குவைத் கிரிக்கெட் அணிக்கு தேர்வான தமிழக இளைஞரின் வெற்றிக்கதை

குவைத் கிரிக்கெட் படத்தின் காப்புரிமை Sankar varathappan/ facebook

கிரிக்கெட் விளையாட்டின் மீதான தீராத காதலும், கடின உழைப்பும் ஒரு தமிழக இளைஞரை குவைத் தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பெற செய்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் பாச்சல் கிராமத்து இளைஞர்களுக்கான விளையாட்டு கிளப்பான பாச்சல் கிரிக்கெட் கிளப்பிலிருந்து தொடங்கியதுதான் கிரிக்கெட் வீரர் சங்கர் வரத்தப்பனின் சாதனைப் பயணம்.

2019ம் ஆண்டு ஜூலை மாதம் சிங்கப்பூரில் நடைபெறவுள்ள ஆசிய நாடுகளுக்கான டி20 தகுதிச்சுற்று கிரிக்கெட் போட்டியில் குவைத் நாட்டின் தேசிய அணியில் ஓபனிங் பேட்ஸ்மானாக விளையாடவுள்ளார் தமிழகத்தை சேர்ந்த சங்கர்.

கைத்தறி நெசவாளர்கள் அதிகமுள்ள பாச்சல் கிராமத்தில் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதைவிட விசைத்தறி ஆலைகளுக்கு அனுப்பப்பட்ட நேரத்தில், சங்கரின் அண்ணன் பெரியசாமியின் ஆதரவால் பள்ளிப்படிப்பை தொடர்ந்திருக்கிறார் சங்கர்.

பாச்சல் கிரிக்கெட் கிளப்பை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் விளையாடும்போது பந்துகளை எடுத்து கொடுப்பதில் தொடங்கி, அந்த கிளப்பின் வெற்றிக்கு ரன்களை குவிப்பது வரை முன்னேறியிருக்கிறார் சங்கர்.

''நாங்கள் மூன்று குழந்தைகள் என்பதால், எல்லோரையும் படிக்க அனுப்ப முடியாது என்ற நிலை. நானும் ஆறு மாதங்கள் ஸ்பின்னிங் மில் வேலைக்குச் சென்றேன். அண்ணன் பெற்றோரை சம்மதிக்க வைத்து என்னை பள்ளிக்கு அனுப்பினார். படிப்பில் கவனம் இருந்தாலும், கிரிக்கெட் விளையாட்டின் மீது அதிக ஈர்ப்பு இருந்தது. அந்த ஈர்ப்புதான் என்னை வழிநடத்தியது,''என்கிறார் சங்கர்.

படத்தின் காப்புரிமை Kuwait Cricket

அனுபவமிக்க பயிற்சியாளர் இல்லை, கிரிக்கெட் விளையாட பெற்றோரின் எதிர்ப்பு என பல தடைகளை தாண்டிவர சங்கரை தூண்டியது எது?

''தலைக்கு கவசம் கிடையாது. தவறாக விளையாடினால் திருத்துவதற்கு நண்பர்கள் மட்டும்தான் என எங்கள் வட்டம் எளிமையானது. முதலில் எங்கள் ஊர் கிளப்புக்காக விளையாடினேன். எங்கள் மாவட்டத்திற்காக விளையாடினேன். கிரிக்கெட் விளையாடும்போது என் மனம் சலிப்படையவில்லை. ஒவ்வொரு போட்டியை விளையாடும்போது சிறப்பாக விளையாடவேண்டும் என்ற எண்ணமே மேலோங்கும். பௌலர், பேட்ஸ்மேன், பீல்டிங் என எல்லா விதத்திலும் எனது விளையாட்டு திறன்களை மேம்படுத்தி கொள்ளவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். விருப்பத்தோடு ஒரு காரியத்தை செய்யும்போது அதில் சலிப்பில்லை, முன்னேற்றம் நிச்சயம் என்பதை உணர்ந்தேன்,'' என்கிறார் சங்கர்.

குடும்ப வறுமையும், கல்லூரி படிப்புக்கு வாங்கிய கடனை திரும்ப செலுத்துவது ஆகியவை அவரை வெளிநாட்டில் வேலை தேட வைத்தது. ஆனால், கிரிக்கெட் விளையாட்டு அவரை விடுவதாக இல்லை.

படத்தின் காப்புரிமை Kuwait Cricket

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு முடிந்ததும், துபாயில் ரேடியோகிராபி டெக்னிசியன் வேலையில் சேர்ந்தார். அவ்வப்போது விளையாட வாய்ப்புகள் கிடைத்தன.

ஆனால் 2014ல் குவைத்தில் என்.பி.டி.சி கட்டுமான நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தபோது, அங்கு கேரளாவை சேர்ந்த கிரிக்கெட் குழுக்கள் பல இருந்தன. அங்கு விளையாடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைத்தன.

''ராயல் கிங்ஸ் திருவனந்தபுரம் குழுவில் நான் தொடர்ந்து விளையாடினேன். சிரமமான கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்தேன். குறிப்பாக ஒரு போட்டியில் 49 பந்துகளுக்கு 169 ரன்கள் எடுத்தேன். இதை பார்த்த அந்த அணியின் தலைவர் முகமது ரபி எனக்கு ஊக்கமளித்தார். எனக்கு தனிப்பட்ட முறையில் பயிற்சியாளராக செயல்பட்டார். என் வளர்ச்சிக்கு உதவினார்,''என நினைவுகூர்ந்தார் சங்கர்.

சங்கர் பணிபுரிந்த என்.பி.டி.சி நிறுவனத்திற்குச் சொந்தமான இடத்தில், தனது சம்பள பணத்தை செலவிட்டு வலை அமைத்து தொடர் பயிற்சியை மேற்கொண்டிருக்கிறார். ''என் மாத சம்பளம் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 70,000 பணத்தை செலவு செய்து வலை அமைத்தேன். சமையல் வேலையில் உள்ள இருவருக்கு என்னால் முடிந்த தொகையை கொடுத்து பந்து வீச வைத்து பயிற்சி செய்தேன். வார விடுமுறையை விளையாட்டிற்காக செலவிட்டேன். இந்த செலவை செய்ததற்காக வீட்டில் இருந்து திட்டும் வாங்கினேன். குவைத் நாட்டு அணிக்கு நான் தேர்வாகிவிட்டேன் என தெரிந்தபிறகு, என் குடும்பத்தினர் எதிர்ப்பதை நிறுத்திவிட்டார்கள்,'' என்கிறார் சிரிப்புடன்.

படத்தின் காப்புரிமை Sankar

என்பிடிசி நிறுவனம் தனது பயண செலவுகள், விளையாடுவதற்கு தேவையான சாதனங்களை வாங்குவதற்கு உதவியுள்ளதாக கூறும் சங்கர், தனது நிறுவனம் ஒரு கிரிக்கெட் அணியை உருவாக்கும் வாய்ப்பை தனக்கு கொடுத்துள்ளதாக கூறினார்.

பாச்சல் கிரிக்கெட் கிளப் உறுப்பினர் மற்றும் சங்கரின் நண்பரான கவியரசுவிடன் பேசினோம். பெங்களூருவில் மென்பொருள் நிறுவனத்தில் வேலைசெய்கிறார் கவியரசு. ''சங்கர் குவைத் நாட்டு கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ளது எங்கள் ஊருக்கு பெருமை.

நாமக்கல், ராசிபுரம் பகுதியில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் எங்கள் கிராமத்து கிளப் சிறந்த கிளப் என அறியப்பட்ட ஒன்று. கடினமான போட்டிகளில் நல்ல பௌலர் மற்றும் பேட்ஸ்மேனாக விளையாடியிருக்கிறார் சங்கர். வசதியற்ற பின்னணியில் உள்ள சங்கரை போன்ற விளையாட்டு வீரர்கள் பலர் எங்கள் ஊரில் இருக்கிறார்கள். வாய்ப்பு கிடைத்தால், விளையாட்டில் சாதனை படைப்போம், எங்கள் ஊருக்கும் பெருமை சேர்ப்போம்,''என்கிறார் கவியரசு.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்