ஷமி - பும்ரா: புயல்வேக வேகப்பந்து கூட்டணி இந்தியா உலகக்கோப்பையை வெல்ல உதவுமா?

புயல்வேக ஷமி - பும்ரா கூட்டணி இந்தியா கோப்பையை வெல்ல உதவுமா? படத்தின் காப்புரிமை Alex Davidson

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சனிக்கிழமை நடந்த போட்டியில் 11 ரன்களில் இந்தியா வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் இருவர் மட்டுமே.

இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் முகமது ஷமி மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோரின் துல்லியமான மற்றும் புயல்வேக பந்துவீச்சு இந்தியாவுக்கு வெற்றி பெற்றுத்தந்தது.

225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய ஆப்கானிஸ்தானை நிலைகுலைய செய்து வீழ்த்தியது இந்த இரு வேகப்பந்துவீச்சாளர்கள்தான்.

இந்தியாவுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் கண்டிப்பாக வென்றுவிடலாம் என்று எதிர்பார்த்த ஆப்கானிஸ்தான், ஷமி மற்றும் பும்ராவின் 'யார்க்கர்' வகை பந்துகளை சமாளிக்க முடியாமல் ஆட்டமிழந்தனர்.

'யார்க்கர்' வித்தகர் பும்ரா

படத்தின் காப்புரிமை Alex Davidson

இறுதியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றவுடன், சமூக வலைத்தளங்களில் ஷமி மற்றும் பும்ராவின் பங்களிப்பு ரசிகர்களிடையே பரவலான பாராட்டுகளை பெற்றது.

மிகவும் துல்லியமாக பந்துவீசிய பும்ரா ஆட்டநாயனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பத்து ஓவர்கள் பந்துவீசிய அவர், 39 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இறுதி ஓவர்களில் பும்ராவின் பந்துவீச்சு கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றது. மிகவும் நேர்த்தியாக அவர் யார்க்கர் வகை பந்துகளை வீசியதால் ஆப்கானிஸ்தான் அணியினரால் ரன்கள் எடுக்கமுடியவில்லை. இதுவே அவர்களின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இந்த உலகக்கோப்பை தொடரில் 4 போட்டிகளில் பந்துவீசியுள்ள பும்ரா 7 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

இதுவரை தான் விளையாடியுள்ள 53 ஒருநாள் போட்டிகளில் 92 விக்கெட்டுகளை எடுத்துள்ள பும்ரா, இந்த தொடரில் தனது 100-வது ஒருநாள் விக்கெட்டை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காத்திருந்த ஷமி

அதே வேளையில், பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த கடந்த போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் இடம்பெற முடியாத புவனேஸ்வர் குமாருக்கு பதிலாக முகமது ஷமி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடந்த போட்டியில் அணியில் இடம்பெற்றார்.

நடப்பு உலகக்கோப்பை தொடரில் தனது முதல் போட்டியில் விளையாடிய முகமது ஷமி, நான்கு விக்கெட்டுகளை எடுத்தார். அதில் இறுதி ஓவரில் அவர் எடுத்த ஹாட்ரிக் விக்கெட்டுகளும் அடங்கும்.

ஆரம்ப ஓவர்களில் ஷமியின் பந்துவீச்சு வேகம் 140 கி.மீட்டர் வேகத்துக்கு மேல் இருந்தது எதிரணி பந்துவீச்சளர்களை தடுமாற செய்தது.

கடந்த உலகக்கோப்பை தொடரில் இந்தியாவின் சார்பில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஷமி, காயம் காரணமாக 2015-ன் பிற்பகுதி மற்றும் 2016 ஆண்டுகளில் அணியில் பெரும்பாலும் இடம்பெறவில்லை.

படத்தின் காப்புரிமை Alex Davidson

பிறகு அவரின் பங்களிப்பு மற்றும் மற்ற பந்துவீச்சாளர்களின் சிறப்பான ஆட்டம் போன்ற காரணங்களால் தொடர்ந்து இந்திய அணியில் ஷமி இடம்பெற முடியவில்லை.

