உலகக் கோப்பை கிரிக்கெட்: மேற்கிந்திய தீவுகளை அசரவைத்த வங்கதேச அணி

உலகக் கோப்பை கிரிக்கெட்: மேற்கிந்திய தீவுகளை அசரவைத்த வங்கதேச அணி படத்தின் காப்புரிமை Alex Davidson

ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டி தொடரில், டோண்டனில் வங்கதேச மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற போட்டியில் வங்கதேச அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.

முதலில் பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 321 ரன்களை எடுத்தது.

அந்த அணியின் ஹோப் 96 ரன்களையும், லீவிஸ் 70 ரன்களையும், ஹெட்மேயர் 50 ரன்களையும் எடுத்தனர்.

அதன்பின் களமிறங்கிய வங்கதேச அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 322 ரன்களை எடுத்து வெற்றிப் பெற்றது. அந்த அணியின் ஷகிப் ஒவுட் ஆகாமல் 124 ரன்களையும், தாஸ் 94 ரன்களையும் எடுத்திருந்தனர்.

எனவே, ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேச அணி மேற்கிந்திய தீவுகள் அணியை தோற்கடித்தது.

உலகக் கோப்பை போட்டி வரலாற்றில், அதிகளவில் ரன்களை சேஸ் செய்து வெற்றிப் பெறுவது இது இரண்டாவது முறையாகும்.

சிறப்பான ஆட்டம்

322 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியின் முதல் இரண்டு விக்கெட்டுகள் அடுத்தடுத்து வேகமாக சரிந்தன. 19 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு அந்த அணி 133 ரன்களை எடுத்திருந்தது.

அதன்பின் தனது சதத்தின் மூலம் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார் ஷகிப். இந்த உலகக் கோப்பை போட்டியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக சதம் அடிக்கிறார் ஷகிப்.

அவருடன் சேர்ந்து ரன் குவிக்க தொடங்கிய தாஸ் நிதானமாக ஆடி, பின் ஆட்டத்தில் அதிரடியை காட்டினார். ஷனோன் கேப்ரியல் வீசிய பந்தில் அடுத்தடுத்து மூன்று சிக்ஸர்களை அடித்தார் தாஸ்.

தாஸுக்கு இதுதான் முதல் உலகக் கோப்பை போட்டி.

தரவரிசையில் முன்னேற்றம்

இந்த வெற்றி வங்கதேச அணியை புள்ளிகள் பட்டியலில் ஐந்தாம் இடத்துக்கு அழைத்து சென்றுள்ளது. மேலும் வங்கதேச அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பையும் அதிகரித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு நிலைமை மிக கடினமாகியுள்ளது. அடுத்து வரக்கூடிய நான்கு போட்டிகளிலும் அந்த அணி வெற்றிப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து போன்ற அணிகளுடன் மோத வேண்டியுள்ள நிலைமையில் அது சற்று கடினம்தான்.

இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருது ஷகிப் அல் ஹசனுக்கு வழங்கப்பட்டது. "என்னுடைய பேட்டிங்கை மேம்படுத்த கடந்த ஒரு மாத காலமாக தீவிர பயிற்சி எடுத்து வருகிறேன். அது தற்போது நல்ல பலனை தந்துள்ளது" என்று போட்டிக்கு பின் பேசிய ஷகிப் தெரிவித்தார்.

"ஒவ்வொரு போட்டியிலும் ஷகிப் அசாதாரணமாக ஏதாவது செய்கிறார். அது தொடரும் என நம்புவோம்" என வங்கதேச அணியின் கேப்டன் மஷ்ரஃபே மோர்டாசா தெரிவித்துள்ளார்.

"நாங்கள் இன்னும் கொஞ்சம் சிறப்பாக விளையாடி இருக்கலாம்" என்று மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் தெரிவித்துள்ளார்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :