ரிஷப் பந்த் : இந்திய அணியின் பேட்டிங்கை மேலும் வலுவாக்குவாரா?

ரிஷப் பந்த் : இந்திய அணியின் பேட்டிங்கை மேலும் வலுவாக்குவாரா? படத்தின் காப்புரிமை Getty Images

2019 கிரிக்கெட் உலகக்கோப்பையில் இந்திய அணியில் இடம்பெற்று விளையாடிவந்த தொடக்க வீரர் ஷிகர் தவான், தனது இடதுகை பெருவிரல் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக இளம் வீரர் ரிஷப் பந்த்தை அணியில் சேர்க்க ஐசிசியிடம் இந்திய கிரிக்கெட் வாரியம் கோரியுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த போட்டியில் சதமடித்த ஷிகர் தவான், காயம் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த முந்தைய போட்டியில், அணியில் இடம்பெறவில்லை.

இந்நிலையில், இந்திய அணியில் ரிஷப் பந்த் இடம்பெறுவதால் உண்டாகும் தாக்கம் குறித்து ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

அதிரடி பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டு வரும் ரிஷப் பந்த், பேட்டிங் வரிசையில் நான்காம் இடத்தில் இறங்கி விரைவாக ரன்கள் குவிக்கக்கூடியவர்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் உலகக்கோப்பை இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது மகேந்திர சிங் தோனியை தவிர மற்றொரு விக்கெட்கீப்பராக ரிஷப் பந்த்துக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இறுதியில் தினேஷ் கார்த்திக்கே இந்திய அணியில் இடம்பெற்றார். இது அக்காலகட்டத்தில் சில ரசிகர்கள் இடையே ஆதங்கத்தை உண்டாக்கியது.

2016 ஐபிஎல் ஏலத்தின்போது 1.9 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார் 19 வயது ரிஷப் பந்த். அதே நாளில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் காலிறுதியில் சதமடித்து முத்திரை பதித்தார். முன்னதாக இதே தொடரில் 18 பந்தில் அரை சதம் அடித்து வியக்க வைத்திருந்தார்.

குறிப்பிட்ட சில காலம் மட்டும் முழு ஃபார்மில் விளையாட்டில் கவனம் ஈர்த்துவிட்டு பின்பு காணாமல் போன கிரிக்கெட் வீரர்களுக்கு மத்தியில் தனது பேட்டிங்கின் மூலம் கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சர்யத்துக்குள்ளாக்குவது ரிஷப்பின் பாணியாக இருந்துவந்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

ரிஷப் பந்த் அணியில் இடம்பெறுவதால் உண்டாகும் தாக்கம் குறித்து கிரிக்கெட் வீரரும், பயிற்சியாளருமான ரகுராமன் கூறுகையில், ''ரிஷப் பந்த் இயல்பாக ஒர் அதிரடி வீரர். மிக குறைந்த பந்துகளில் அதிரடியாக அதிக அளவு ரன்கள் எடுத்து எதிரணியை திணறடிக்கும் வல்லமை அவருக்கு உண்டு. அதனால் உடனடியாக அவரை தொடக்க வீரராக களமிறக்குவதுதான் சரி'' என்று கூறினார்.

''நடுவரிசை பேட்டிங்கில் அவரை களமிறக்குவதைவிட தொடக்க வீரராக களமிறக்கினால் நிச்சயம் அது எதிரணியினருக்கு சிம்ம சொப்பனமாக அமையும்'' என்று மேலும் கூறினார்.

''மேலும், ரோகித் அல்லது கே. எல். ராகுலுக்கு திடீரென காயம் ஏற்பட்டால் தொடக்க வீரர் என்ற முறையில் ரிஷப் பந்த்தை கண்டிப்பாக அணி சார்ந்திருக்கும். அதனால் லீக் போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். அப்போதுதான் அரையிறுதி மற்றும் இறுதி போட்டியில் அவரால் சிறப்பாக பங்களிக்க முடியும்'' என்று அவர் குறிப்பிட்டார்.

கிட்டத்தட்ட முன்னாள் இந்திய வீரர் சேவாக் பாணியில் பெரிதாக கவலைப்படாமல் மனஉறுதியோடு பந்தை எதிர்கொள்பவராக இருக்கிறார் ரிஷப் பந்த்.

அதனால் அவர் களமிறங்கும்போது சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகள் அதிக அளவில் பறக்கும் என்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :