இந்தியா நியூசிலாந்து போட்டி மழையால் ரத்து : உலகக்கோப்பைக்கு இங்கிலாந்தை ஏன் தேர்வு செய்தீர்கள் ஐசிசி? - ரசிகர்கள் கேள்வி

உலகக் கோப்பை படத்தின் காப்புரிமை Getty Images

உலகக் கோப்பை என்றவுடன் ஒரு பெரும் கொண்டாட்ட மனநிலையுடன் இருந்தது நாம்தானா? தற்போது அது வெறும் ஒரு போட்டித் தொடராக மட்டுமே பார்க்கப்படுகிறதா? இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த போட்டி ரத்தானதில் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் கிடைத்துள்ளது. இதுகுறித்து என்ன சொல்கிறார்கள் லண்டனில் உள்ள ரசிகர்கள்?

நான் ட்ரென்ட் பிரிட்ஜூக்கு அருகில் செல்லும் போது என்னால் `இந்தியா, இந்தியா` என்ற கோஷங்களை கேட்க முடிந்தது. சொல்லப்போனால் நான் உள்ளே செல்வதற்கு மிகவும் உற்சாகமாக இருந்தேன்; அப்போது ஆடுகள சோதனையால் ஆட்டம் தாமதமாகியிருந்தது. ஆனால் என்னுடைய உற்சாகம் ஒருசில நிமடங்களில் அடங்கிப்போனது.

ஐசிசி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி ரத்தானது என்று அறிவித்தபோது, நான் மைதானத்தின் உள்ளே இல்லை. ஆனால் மைதானத்தை விட்டு வெளியே வரும் இந்திய ரசிகர்கள் பெரும் மன வருத்தத்தில் வருவதை என்னால் காண முடிந்தது. எல்லாம் முடிந்துவிட்டது. இரு அணிகளுக்கும் ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. மேலும் ஒரு பெரும் போட்டித்தொடரின் நான்காவது முறையாக மழையால் ஒரு ஆட்டம் ரத்தானது.

என்னை பொருத்தவரையில் நான் சென்ற விமானம் லண்டனில் காலை 9.20 மணிக்கு தரையிறங்கியபோது இந்தியா - நியூசிலாந்து ஆட்டம் தொடங்கியிருக்கும் என நினைத்தேன்.

ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகனுக்கும் உலகக் கோப்பை போட்டியை நேரில் பார்க்க வேண்டும் என்பது கனவாக இருந்திருக்கும். அந்த ஆர்வம்தான் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா ஏன் அமெரிக்காவில் இருந்தும்கூட ரசிகர்கள் லண்டனிற்கு வர காரணம். அனால் தற்போது அந்த ஆசையை நிறைவேற்ற ஏனோ இங்கிலாந்து தவறிவிட்டது.

அதற்கு இரண்டு காரணங்கள் என்றும் சொல்லலாம் ஒன்று கணிக்க முடியாத வானிலை. மற்றொன்று பெரியளவிலான விளம்பரங்கள் ஏதும் இல்லாமை.

ஏன் இங்கிலாந்து? இது சரியான நேரமா?

கிரிக்கெட் உருவான ஒரு நாட்டில் நின்று கொண்டிருப்பது ஒரு அற்புதமான அனுபவம். இங்கு பல வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளும் நடந்துள்ளன. நான் உலகக் கோப்பை குறித்த செய்திகளை தர இங்கு வருவதற்கு தயாராகி கொண்டிருந்த வேளையில் லண்டனில் உள்ள என்னுடைய சக ஊழியர்கள், "கவலைப்படாதே இங்கிலாந்தின் கோடை காலத்தை மக்கள் அனுபவிக்க போகிறார்கள் என்று கூறினார்கள்". ஆனால் எனக்கு மட்டுமல்ல உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருக்கக்கூடிய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கக்கூடிய நிலையே ஏற்பட்டது.

இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதுகுறித்து பல கவலைகளும் எழுந்துள்ளன. இந்த சமயம் அதிகம் பேசப்படுகிற ஒன்று `ரிசர்வ் டே`. தற்போது ஐசிசி அதை கடைபிடிக்கவில்லை. அதன் காரணமாக அணிகளின் புள்ளிகள் பாதிக்கப்படுகின்றன.

ட்ரென்ட் பிரிட்ஜூக்கு வெளியே துபாயிலிருந்து கிரிக்கெட் பார்ப்பதற்காக வந்திருந்த குமாரை நான் சந்தித்தேன். துபாயில் பணிபுரியும் குமார் கிரிக்கெட்டின் தீவிர ரசிகர் அவர் இங்கு தனது குழந்தைகளுக்கு கிரிக்கெட் போட்டிகளின் சிறப்பை காண்பிக்க அழைத்து வந்துள்ளார்.

படத்தின் காப்புரிமை BCCI

"வானிலை இம்மாதிரியாக கணிக்க முடியாததாக இருக்குமெனில் ஐசிசி ஏன் இங்கிலாந்தை தேர்வு செய்தது? போட்டி நடைபெற தேர்வு செய்த காலம் சரியா? உலகக் போட்டிகள் வேறெங்காவது நடந்திருந்தால் நாம் அதனை தடையில்லாமல் ரசித்திருக்கலாம்தானே?" என என்னிடம் பல கேள்விகளை எழுப்பினார் குமார்.

இது ஒரு அவசரமாக விவாதிக்க வேண்டிய விஷயமாக ஐசிசி கருத வேண்டும். மழையால் இத்துடன் நான்காவது போட்டி ரத்தாகிறது. மேலும் வரக்கூடிய நாட்களிலும் இம்மாதிரியான கணிக்க முடியாத வானிலைதான் நிலவும் என்கின்றனர். மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது இலங்கை அணிதான். அந்த அணியின் இரண்டு போட்டிகள் மழையால் ரத்து செய்யப்பட்டன. பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், வங்கதேசம், நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளும் இந்த சூழலை தற்போது எதிர்கொண்டுள்ளன.

கனடாவிலிருந்து வந்திருந்த தல்ஜித் என்னிடம் நகைச்சுவையாக இப்படி பகிர்ந்து கொண்டார். "உலகக் கோப்பை போட்டிகளுக்காக 11 அணிகள் ஆடுகின்றன. 10 நாடுகள் மற்றும் 11ஆவது அணியாக வருண பகவான்" என்றார் அவர். சமூக வலைதளங்களிலும் இம்மாதிரியான பகிர்வுகளை அதிகம் பார்க்க முடிகிறது.

முதலிடத்திற்கான போட்டி

இம்மாதிரியாக ஆட்டம் ரத்தாவது நிச்சயமாக அணிகளை பாதிக்கும். எனவே இது ரசிகர்களுக்கு மட்டுமல்ல வீரர்களுக்கும் கவலை அளிக்கக்கூடிய ஒன்றுதான். மழையால் ரத்தான ஆட்டத்தால் ஒரு அணி ஒரு புள்ளியை இழந்தால் அந்த அணி புள்ளிகள் பட்டியலில் மேல் செல்வதற்கான ஒரு வாய்ப்பை இழக்கிறது என்று அர்த்தம்.

படத்தின் காப்புரிமை IAN KINGTON

எதுவாக இருந்தாலும், புள்ளிகள் பட்டியலில் முதல் நான்கு இடத்தில் இருக்கும் அணிகளே அரை இறுதி போட்டிக்கு செல்லும்.

"எல்லாமே எண்கள்தான் ஒரு அணி சிறந்த அணியா இல்லயா என்பதெல்லாம் இல்லை. புள்ளிகள் இல்லையேல் அது வெளியேற வேண்டும் அவ்வளவுதான்" என்கிறார் லண்டனில் உள்ள உணவகம் ஒன்றில் பணிபுரியும் கனிகா லம்பா.

நான் சந்தித்தவர்களில் மிகவும் ஏமாற்றம் அடைந்தவர்கள் இவர்தான். "என்னுடைய அப்பா ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகர். நாங்கள் சகோதரிகள் இரண்டு பேர். அப்பா எங்களுக்கு எப்படி கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். அதற்கும் மேலாக அந்த விளையாட்டை எப்படி நேசிக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்தார். நான் இந்திய அணியின் ஆட்டத்தை நேரில் பார்க்க விரும்பினேன். ஆனால் எனது கனவு இந்த முறை நிறைவேறாது என்று தெரிகிறது." என்றார் போட்டியை ரசிக்க முடியாது போன ஏமாற்றத்துடன் நிற்கும் சிறுமி ஒருவர்.

போதிய விளம்பரங்கள் இல்லை

நான் விமானத்தில் வந்து கொண்டிருந்த போது ஒரு திருமணம் நடைபெறுவது போலான கொண்டாட்ட மனநிலையே லண்டன் முழுவதும் காணப்படும் என்று நினைத்தேன். அதில் ஒன்றும் தவறில்லையே உலகக் கோப்பை சமயம் என்பதால் அப்படி நினைத்தேன். ஆனால் என்னுடைய உற்சாகம் ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில பதாகைகளை பார்த்து அடங்கி விட்டது. நான் இந்தியாவில் இருந்து வருவதால் கூட இவ்வாறு ஏமாற்றம் அடைந்திருக்கலாம்.

எனக்கு நினைவிருக்கிறது. 2011ஆம் ஆண்டில் இந்தியா உலகக்கோப்பையை நடத்தியபோது அது எங்கும் பிரதிபலித்தது. அந்த நிலை அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது என்றுகூட சொல்லலாம். ஆனால் இங்கிலாந்தில் அவ்வாறு இல்லை. லண்டன், நாட்டிங்ஹாமிலும் அம்மாதிரியான எந்த ஒரு சூழலும் இல்லை. அவ்வளவு ஏன்? போட்டி நடப்பதாக இருந்த ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானம் கூட உலகக் கோப்பை போட்டி நடைபெறும் இடம்போல காட்சியளிக்கவில்லை.

இன்று காலை ஹீத்ரோவிலிருந்து நாட்டிங்ஹாமிற்கு நான் டாக்ஸியில் வந்தேன். எனது காரை தாஹீர் இம்ரான் ஓட்டி வந்தார். 173 கிமீ தூர பயணம் அது. தனது நாற்பதுகளில் இருக்கும் தாஹிர் பாகிஸ்தானின் வாசிராபாத் மாவட்டத்தை சேர்ந்தவர். என்னுடைய பயணம் முழுவதும் நாங்கள் பேசியது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் குறித்தே. தாஹிர் லண்டனுக்கு வந்து 20 வருடங்கள் ஆகிறது. அவர் ஒரு விஷயத்தை கூறினார். "கிரிக்கெட் இங்குதான் உருவானது. ஆனால் தற்போது இங்கிலாந்து மக்கள் அதனை கொண்டாடுவதில்லை. இங்குள்ள இளம் வயதினர் கிரிக்கெட்டை காட்டிலும் கால்பந்தை விரும்பி பார்க்கிறார்கள் அதனால்தான் ஜூன் 3ஆம் தேதி இங்கு இங்கிலாந்து அணியும் பாகிஸ்தான் அணியும் மோதிக் கொண்டிருந்த போது அவர்கள் லிவர்பூல் கால்பந்து அணி டோடென்ஹாம் ஹாட்ஸ்பூர் அணியை வீழ்த்துவதை பார்த்துக் கொண்டிருந்தனர். பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணியை விழ்த்திய போது எவரும் கண்டு கொள்ளவில்லை." என்றார்.

இன்று மதிய பொழுதில் 13 டிகிரியிலிருந்து 11 டிகிரியாக குறைந்துள்ளது. இந்த வானிலை குளுமையாக இருக்கலாம் ஆனால் உலகக் கோப்பை குறித்த விவாதங்கள் அவ்வாறு இல்லை என்பதுதான் உண்மை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :