இந்தியா - பாகிஸ்தான் ரசிகர்களின் மனங்களை இணைத்த மழை

pakistan fan

மழையால் இடைநிறுத்தப்பட்ட ஆட்டம் மீண்டும் தொடங்கப்பட்டபோது, பாகிஸ்தான் அணி 30 பந்துகளில் 136 ரன்கள் எடுக்க வேண்டுமென்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அந்த சமயத்தில், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான இந்த போட்டியை பார்ப்பதற்காகவே பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து போட்டி நடைபெற்ற மான்செஸ்டர் நகரத்துக்கு வந்திருந்த ஆமிர் உணர்ச்சிவசப்பட்டு, 'அவ்வளவுதான்… என்னால் இனி போட்டியை பார்க்க முடியாது!' என்று புலம்ப ஆரம்பித்துவிட்டார்.

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நேற்று மான்செஸ்டரில் நடந்த உலகக்கோப்பை போட்டியின் ஒட்டுமொத்த ஆட்டத்தையும் இந்தியாவே கட்டுப்படுத்தியது எனலாம். இதன் மூலம், இதுவரை உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்காத அணி என்ற பெயரை ஏழாவது முறையாக வென்று, இந்தியா தக்கவைத்து கொண்டுள்ளது.

நீங்கள் அனைவரும் போட்டியை பார்த்திருப்பீர்கள் என்பதால் நான் இந்தியாவின் வெற்றி எப்படி சாத்தியமானது என்று விவரிப்பதற்கு மாறாக, போட்டி குறித்த என்னுடைய நேரடி அனுபவங்களை பகிர உள்ளேன்.

முந்தைய உலகக்கோப்பை போட்டிகளைவிட இந்த போட்டி மிகவும் சவாலானதாகவும், வித்தியாசமானதாகவும் இருக்கும் என்று எனக்கு தெரியும்.

ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் இறங்கியபோது அங்கிருந்த கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் ஏமாற்றம் அடைந்தோம். இரு அணிகளின் ரசிகர்களும் உலகக்கோப்பையின் எதிர்பார்ப்பு மிக்க ஆட்டத்தை காண மைதானத்தினுள் நுழைய நின்று கொண்டிருந்தார்கள்.

உலகக்கோப்பையில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்துவது எப்படி?

தங்கள் நாட்டின் கொடிகளை ஏந்தி நடனமாடி மக்கள் உற்சாகத்துடன் தங்கள் அணியின் பெயர்களை உரக்கக் கூறி கொண்டிருந்தார்கள். இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடக்கும் ஆட்டம் எப்போதும் ஒரு தனி உத்வேகம் கொண்டுவந்துவிடுகிறது. அது கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் ஒரு தீவிரத்தையும் ஓர் உற்சாகத்தையும் ஏற்படுத்துகிறது.

டிக்கெட் கிடைத்தவர்கள் மைதானத்திற்குள்ளும், கிடைக்காதவர்கள் ஐசிசி இந்த ஆட்டத்திற்காக மான்செஸ்டர் கேதட்ரல் கார்டன்சில் ஏற்பாடு செய்த ரசிகர்கள் கூடும் இடத்திலும் நுழைந்தனர்.

இன்று நான் பார்த்த விஷயம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆட்டத்தின் தொடக்கத்தில் வெளிச்சமாக இருந்தது. ரசிகர்கள் கூடும் இடத்தில் கூட்டம் அலைமோதியது. நானும் கெவினும் இரு அணியின் ரசிகர்களையும் பார்க்கும் ஓர் இடத்தை தேடினோம்.

ஒரு பெரிய திரையின் முன்பு இரு தரப்பினராக ரசிகர்கள் பிரிந்திருந்தனர். நான் இடையில் அமர முடிவு செய்தேன். என்னுடைய இடது பக்கம் இந்திய ரசிகர்களும் வலது பக்கம் பாகிஸ்தான் ரசிகர்களும் இருந்தனர் .

நாம் மைதானத்தில் கூட இதுபோன்றவற்றை பார்க்க முடியாது. அங்கே ரசிகர்கள் கலந்து அமர்வார்கள். ஆனால் தொடக்கம் முதலே இங்கே இரு பிரிவினராக இருந்தார்கள்.

இந்தியா மிகவும் கவனமாக ஆட்டத்தை தொடங்கியது. ரோஹித் சர்மா பந்தை மைதானத்தின் எல்லா மூலையிலும் விளாசினார். பாகிஸ்தான் அணியில் மொஹம்மது ஆமிர் சிறப்பாக பந்து வீசினார்.

இந்தியா பௌண்டரி, சிக்ஸர் என அடித்தபோது என்னுடைய இடது பக்கம் இருப்பவர்கள் மேளம் அடித்து, நடனம் ஆடி உற்சாகம் கொண்டனர். அதேபோல் சிறந்த பந்துவீச்சு மற்றும் முக்கிய விக்கெட்களுக்கு வலது பக்கம் இருந்தவர்கள் கொண்டாடினர்.

மழை ஆட்டத்தை நிறுத்தியவரை இது தொடர்ந்து நடைபெற்று கொண்டிருந்தது. "நீங்கள் சிறந்த இடத்தை தேர்ந்தெடுத்துள்ளீர்கள், இன்னும் சற்று நேரத்தில் நீங்கள் இரு அணி ரசிகர்களுக்கும் இடையே நசுக்கப்பட்டுவிடுவீர்கள்" என அங்கு வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கும் என்று ஜெய் ஆச்சார்யா கூறினார் . அப்போது நான் இந்த இரு நாடுகளுக்கும் நடுவில் இருக்கும் தீவிரத்தை உணர்ந்தேன்.

ரசிகர்களின் மனதில் மிக தீவிரமான அழுத்தம் இருந்ததை அவர்கள் முகங்களில் பார்க்க முடிந்தது. ஆனால் அங்கு கலவரம் ஏதும் இல்லை.

இந்த முறை ஒரு நல்ல ஆட்டம் நடைபெற்றது. இரண்டு அணிகளின் ரசிகர்களும் ஆட்டத்தின் முடிவை கணித்துவிடும்படியாக இருந்தது. மக்கள் மழையை திட்டினார்கள், ஆனால் நான் நன்றி சொன்னேன்.

ரசிகர்களுக்கு நடுவில் இருந்த தடையைப் போக்க அந்த சிறு நேர இடைவெளி அங்கே தேவைப்பட்டது. மழை நின்றதால் அங்கே பாலிவுட் பாடல்கள் ஒளிக்க ஆரம்பித்தன. ரசிகர்கள் நடனம் ஆடி, கொண்டாடிக்கொண்டிருந்தனர்.

எங்கும் மகிழ்ச்சியாக காணப்பட்டது. ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர். ஒன்றாகக் கலந்திருந்தினர். ஆட்டம் தொடக்கத்திலிருந்தபோது இருந்த சூழ்நிலையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் மழையால் ஆட்டம் நின்றபோது வேறு மாதிரி இருந்தது. இந்திய ரசிகர்களும் பாகிஸ்தான் ரசிகர்களும் கலந்திருந்தனர். அது பார்க்க அழகாக இருந்தது.

மழை ஆட்டத்தை கெடுத்தது என பலரும் சொல்லலாம். ஆனால் அது இருநாட்டு மக்களையும் இணைத்தது. அவர்களின் தடைகளை உடைத்தது. நான் நிறைய இந்திய மற்றும் பாகிஸ்தான் ரசிகர்களிடம் பேசினேன்.

அதிலிருந்து ஒரு விஷயம் புரிந்தது. அவர்கள் தங்களுடைய அணிகளுக்கு ஆதரவாக பேசினார்களே தவிர அடுத்த அணியை திட்டவில்லை. அதுவே சிறந்த மாற்றம்.

அது புத்துணர்வு தரக்கூடியதாக இருந்தது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ரசிகர்களுக்கிடையே ஒரு சிறிய ஆட்டத்தை ஏற்பாடு செய்தவர்களில் அஜித் பிரசாத்தும் ஒருவர்.

"யார் வெற்றி பெறுகிறார்கள் என்பது முக்கியம் இல்லை. இந்த ஆட்டம் நிறைய நண்பர்களை கொடுத்துள்ளது. நாம் பாகிஸ்தான் பற்றியும் அந்நாட்டு ரசிகர்கள் பற்றியும் நமக்கு ஒரு அபிப்ராயம் இருக்கும். அவர்களுக்கும் நம்மை பற்றி அப்படித்தான். ஆனால் இந்த ஆட்டத்திற்கு குறிப்பாக மழைக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். அது நாங்கள் நெருக்கமாக எங்களுக்கு நேரம் தந்தது. இந்த உறவு நீண்ட நாள் நிலைக்கும் என நான் நம்புகிறேன்.

ஆட்டத்தில் எடுத்த ஒவ்வொரு ரன்னுக்கும் ஒவ்வொரு விக்கெட்டுக்கும் ஒருவரை ஒருவர் கேலி செய்து கொண்டனர். எதுவும் அடுத்தவர்களை புண்படுத்தும்படியாக இல்லை.

பாகிஸ்தானியர்களும் இந்தியர்களும் எப்போதும் போட்டிபோட்டு கொள்வர் சண்டை போடுவர் என ஒரு பொது கருத்து உள்ளது. ஆனால் இந்த ஆட்டத்திற்கு பிறகு அந்த இடத்தில இருந்தவர்களுக்கு மத்தியிலாவது அப்படியில்லை என்பது புரிந்திருக்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :