உலகக்கோப்பை 2019: இந்தியா vs நியூசிலாந்து போட்டி மழையால் ரத்து

இந்தியா V நியூசிலாந்து போட்டி நடைபெறுவது சாத்தியமா? படத்தின் காப்புரிமை BCCI

ஐசிசி 2019 உலகக்கோப்பைத் தொடரில், இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நாட்டிங்காமில் நடைபெறுவதாக இருந்த போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது.

நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில், இந்த போட்டியுடன் இதுவரை நான்கு போட்டிகள் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய நேரப்படி மதியம் மூன்று மணியளவில் தொடங்குவதாக இருந்த இந்த போட்டி, மழையின் காரணமாக பல முறை ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும், தொடர்ந்து மழை பொழிந்து வருவதால் இந்தியா - நியூசிலாந்து இடையிலான போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இந்தியா, நியூசிலாந்து ஆகிய இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு இலங்கை மற்றும் வங்கதேசத்துக்கு இடையேயான ஆட்டம் செவ்வாய்கிழமை அன்று பிரிஸ்டலில் நடக்கவிருந்தது. ஆனால், மழையின் காரணமாக அந்த போட்டி நிறுத்தபட்டது.

அதேபோல், பிரிஸ்டலில் நடைபெறவிருந்த இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான ஆட்டமும், சௌதாம்ப்டனில் நடைபெறவிருந்த தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான ஆட்டமும் சில ஓவர்களுக்கு பிறகு மழையின் காரணமாக நிறுத்தப்பட்டது.

இந்திய அணி தான் விளையாடிய இரு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளது. இன்று நடைபெற இருந்த போட்டியை காண காத்திருந்த ஏராளமான ரசிகர்கள், மழையால் போட்டி கைவிடப்பட்டதை அடுத்து ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்