உலகக் கோப்பை 2019: இங்கிலாந்தை வீழ்த்திய இலங்கை - அரையிறுதிக்கு செல்லுமா?

இலங்கிலாந்து படத்தின் காப்புரிமை Clive Mason/Getty images

ஐசிசி உலகக்கோப்பை போட்டிகளில் நேற்று இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

லீட்ஸில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இலங்கை அணி, 50 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 232 ரன்களை எடுத்திருந்தது. அந்த அணியின் மேத்யூஸ் 115 பந்துகளில், 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இங்கிலாந்து அணியின் ஸ்டோக்ஸ் 82 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இலங்கை அணியில் அதிகபட்சமாக, அவிஷ்கா ஃபெர்னாண்டோ 39 பந்துகளில், 49 ரன்களையும், குசால் மெண்டிஸ் 68 பந்துகளில் 46 ரன்களையும் எடுத்திருந்தனர்.

233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 47ஆவது ஓவரில் 212 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அந்த அணியின் ரூட் 89 பந்துகளில் 57 ரன்களையும், ஸ்டோக்ஸ் 89 பந்துகளில் 82 ரன்களையும் எடுத்திருந்தனர்.

இந்தப் போட்டியின் முடிவில் இங்கிலாந்து புள்ளிகள் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளபோதிலும் அடுத்தடுத்த போட்டியில் அந்த அணி இந்தியா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற வலுவான அணிகளை சந்திக்கிறது.

சவாலாக விளங்கிய இலங்கை அணி

கடினமான ஒரு பிட்ச்சில் 233 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு, இலங்கை அணியின் பந்து வீச்சு பெரும் சவாலாக அமைந்தது.

படத்தின் காப்புரிமை Clive Mason/Getty Images

இங்கிலாந்து அணி இலங்கை அணியின் பந்து வீச்சில் ரன்களை எடுக்க தடுமாறிக் கொண்டிருந்தாலும், ஜோ ரூட் ஸ்டோக்ஸுடன் இணைந்து 57 ரன்களை எடுக்கும் வரை இங்கிலாந்து அணியின் வெற்றி குறித்து எந்த அச்சமும் இல்லை.

ஆனால் இலங்கை கேட்ட ரெவ்யூவில் ரூட் மலிங்கா வீசிய பந்தில் ஓவுட் ஆகியிருந்தது தெரிந்தது. அப்போது முதல் தடுமாற்றத்தை சந்தித்தது இங்கிலாந்து.

ரூட்டின் விக்கெட்டை பெற்றதுதான் இந்தப் போட்டியில் முக்கியமான ஒரு தருணம் என இலங்கை அணியின் கேப்டன் பின்னர் தெரிவித்திருந்தார்.

கைகொடுத்த மேத்யூ

இலங்கை அணியின் மேத்யூ இந்த உலகக் கோப்பை போட்டிகளில் இதற்கு முன்பு எடுத்த அதிகபட்ச ரன்கள் ஒன்பது. ஆனால் இந்த போட்டியில் ஆட்டமிழக்காமல் அவர் எடுத்த 85 ரன்கள் இலங்கை அணியை ஒரு மறக்கமுடியாத வெற்றியை பெற செய்தது என்றே சொல்லலாம்.

இங்கிலாந்து அணியைக் காட்டிலும் 2 புள்ளிகள் குறைவாக எடுத்து ஐந்தாவது இடத்தில் இருக்கும் இலங்கை அணி அரை இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பும் உள்ளது.

புள்ளி வரிசைப் பட்டியலில் முதல் நான்கு இடங்களில் இருக்கும் அணிகளே அரை இறுதி போட்டிக்கு செல்லும். இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து அணி நான்கு போட்டிகளில் வெற்றிப் பெற்றுள்ளது. அதே போல் ஆறு போட்டிகளில் விளையாட வேண்டிய இலங்கை அணியின் இரண்டு போட்டிகள் மழையால் ரத்து செய்யப்பட்டு புள்ளிகள் சம்மாக பிரித்தளிக்கப்பட்டன.

இருப்பினும் அந்த அணி தற்போது 6 புள்ளிகளை பெற்றுள்ளது.

இந்தப் போட்டிக்கு முன்பு வரை இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் எந்த ஆரவாரமும் இன்றி அரை இறுதிக்கு சென்றுவிடும் என்ற சூழல் காணப்பட்டது. ஆனால் முழு உத்வேகத்துடன் விளையாடிய இலங்கை அணி இங்கிலாந்து அணியின் அரை இறுதி கனவை அசைத்துப் பார்த்துள்ளது.

போட்டி முடிவில் பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் இயோன் மார்கன், "இலக்கை சேஸ் செய்ய தொடங்கியபோது அடிப்படையான ஒரு விஷயத்தை செய்ய நாங்கள் தவறிவிட்டோம். உடைக்க முடியாத பார்ட்னர்ஷிப்பை உருவாக்க நாங்கள் தவறவிட்டோம்" என்று தெரிவித்தார்.

"சிலர் சிறப்பாக விளையாடியிருந்தாலும், இலங்கை அணி வெற்றிப் பெற தகுதியான ஒரு அணி"

"போட்டியில் வெற்றிப் பெற போதுமான முயற்சிகளில் நாங்கள் ஈடுபடவில்லை" என தெரிவித்தார்.

இலங்கை கேப்டன் திமுத் கருநரத்ன பேசுகையில், "நாங்கள் பெரும் நெருக்கடியில் இருந்தோம். இது முழுவதுமான ஒரு கூட்டு முயற்சி, பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டுமே சிறப்பாக அமைந்தது" என்று தெரிவித்தார்.

"இந்த பிட்ச்சில் 300 ரன்கள் வரை எடுக்க முடியும் என நாங்கள் நினைத்தோம். ஆனால் நாங்கள் நினைத்ததுபோல் இல்லை. எங்களால் 300 ரன்களை எடுக்க முடியாது என்று எங்களுக்கு தெரிந்துவிட்டது. ஆனால் 250-275 ரன்கள் வரை எடுக்க நாங்கள் முயற்சி செய்தோம். மாத்யூஸ் சிறப்பாக விளையாடினார்" என்று தெரிவித்தார்.

"ரூட்டின் விக்கெட்டை எடுத்தது முக்கியமான ஒரு தருணம். எங்களுக்கு அப்போது நம்பிக்கையில்லை. இருப்பினும் ரெவ்யூ கேட்பது என நாங்கள் முடிவுசெய்தோம்" என்றும் தெரிவித்தார்.

அடுத்த போட்டியில் இலங்கை அணி தென் ஆப்ரிக்காவையும், இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவையும் எதிர்கொள்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்