2019 உலகக்கோப்பை இந்திய அணியில் இடம்பெற்ற போதிலும், முதல் 4 போட்டிகளில் அவர் களத்தில் விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்படவில்லை.

இந்நிலையில் சனிக்கிழமையன்று நடப்பு தொடரில் தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பை ஷமி சிறப்பாக பயன்படுத்தி கொண்டார்.

கடந்த போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறிய சூழலில், ஷமி மற்றும் பும்ராவின் பந்துவீச்சு பாராட்டுகளை பெற்றதோடு, வரும் போட்டிகளில் இவர்களில் பந்துவீச்சு முக்கிய வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மிதவேகம் மற்றும் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான இங்கிலாந்து ஆடுகளங்களில், இந்திய அணியின் வெற்றிகளுக்கு பும்ரா மற்றும் ஷமி காரணமாக இருப்பர் என்று ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் நிபுணர்கள் கருதுகின்றனர்.

படத்தின் காப்புரிமை Andy Kearns/Getty Images

பும்ரா மற்றும் ஷமியின் பந்துவீச்சு குறித்து பிபிசியிடம் பேசிய கிரிக்கெட் வீரர் மற்றும் பயிற்சியாளர் ரகுராமன் கூறுகையில், ''கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பாக பந்து வீசிவரும் பும்ரா, நடப்பு உலகக்கோப்பையில் கோலி, ரோகித் போல் அணியின் மிக முக்கிய அங்கமாக இருக்கிறார். இறுதி ஓவர்களில் அவரின் பந்துவீச்சு மிகவும் நேர்த்தியாகவும், வியக்கும் வகையிலும் உள்ளது,'' என்று தெரிவித்தார்.

''2015 உலகக்கோப்பை தொடரில் அசத்திய ஷமி தற்போது நடப்பு தொடரில் முதல்முறையாக பும்ராவுடன் இணைந்துள்ளார். இந்த இணையின் பங்களிப்பு அரையிறுதி, இப்போட்டி போன்ற முக்கிய கட்டங்களில் இந்திய அணியின் வெற்றியை தீர்மானிக்கும்'' என்றார்.

''மிகவும் அனுபவம் வாய்ந்த தேர்ந்த பந்துவீச்சாளராக செயல்படுகிறார் பும்ரா. தன்னை மீண்டும் நிரூபிக்க காத்திருந்த ஷமி வாய்ப்பை தவறவிடுவாரா? புயல்வேகத்தில் இருவரும் நேர்த்தியாக பந்துவீசினால் எந்த அணியும் நிலைகுலைந்து போகும்,'' என்று மேலும் கூறினார்.

''இந்திய அணியின் வெற்றிகளுக்கு பெரும்பாலும் பேட்ஸ்மேன்களே காரணமாக இருப்பர். தற்போது இந்த இரு பந்துவீச்சாளர்கள் அந்த நிலையை மாற்ற கடும் முயற்சி செய்கின்றனர். இறுதி போட்டிக்கு இந்தியா தகுதிபெற்றால், அப்போது வேகப்பந்துவீச்சாளர்களின் பங்களிப்பு முக்கியமாக இருக்கும்'' என்று ரகுராமன் குறிப்பிட்டார்.

காயம் காரணமாக அணியில் இடம்பெறாத புவனேஸ்வர்குமார் மீண்டும் உடல்தகுதி பெற்றால், அவர் அணியில் இடம்பெறுவாரா, ஷமி தன் இடத்தை தக்கவைப்பாரா அல்லது 3 வேகப்பந்துவீச்சாளர்களை இந்தியா களமிறக்குமா என்பது போட்டி நாளில்தான் தெரியவரும்.

ஆனால், அணியில் இது ஒரு ஆரோக்கியமான போட்டியாக இருக்கும் என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :