உலகக்கோப்பை 2019: இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட்: 'இது விளையாட்டுதான்; போர் அல்ல'

  • விநாயக் கெய்க்வாட்
  • பிபிசி மராத்தி, மான்செஸ்டரில் இருந்து
இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

நேற்று எனக்கு ஒரு அதிர்ஷ்டவசமான நாள். இங்கு நல்ல வெயில் நிலவுகிறது. மழை பொழிவதற்கான வாய்ப்பும் இல்லை.

கிரிக்கெட் வரலாற்றில் முக்கியத்தும் வாய்ந்த இருவரை நான் பேட்டி கண்டேன். ஒருவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல்-ஹக்; இன்னொருவர் 'லிட்டில் மாஸ்டர்' சுனில் கவாஸ்கர்.

காலை 7.30 மணிக்கு பேட்டிக்கு அவர்கள் ஒப்புக்கொண்ட தகவல் தெரிவிக்கப்பட்டது. மான்செஸ்டரில் உள்ள கதேட்ரல் கார்டன்சின் ரசிகர்கள் கூடுமிடத்துக்கு சென்றோம்.

போட்டி நடக்க ஒரு நாள் இருந்தது என்றாலும் சுனில் கவாஸ்கர் மற்றும் இன்சமாம் உல்-ஹக் ஆகியோர் வரும் தகவல் தெரிந்ததால் ஏராளமான இந்திய பாகிஸ்தான் ரசிகர்கள் அங்கு கூடியிருந்தனர்.

கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணி

இன்று நடக்கும் போட்டி குறித்து கேட்டபோது, "இந்தப் போட்டி நடைபெற வேண்டும் என்று விரும்புகிறேன்; ஆனால், வானிலை எப்படி இருக்கும் என்று நமக்கு தெரியாது," என்றார் சுனில் கவாஸ்கர்.

இந்தப் போட்டியில் வெல்லாவிட்டால் உலகக்கோப்பைத் தொடரில் இருந்து வெளியேற வேண்டிய சூழல் பாகிஸ்தான் அணிக்கும், எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கும் உள்ளதை அவர் குறிப்பிட்டார்.

போட்டிக்கான இடத் தேர்வு மற்றும், போட்டி குறித்த நாளில் நடக்காவிட்டால், அதை நடத்தி முடிப்பதற்கான மற்றோரு நாளான 'ரிசர்வ் டே' இல்லாதது ஆகியவை குறித்தும் சுனில் கவாஸ்கர் பேசினார்.

ரவுண்டு ராபின் சுற்றில் ரிசர்வ் நாட்களுக்கு வாய்ப்பில்லை. எல்லா அணிகளும் மற்ற அணிகளுடன் மோத வேண்டும். ரிசர்வ் நாட்கள் குறிக்கப்பட்டால் ஐ.சி.சி எப்படி அனைத்து போட்டிகளையும் நடத்த முடியும் என்று அவர் கேட்டார்.

"இந்திய அணி தற்போது வலுவாக உள்ளது உலக கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக உள்ளதும் சந்தேகத்துக்கு இடமற்றது; ஆனால், எனக்கு பிடித்தமான அணி இங்கிலாந்துதான். இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அதிக வெப்பத்தில் விளையாடுபவை. அவர்கள் இங்கிலாந்து வானிலை குறித்து நன்றாக அறியாதவர்கள். ஆனால், தங்கள் பலத்தை இங்கு எப்படி அதிகபட்சமாகப் பயன்படுத்துவது என இங்கிலாந்து அணிக்கு தெரியும், " என்று கூறும் கவாஸ்கர் இந்தியாவும் இங்கிலாந்தும் இறுதி ஆட்டத்தில் மோதினால் இங்கிலாந்து வெல்லவே வாய்ப்புண்டு என்கிறார்.

வெளிப்படையாகப் பேசிய இன்சமாம்

இதுவரை உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியை பாகிஸ்தான் வென்றதே இல்லை என்று குறிப்பிட்ட இன்சமாம், இந்த முறை இந்தியா பாகிஸ்தான் அணியைவிட நல்ல நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.

படக்குறிப்பு,

கோப்புப்படம்

இந்தியாவின் பேட்டிங் மற்றும் பாகிஸ்தானின் பவுலிங் ஆகியவற்றுக்கு இடையேதான் மோதல் என்று கூறிய அவர், போட்டி நடக்கும் நாளில் திறமையை வெளிக்காட்டுவோர் வெல்வார்கள் என்றார்.

புல்வாமா மற்றும் பாலகோட் தாக்குதல் சம்பவங்களுக்கு பிறகு இந்தப் போட்டி நடைபெறுவதால் அதிகரித்துள்ள எதிர்பார்ப்பு குறித்து கேட்டபோது, "இது ஒரு விளையாட்டுதான்; இதில் ஒருவர் வெல்ல வேண்டும், ஒருவர் தோற்க வேண்டும் என்பதுதான் நியதி; இது போர் போன்றது அல்ல; இரு நாடுகளையும் இணைக்கும் விளையாட்டு இது. அந்த மனநிலை உடன்தான் விளையாட வேண்டும்; நிச்சயமாக இரு நாட்டு வீரர்களுக்கும் இடையில் எந்த பகை உணர்வும் இல்லை; பார்வையாளர்களும் அதே மனைநிலையுடன் இந்தப் போட்டியை ரசிக்க வேண்டும்," என்றார் இன்சமாம்.

'எல்லா போட்டியும் முக்கியம்'

இன்சமாம் கூறிய கருத்துகள் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் செய்தியாளர் சந்திப்பிலும் எதிரொலித்தது.

"எங்களுக்கு அனைத்து போட்டிகளும் சம அளவில் முக்கியமானவைதான். இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி போன்று சில போட்டிகள் உணர்வுப்பூர்வமாக அணுகப்படுகின்றன. ஆனால், இதையும் வேறு ஒரு உலகக்கோப்பை போட்டியைப் போலவே நாங்கள் அணுகுகிறோம்," என்றார் கோலி.

2018 ஆசியக் கோப்பை போட்டிக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. மான்செஸ்டரில் உள்ள ஓல்டு ட்ரஃப்போர்டு மைதானம் 23,000 பார்வையாளர்கள் அமரும் வசதி கொண்டது. ஆனால், ஏழு லட்சம் பேர் இந்த டிக்கெட்டுக்கு விண்ணப்பித்திருந்தனர்.

'ஃபேன் சோன்' எனப்படும் ரசிகர்கள் கூடுமிடத்தை நகரின் மையத்தில் அமைத்துள்ளது ஐ.சி.சி. பெரிய திரை, இசை, தெரு கிரிக்கெட், உணவு, குளிர்பானங்கள் என்று வண்ணமயமாக உள்ளது ரசிகர்கள் நிரம்பி வழியும் இந்த இடம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :