கேன் வில்லியம்சன்: பரபரப்பான போட்டியில் வென்ற நியூஸிலாந்து - வெளியேறுகிறதா தென்னாப்பிரிக்கா?

பரபரப்பான போட்டியில் வென்ற நியூஸிலாந்து - வெளியேறுகிறதா தென்னாப்பிரிக்கா? படத்தின் காப்புரிமை Alex Davidson

2019 ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த பரபரப்பான போட்டியில் நியூஸிலாந்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டி துவங்குவதற்கு முன்பு மைதானத்தில் நிலவிய அதிகமான ஈரப்பதம் காரணமாக 'டாஸ்' போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

பின் நீண்ட தாமதத்துக்கு பின் போட்டி 49 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதில் 'டாஸ்' வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

வான் டெர் டுசேன், ஆம்லா அரைச்சதம்

இதையடுத்து முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு தொடக்க வீரர் ஹாஷிம் ஆம்லா அரைசதம் அடித்து கைகொடுத்தார்.

இதன்பின்னர் களமிறங்கிய வீரர்கள் பெரிதும் ரன் எடுக்காத நிலையில்,வான் டெர் டுசேன் 67 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் தென்னாப்பிரிக்க அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 241 ரன்கள் எடுத்தது.

242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய நியூஸிலாந்து அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை.

அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மிக அபாரமாக விளையாடி 138 பந்துகளில் 106 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 1 சிக்ஸர் மற்றும் 9 பவுண்டரிகள் அடங்கும்.

படத்தின் காப்புரிமை Michael Steele/Getty Images

அவருடன் இணைந்த கிராண்ட்ஹோம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிரடியாக விளையாடிய அவர் 47 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார்.

ஒருகட்டத்தில் 5 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை மட்டுமே பெற்ற நியூஸிலாந்து, 16 ஓவர்களில் 116 ரன்கள் பெற வேண்டியிருந்தது.

அக்கட்டத்தில் கிராண்ட்ஹோம் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டாலும், அணித்தலைவர் கேன் வில்லியம்சன் மிக நிதானமாகவும், சாதுர்யமாகவும் விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.

வெளியேறுகிறதா தென்னாப்பிரிக்கா?

இந்த வெற்றியின் மூலம் தான் இதுவரை 5 போட்டிகளில் நான்கு போட்டிகளில் வென்ற நியூஸிலாந்து 9 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவுடனான அந்த அணியின் ஆட்டம் மழையின் காரணமாக கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதேவேளையில் தென்னாப்பிரிக்கா தான் விளையாடிய 6 போட்டிகளில் நான்கில் தோல்வியடைந்து, 3 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ள நிலையில், அந்த அணி எஞ்சியுள்ள அனைத்து போட்டிகளிலும் வென்றாலும் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

படத்தின் காப்புரிமை Andy Kearns/Getty Images

இதுவரை ஒருமுறைகூட உலகக்கோப்பையை வெல்லாத தென்னாப்பிரிக்கா, நடப்பு உலகக்கோப்பையில் தொடர்ந்து பல போட்டிகளில் தோல்வியடைந்து வருவது அந்நாட்டின் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :