இந்தியா- ஆப்கானிஸ்தான் போட்டி: அரையிறுதி போட்டிக்குமுன் இந்தியாவுக்கு எச்சரிக்கை மணியா?

ஆப்கானிஸ்தான் அளித்தது எச்சரிக்கை மணியா? படத்தின் காப்புரிமை Stu Forster-IDI/IDI via Getty Images

2019 ஐசிசி உலகக்கோப்பை தொடரில் சவுதாம்ப்டனில் சனிக்கிழமை நடந்த மிகவும் பரபரப்பான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. 300, 350 ரன்கள் எடுக்கும், இரண்டு அல்லது மூன்று வீரர்கள் சதமடிப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், ஆரம்பமே இந்தியாவுக்கு அதிர்ச்சியாக அமைந்தது.

'ஹிட்மேன்' ரோகித் சர்மா ஒரே ரன்னில் ஆட்டமிழக்க, ராகுல் நிதானமாக விளையாடினார். அதேபோல் விஜய்சங்கர், தோனி போன்றோராலும் அதிக ரன்கள் குவிக்கமுடியவில்லை.

ஜாதவ் அரைசதம் எடுத்த போதிலும் அவரது வழக்கமான பாணியில் விளையாடவில்லை. அணித்தலைவர் கோலி மட்டும்மே அதிரடி பாணியில் விளையாடி விரைவாக ரன்கள் குவித்தார்.

படத்தின் காப்புரிமை AFP

50 ஓவர்களின் முடிவில், 8 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 224 ரன்களை மட்டுமே இந்தியா எடுக்க, இது போதுமான இலக்கா, ஆப்கானிஸ்தான் அதிர்ச்சி தோல்வியளிக்குமா என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்தனர்.

ஆனால், இந்தியாவின் பந்துவீச்சு சிறப்பாக அமைந்ததால், இந்தியா குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. குறிப்பாக ஹாட்ரிக் எடுத்த முகமது ஷமி மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோரின் நேர்த்தியான மற்றும் புயல்வேக பந்துவீச்சு இந்தியாவுக்கு வெற்றி பெற்றுத்தந்தது.

இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடிய விதம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய கிரிக்கெட் வீரர் சக்தி, ''ஆப்கானிஸ்தானுடனான போட்டியில் இந்தியா சில தவறான முடிவுகளை எடுத்தது. விஜய்ஷங்கர் மற்றும் கேதர் ஜாதவ் ஆகிய இருவரும் ஆல்ரவுண்டர்கள் என்ற முறையில் ஒரு சில ஓவர்கள்கூட பந்து வீசாதது ஏன் என்று தெரியவில்லை,'' என்று கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

''அதற்கு காரணம் உடல்தகுதி என்றால் அவர்களுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா அல்லது தினேஷ் கார்த்திக் அணியில் இடம்பெற்றிருக்கலாம். ரிஷப் பந்த் கூட சற்றே நல்ல தேர்வுதான்,'' என்று தெரிவித்தார்.

''350, 400 என அதிக ரன்கள் குவிக்கலாம் என்ற எண்ணத்தில் இந்தியா முதலில் பேட்டிங் செய்ய தேர்வு செய்திருக்கலாம். ஆனால், இந்த ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால் சிறிது நேரத்தில் 270 ரன்கள் எடுத்தாலே அது நல்ல ஸ்கோர் என்று இந்தியாவுக்கு புரிந்திருக்கும்.''

''இந்தியா 224 ரன்கள் மட்டுமே எடுத்தது ஏமாற்றம்தான். ஜாதவ் கடைசி ஓவர் வரை களத்தில் இருந்தார். தோனி மற்றும் விஜய்சங்கர் ஆகிய இருவரும் இன்னமும் சற்று ரன்கள் குவித்திருக்கலாம். ஆனால், ஆடுகளத்தின் தன்மையை நாம் கருத்தில் கொள்ளவேண்டும்'' என்று சக்தி மேலும் குறிப்பிட்டார்.

ஆப்கானிஸ்தான் அணியின் பங்களிப்பு குறித்து பேசிய சக்தி, இந்திய போன்று நீண்ட அனுபவம் இல்லாத நிலையிலும் அந்த அணியினர் சிறப்பாக விளையாடினர். அவர்களின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. முகமது நபி இன்னமும் சற்று பொறுமையாக இருந்திருந்தால் இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்திருக்கலாம் என்றார்.

படத்தின் காப்புரிமை PA
Image caption முகமது நபி

''அரையிறுதி போட்டிக்கு இந்தியா தகுதி பெறுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்ட நிலையில், இந்த போட்டியில் இந்தியாவின் பங்களிப்பு மற்றும் தவறுகளை எதிரணியினர் உன்னிப்பாக கவனித்திருப்பர்.''

''மொத்தத்தில் இந்த போட்டி இந்தியாவுக்கு எச்சரிக்கை மணிதான். ஆஸ்திரேலியா. இங்கிலாந்து அல்லது நியூஸிலாந்து போன்ற வலுவான அணிகள் விளையாடியிருந்தால் நிச்சயம் இந்தியா தோல்வியடைந்திருக்கும்'' என்று சக்தி குறிப்பிட்டார்.

ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற வலுவான அணிகளை எளிதில் தோற்கடித்த இந்தியா, ஆப்கானிஸ்தான் அணியிடம் மிகவும் போராடி வென்றது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவின் பேட்டிங் முக்கிய போட்டிகளில் தடுமாறினால், ஆப்கானிஸ்தானைவிட வலுவான அணிகள் இந்தியாவை தோல்வி அடைய செய்யும் என்று கூறப்படுகிறது.

மேலும், இனிவரும் போட்டிகளில் இந்தியாவின் பேட்டிங் வரிசை மற்றும் அணித்தேர்வில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பது கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :