இந்தியா முதல் கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்று இன்றோடு 36 ஆண்டுகள் நிறைவு - நினைவலைகள்

இதே நாள் இந்தியா 1983ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றது படத்தின் காப்புரிமை Getty Images

கிரிக்கெட்டின் 'மெக்கா' என்றழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில், இதே நாள் சரியாக 36 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது ஜூன் 25, 1983ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் உலகக்கோப்பையை கைப்பற்றியது.

அதுவும் குறிப்பாக, உலகக்கோப்பையை கையில் ஏந்திக்கொண்டு, இந்திய அணியின் அப்போதைய கேப்டன் கபில் தேவ் லார்ட்ஸ் மைதானத்தின் பால்கனியில் நின்ற காட்சியை கிரிக்கெட் ரசிகர்கள் எப்போதுமே மறக்க மாட்டார்கள்.

அச்சமயத்தில், கோப்பையுடன் காட்சியளிக்கும் இந்திய அணி வீரர்களை பார்ப்பதற்காக, விதிமுறைகளை மீறி ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்துக்குள் நுழைந்த மற்றொரு புகைப்படத்தையும் யாராலும் மறக்க முடியாது.

இந்தியாவுக்கு முதல் கிரிக்கெட் உலகக்கோப்பையை பெற்று தந்த அணியில் இடம்பெற்றிருந்த மதன் லால், "மேற்கிந்திய தீவுகள் அணியின் கடைசி விக்கெட்டை வீழ்த்திய பிறகு, எங்களுக்கு ஏற்பட்ட உணர்வை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது" என்று ஒருமுறை என்னிடம் கூறியது ஞாபகம் வருகிறது.

அதேபோன்று, இந்திய கோப்பையை வென்றதும், டெல்லி நகர வீதிகள் விழாக்கோலம் பூண்டிருந்ததாகவும், அப்போது தன்னால் அங்கு நிற்க கூட முடியாத அளவுக்கு மக்கள் தெருக்களில் கூடிருந்ததாக மூத்த பத்திரிகையாளர் மார்க் துல்லி கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை David Cannon

இந்திய அணி லார்ட்ஸ் மைதானத்தில் பெற்ற வரலாற்று சிறப்புமிக்க வெற்றி குறித்த அனுபவங்கள் பல தலைமுறைகளாக கடத்தப்பட்டு வருகிறது. நான் லண்டனில் பணிபுரிந்து கொண்டிருந்த காலத்தில், லார்ட்ஸ் மைதானத்திற்கும், அங்கு அமைந்துள்ள அருங்காட்சியகத்திற்கு அடிக்கடி செல்வதுண்டு.

2014ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தின் 200ஆவது ஆண்டு விழா குறித்த செய்தியை சேகரிக்க அங்குள்ள அருங்காட்சியகத்திற்கு நான் சென்றிருந்தபோது, அதன் ஊழியர் ஒருவர், 1983இல் இந்திய அணி வென்ற உலகக்கோப்பையை பார்க்க உங்களுக்கு விருப்பமா? என்று கேட்டார்.

ஒரு நொடிகூட யோசிக்காமல், உடனே ஒப்புக்கொண்டேன். பிறகு கையுறை அணிந்து கொண்டு, கோப்பையை பாதுகாப்பாக கையாள வேண்டுமென்ற அறிவுரையுடன், இந்தியாவில் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு வித்திட்ட அந்த கோப்பையை பார்த்தேன்.

குறிப்பாக, அந்த கோப்பையை கையில் ஏந்தியபோது முன்னெப்போதும் இல்லாத வகையில், மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன்.

படத்தின் காப்புரிமை Lords

அச்சமயத்தில், 1983ஆம் ஆண்டு இந்த கோப்பையை போராடி வென்ற இந்திய கிரிக்கெட் அணியினர் இதை கையில் பெற்றபோது எப்படி உணர்ந்திருப்பார்கள் என்று நினைத்தபோது, மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.

இந்திய அணி தனது முதல் கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்றது மட்டுமின்றி, பல்வேறு வகைகளிலும் லார்ட்ஸ் மைதானத்துக்கும் இந்தியாவுக்கும் தொடர்புள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி முதல் முதல் முறையாக 1886இல் இங்கிலாந்திற்கு பயணம் மேற்கொண்டபோது, எடுக்கப்பட்ட புகைப்படத்தை தற்போது கூட லார்ட்ஸ் மைதானத்தில் பார்க்க முடியும்.

1932ஆம் ஆண்டு முதல் முறையாக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் சி.கே. நாயுடு கையொப்பமிட்ட பேட், லார்ட்ஸ் மைதானத்தின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அதே போன்று, ஷேன் வார்னேவின் 300ஆவது விக்கெட்டை பாராட்டும் வகையில் கொடுக்கப்பட்ட பரிசுகள், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் ராகுல் டிராவிட் கையொப்பமிட்ட பேட், சச்சின் கையொப்பமிட்ட சட்டை போன்றவற்றையும் இங்கே காண முடியும்.

இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்று வரும் உலகக்கோப்பையை வெல்லும் முனைப்போடு இதே லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.

இந்தியா தனது முதல் உலகக்கோப்பையை வென்ற போட்டியை பார்த்த சிலர், வரும் ஞாயிறன்று நடைபெறும் போட்டியை பார்க்கக் கூடும்.

1983ஆம் ஆண்டு இந்திய அணி பெற்ற வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை நான் நேரில் பார்க்கவில்லை என்றாலும், கோப்பையை வென்ற ஒட்டுமொத்த அணியும் அதன் 25ஆவது ஆண்டுவிழாவை 2008ஆம் ஆண்டு கொண்டாடும்போது அதை நான் நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தியா தனது இரண்டாவது உலகக்கோப்பையை 2011ஆம் ஆண்டுதான் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

1983ஆம் ஆண்டை போன்று இந்த உலகக்கோப்பையின் இறுதி ஆட்டமும் லார்ட்ஸ் மைதானத்தில்தான் நடைபெறவுள்ளது.

1983ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை போட்டியில் வெல்லப்போகும் அணி குறித்த யூகத்தில், ஜிம்பாப்வே அணிக்கு முந்தைய இடமே இங்கிலாந்தின் பிரபல சூதாட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று நிலைமை அவ்வாறாக இல்லை.

1983, 2011க்கு அடுத்த இந்த உலகக்கோப்பையை இந்திய அணியே கைப்பற்றும் என்று இந்திய ரசிகர்கள் உறுதியுடன் இருக்கிறார்கள். ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்திய அணி நிறைவேற்றுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்