உலகக்கோப்பையை இந்தியா வெல்ல ‘ஹிட்மேன்’ ரோகித் சர்மா காரணமாக அமைவாரா?

ரோகித் சர்மா படத்தின் காப்புரிமை Getty Images

ஒருநாள் போட்டிகளில், 40 ரன்களை கடந்துவிட்டால் ரோகித் சர்மாவை எளிதில் ஆட்டமிழக்க செய்ய முடியாது. அதிலும் 60, 70 ரன்களை கடந்துவிட்டால் அன்று சரவெடிதான் என்பது பல இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் இயல்பான எதிர்பார்ப்பு.

இந்த எதிர்பார்ப்பை பலமுறை நிறைவேற்றி இந்திய அணியின் வெற்றிக்கு பெரும் காரணமாக ரோகித் இருந்துவருகிறார்.

'ஹிட் மேன்' என்றழைக்கப்படும் ரோகித் சர்மா, 2019 உலகக்கோப்பை தொடரில் நடத்தி வருவது எல்லாம் அதகளம்தான் என்று சொல்ல வேண்டும்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சவுதாம்ப்டனில் நடந்த முதல் போட்டியில், இறுதிவரை ஆட்டமிழ்க்காமல் இருந்து 122 ரன்கள் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு ரோகித் பெரும் காரணமாக இருந்தார்.

பந்துவீச்சுக்கு சாதகமான அந்த ஆடுகளத்தில் தனது இயல்பான பாணியை கடைபிடிக்காமல் சூழலை அனுசரித்து மிகவும் பொறுமையாக விளையாடிய ரோகித்தின் ஆட்டம் பெரும் பாராட்டுகளை பெற்றுத்தந்தது.

இதனை அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த இரண்டாவது போட்டியில் ரோகித் சர்மா அரை சதம் அடித்தார்.

இந்நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே மான்செஸ்டரில் நடந்த மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியில் மீண்டும் ரோகித் சர்மா விஸ்வரூபம் எடுத்தார்.

படத்தின் காப்புரிமை DIBYANGSHU SARKAR

113 பந்துகளில் அவர் விளாசிய 140 ரன்கள் இந்தியாவின் வெற்றிக்கு பெரும் உதவியாக அமைந்தது.

இந்த போட்டியில் ஆரம்பம் முதலே அதிரடியில் ஈடுபட்டுவந்த ரோகித் சர்மா, பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை விளாசி 34 பந்துகளில் அரை சதம் அடித்தார்.

இதன் பின்னரும் அவரின் அதிரடி நிற்கவில்லை. சதம் அடித்த பின்னரும், அவர் சிறப்பான அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டார். அவரை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி பந்துவீச்சாளர்கள் பெரிதும் தடுமாறினர்.

தொடர்ந்து 3 போட்டிகளாக சிறப்பாக பங்களித்துவரும் ரோகித் சர்மா, நடப்பு உலகக்கோப்பையை இந்தியா வென்றால் அதற்கு பெரும் காரணமாக இருப்பார் என்பது பல இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

கோலியை போலவே , ரோகித்தும் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், வெற்றி நாயகனாகவும் இருந்து வருகிறார். குறிப்பாக முக்கிய போட்டிகளில் அவரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

ரோகித்தின் பேட்டிங் மற்றும் இந்திய அணியின் வெற்றியில் அவரின் அபார பங்களிப்பு குறித்து பிபிசியிடம் பேசிய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மனீந்தர் சிங் கூறுகையில், ''ரோகித் மிக சிறந்த வீரராக உருவெடுத்து வருகிறார். அவரை கட்டுப்படுத்த முடியாமல் பல சந்தர்ப்பங்களிலும் எதிரணியின் திணறி வருவது கடந்த சில ஆண்டுகளாக நாம் கண்டுவருகிறோம்'' என்று குறிப்பிட்டார்.

''அணியின் துணை தலைவராக ஆனபின்னர் மேலும் முதிர்ச்சியை வெளிப்படுத்தும் ரோகித், இந்த உலகக்கோப்பையை இந்தியா வென்றால் அதற்கு அதற்கு முக்கிய காரணமாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை'' என்றார்.

2019 உலகக்கோப்பை தொடரில் 3 போட்டிகளில் வென்று, ஏறக்குறைய அரையிறுதி போட்டிக்கு தகுதிபெறும் நிலையில் உள்ள இந்தியா, அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகளில் வெல்வதில் ரோகித்தின் பங்கு முக்கிய அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :