடித்தார்.

படத்தின் காப்புரிமை Alex Davidson

ஆஸ்திரேலியாவின் அணித்தலைவர் ஃபின்ச் 82 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா 307 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணியின் கடைசி ஆறு விக்கெட்டுகளை 30 ரன்களில் சுருட்டியது பாகிஸ்தான். முகமது ஆமீர் 10 ஓவர்கள் வீசினார் அதில் இரண்டு ஓவர்கள் மெய்டனாக அமைந்தன. அவரது பந்துவீச்சில்

ஆரோன் ஃபின்ச், ஷான் மார்ஷ், உஸ்மான் கவாஜா, அலெக்ஸ் கேரி, மிச்சேல் ஸ்டார்க் ஆட்டமிழந்தனர்.

முப்பது ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆமீர், ஆஸ்திரேலியாவின் ரன் வேகத்தை மட்டுப்படுத்தியது மட்டுமின்றி 49 ஓவர்களில் அந்த அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வரவும் காரணமாக இருந்தார்.

டான்டனில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் டாஸ் வென்றது. ஆனால் பந்துவீச்சை தேர்வு செய்திருந்தது.

முன்னதாக இந்திய அணியிடம் சேஸிங்கில் தோல்வியடைந்த ஆஸ்திரேலிய 2017-ம் ஆண்டிலிருந்து பாகிஸ்தானுக்கு எதிராக தான் விளையாடிய எட்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற தெம்புடன் களமிறங்கியது.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் 23-வது ஓவரில்தான் பிரிந்தனர். ஆரோன் ஃபின்ச் 84 பந்துகளில் ஆறு பௌண்டரி, நான்கு சிக்ஸர்கள் உட்பட 82 ரன்கள் விளாசி அவுட் ஆனார்.

ஒரு கட்டத்தில் 189/2 ரன் எனும் நிலையில் இருந்த ஆஸ்திரேலியா

330 -350 ரன்கள் குவிக்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால், மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல்லை ஷஹீன் அஃப்ரிடி போல்டாக்க ஆஸ்திரேலிய அணியின் சரிவு துவங்கியது.

ஆஸ்திரேலியா அணி கடைசி 15 ஓவர்களில் 84 ரன்கள் மட்டும் எடுத்து எட்டு விக்கெட்டுகளை இழந்தது.

பாகிஸ்தான் அணியும் சேஸிங்கில் ஆஸ்திரேலியாவை போலவே கடைசி எட்டு விக்கெட்டுகளை 130 ரன்களுக்கு இழந்தது.

308 ரன்கள் எனும் இலக்கைத் துரத்திய பாகிஸ்தான் அணி 25 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்திருந்தது.

பேட் கம்மின்ஸ் பந்தில் இமாம் உல் ஹக் அவுட்டாக அதன்பின்னர் விக்கெட் சரிவு ஏற்பட்டது. 45.4 ஓவர்களிலேயே பாகிஸ்தான் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

படத்தின் காப்புரிமை Alex Davidson

நன்றாக விளையாடிக் கொண்டிருந்த வகாப் ரியாஸ் மற்றும் கடைசி நேரத்த்தில் விரைவாக ரன்கள் சேர்க்கும் திறன் கொண்ட முகமது ஆமீர் இருவரையும் 45-வது ஓவரில் வீழ்த்தினார் மிச்சேல் ஸ்டார்க்.

கடைசி விக்கெட்டாக பாகிஸ்தான் அணியின் அணித்தலைவர் சர்ஃபிராஸ் அகமது ரன் அவுட் முறையில் வீழ்ந்தார். அவர் 48 பந்துகளில் 40 ரன்கள் எடுத்திருந்தார்.

பாகிஸ்தான் அணி 135 ரன்களில் இருந்து 160 ரன்களை தாண்டுவதற்குள் நான்கு முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. இமாம் உல் ஹக், முகமது ஹஃபீஸ், சோயப் மாலிக், ஆசிஃப் அலி ஆகியோர் அவுட் ஆயினர். சோயிப் மாலிக் டக் அவுட் ஆனார்,

முகமது ஹபீஸ் சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த நிலையில் ஆஸ்திரேலிய அணித்தலைவர் ஃபின்ச் பந்துவீச்சில் களமிறங்கி அவரது விக்கெட்டை சாய்த்தார்.

ஆறு விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எனும் ஸ்கோரின் போது பேட்டிங்கில் களமிறங்கிய பாகிஸ்தானின் பந்துவீச்சாளர் ஹசன் அலி 15 பந்துகளில் அதிரடியாக ஆடி மூன்று சிக்ஸர்கள் மற்றும் மூன்று பௌண்டரிகள் விளாசி 32 ரன்கள் குவித்தார். ஹசன் விக்கெட்டை கேன் ரிச்சர்ட்சன் கைப்பற்றினார்.

அதன்பின்னர் பாகிஸ்தான் அணித்தலைவரோடு இணைந்து பேட்டிங் பிடித்த வகாப் ரியாஸ் தனது பங்குக்கு மூன்று சிக்ஸர்கள் விளாசினார். அவர் 39 பந்துகளில் இரண்டு பௌண்டரி மூன்று சிக்ஸர்கள் உதவியோடு 45 ரன்கள் எடுத்தார்.

நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தான் அணி நேற்றைய தோல்விக்குப் பின் மூன்று புள்ளிகளோடு புள்ளிப்பட்டியலில் எட்டாமிடத்தில் இருக்கிறது .

ஆஸ்திரேலியா ஆறு புள்ளிகளோடு இரண்டாமிடத்துக்கு முன்னேறியுள்ளது. வரும் ஞாயற்றுக்கிழமை பாகிஸ்தான் அணி இந்தியாவைச் சந்திக்கிறது.

இந்த உலகக்கோப்பைத் தொடரில் இதுவரை மூன்று போட்டிகள் மழையால் கைவிடப்பட்டுள்ளன. உலகக்கோப்பை வரலாற்றிலேயே இது முதல்முறை. தொடர்ச்சியாக இரண்டு போட்டிகள் மழையால் கைவிடபப்ட்ட நிலையில் இங்கிலாந்தில் உலகக்கோப்பையை காண வந்த ரசிகர்களுக்கு நேற்று ஆறுதலாக அமைந்தது.

படத்தின் காப்புரிமை Michael Steele

நேற்றைய போட்டி வேகப்பந்து வீச்சாளர்கள் நன்றாக பந்தை எழும்பச் செய்வதற்கு ஒத்துழைக்கும் விதமாக ஆடுகளம் இருந்தது. ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரார்கள் பாகிஸ்தானின் மோசமான ஃபீல்டிங் மற்றும் பௌலிங்கை பயனப்டுத்தி விரைவாக ரன்கள் சேர்த்தனர்.

பாகிஸ்தான் பேட்டிங்கின்போது பேட் கம்மின்ஸ் பந்தில் இமாம் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்தபோது அரங்கமே அமைதியானது என்கிறார் டான்டனில் பிபிசி ஸ்போர்ட்டின் ஸ்டீஃபன் ஷெமில்ட்.

வகாப் ரியாஸ் அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த போது பாகிஸ்தான் அணிக்கு சற்று வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆனால் ஸ்டார்க் பந்தில் வகாப் அவுட்டானதும் நிலை மாறியது. வகாப் ரியாஸ் பேட்டில் பட்டு கேட்ச் பிடித்ததாக ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி அப்பீல் செய்தபோது கள நடுவர் அவுட் தரவில்லை.

ஆனால் ஸ்டார்க் ரிவ்யூவில் வென்றார். அதன் பின்னர் எட்டு பந்துகளில் பாகிஸ்தான் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

வார்னரின் 'ரிட்டர்ன்' இன்னிங்ஸ்

இடது கை பேட்ஸ்மேனான வார்னர் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்து விரைவாக ரன்கள் சேர்ப்பதில் புகழ்பெற்றவர். கடந்த 2019 ஐபிஎல் சீசனில் அதிவேகமாக ரன்களை குவித்தவர் அத்தொடரில் அதிக ரன்கள் குவித்தவரும் அவர்தான்.

ஆனால் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அவனது இன்னிங்ஸ் விமர்சனத்துக்கு உள்ளானது.

நேற்று ஃபின்ச் கொடுத்த கேட்சை இரண்டு முறை பாகிஸ்தான் வீரர்கள் தவறவிட்டனர். அதன் பின்னர் ஆமீரிடம் அவர் அவுட்டானார்.

படத்தின் காப்புரிமை Alan Martin

வார்னர் அதன்பின்னர் சதமுடித்தார். மூன்று இலக்க ரன்களை தொடட்டவுடன் அவருக்கே உரிய பாணியில் துள்ளிக்குதித்து

ஆர்ப்பரித்தார். வார்னர் 104 ரன்கள் எடுத்திருக்கும் கொடுத்த கேட்ச் வாய்ப்பை பாகிஸ்தான் தவறவிட்டது. ஆனால் 107 ரன்கள் எடுத்திருக்கும்போது ஆட்டமிழந்தார்.

வார்னர் எடுத்த ரன்கள் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு முக்கிய காரணியாக அமைந்தது.

முகமது ஆமீரின் அபார பந்துவீச்சு வீணானது

முகமது ஆமீர் நேற்று அபாரமாக வீசினார். அவருக்கு ஓரளவு பக்கபலமாக இருந்தது மற்றொரு இடது கை வேகப்பந்து வீச்சாளரான வகாப் ரியாஸ்.

இவ்விருவரைத் தவிர மற்றவர்கள் கட்டுக்கோப்பாக பந்துவீசவில்லை.

வேகம் மற்றும் லெந்த் ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்தி வீசினார் ஆமீர். பாகிஸ்தான் ஆட்டத்தின் துவக்கத்தில் கேட்ச்களை கோட்டைவிட்டது. ஆனால், அவர்கள் கேட்ச் பிடிக்கத் துவங்கியதும் ஆமீரின் முயற்சிகளுக்கு பலன் கிடைக்கத் துவங்கியது. முகமது ஆமீர் தற்போது மூன்று போட்டிகளில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்த உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.

''பாகிஸ்தானின் பேட்டிங்கின்போது, ஹசன் அலி சிக்ஸர்களும் பௌண்டரிகளுமாக விளாசியதும் வகாப் ரியாஸ் அதிரடியாக ரன்கள் குவித்ததும் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு தடை போடுவது போலத் தெரிந்தது. அந்த சமயங்களின் மைதானத்தில் பாகிஸ்தான் ரசிகர்கள் முன்னெப்போதுமில்லாத வகையில் ஆர்ப்பரித்தனர்'' ஸ்டீஃபன் ஷெமில்ட்.

படத்தின் காப்புரிமை Alex Davidson

ஆட்டம் சூடுபிடித்தபோது வகாப் ரியாஸ் அவுட் குறித்து ரிவ்யூ செய்தார். அது ஆஸ்திரேலியாவுக்கு பெரும் பலன் தந்தது. கிளென் மேக்ஸ்வெல் நேரடியாக ஸ்டம்பை நோக்கி அடித்து பாகிஸ்தான் அணித் தலைவர் சர்ஃபிராஸ் அகமதை வெளியேற்றியபோது பாகிஸ்தான் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

''இந்த பிட்ச்களில் எப்படி பந்து வீச வேண்டும் என்பதை ஆமீர் தெரிந்து வைத்துள்ளார். பந்துவீச்சுக்கு சாதகமாக அதாவது பந்துகள் நன்றாக எழும்பும்போதும் காற்றில் நகரும்போதும் அதைப் பயன்படுத்திக்கொள்வதில் வல்லவராக இருக்கிறார் ஆமீர்'' என்கிறார் இங்கிலாந்து அணியின் முன்னாள் அணித் தலைவர் மைக்கேல் வான்.

'இந்த பிட்ச்களில் இச்சகாப்தத்தில் முப்பது ரன்கள் கொடுத்து ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றுவது ஆச்சர்யமான விஷயம் என்கிறார் வான்.

படத்தின் காப்புரிமை SAEED KHAN
Image caption முகமது ஆமீர்

''மிச்சேல் ஸ்டார்க் ஆட்டத்தின் இறுதி ஓவர்கள் திருப்புமுனை பந்துவீச்சை வெளிப்படுத்தி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு வெற்றியைத் தேடித்தந்தார். அதே போன்றதொன்று ஆட்டத்தை வெளிப்படுத்தி தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் ஆஸ்திரேலியாவை காப்பாற்றியிருக்கிறார்'' என்கிறார் ஜெஃப் லெமன்.

'' நான் மிகவும் ஏமாற்றத்தில் உள்ளேன். 15 பந்துகளில் மூன்று விக்கெட்டுகளை இழந்தோம். அது தான் தோல்விக்குக் காரணம். முதல் இருபது ஓவர்களில் அதிகப்படியான ரன்களை விட்டுக்கொடுத்தோம். இந்த பிட்ச் 270-280 ரன்களுக்கானது. போட்டியை வெல்ல வேண்டுமெனில் டாப் 4 பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிக்க வேண்டியது அவசியம்'' என்றார் சர்ஃபிராஸ் அகமது.

நேற்றைய போட்டியில் ஆட்டநாயகனாக டேவிட் வார்னர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வரும் சனிக்கிழமை லண்டனிலுள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இலங்கையை எதிர்கொள்கிறது ஆஸ்திரேலியா.

சிட்டுக்குருவிகளை மீட்கும் ஒரு தமிழ் பெண்ணின் முயற்சி

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :