‘ஹிட்மேன்’ ரோகித் சர்மா: 4 சதங்கள், 544 ரன்கள் - சச்சினின் சாதனையை முறியடிப்பாரா?

4 சதங்கள், 544 ரன்கள் - சச்சினின் சாதனையை முறியடிப்பாரா 'ஹிட்மேன்' ரோகித் சர்மா? படத்தின் காப்புரிமை Christopher Lee-IDI/IDI via Getty Images

தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் - இந்த நான்கு அணிகளுக்கு எதிராக நடந்த 2019 உலகக்கோப்பை போட்டிகளில் இந்தியாவின் வெற்றிக்கும், தோல்விக்கும் இடையே உச்சரிக்கப்படும் ஒரு பெயர் 'ரோகித் சர்மா'.

'ஹிட் மேன்' என்றழைக்கப்படும் ரோகித் சர்மா, இந்த நான்கு போட்டிகளிலும் சதம் அடித்துள்ளார். இவர் சதமடித்த நான்கில் மூன்று போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

செவ்வாய்க்கிழமையன்று வங்கதேசம் அணியுடன் நடந்த போட்டியில் சதமடித்ததன் மூலமாக 2019 உலகக்கோப்பை தொடரின் தனது நான்காவது சதத்தை ரோகித் சர்மா பதிவு செய்துள்ளார்.

மேலும், இதுவரை இந்த தொடரில் அதிக ரன்களை எடுத்த டேவிட் வார்னரை மிஞ்சி, 544 ரன்கள் பெற்று 2019 உலகக்கோப்பை தொடரின் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரோகித் உள்ளார்.

தற்போது அரையிறுதி போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ள சூழலில், இந்தியாவின் வெற்றிக்கு ரோகித் காரணமாக இருப்பார் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

தொடக்க வீரர் ஷிகர் தவான் காயம் காரணமாக விலகிய பிறகு, கூடுதல் பொறுப்புடன் அணியின் மிகப்பெரிய நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் ரோகித் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்துவதே அரையிறுதி போன்ற முக்கிய போட்டிகளில் மோதும் எதிரணி பந்துவீச்சாளர்களின் முக்கிய நோக்கமாக இருக்கும்.

ஒருநாள் போட்டிகளில், 40 ரன்களை கடந்துவிட்டால் ரோகித் சர்மாவை எளிதில் ஆட்டமிழக்க செய்ய முடியாது. அதிலும் 60, 70 ரன்களை அவர் கடந்துவிட்டால் அன்று சரவெடிதான் என்பது பல இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் இயல்பான எதிர்பார்ப்பு.

இந்த எதிர்பார்ப்பை பலமுறை நிறைவேற்றி இந்திய அணியின் வெற்றிக்கு பெரும் காரணமாக ரோகித் இருந்து வருகிறார்.

படத்தின் காப்புரிமை Michael Steele/Getty Image

2019 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மாவின் பேட்டிங் சராசரி 90.67. அணித்தலைவர் விராட் கோலியின் பொறுப்பை பகிரும் துணை கேப்டன் ரோகித் சர்மா, பேட்டிங்கிலும் கோலியை போலவே ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப சிறப்பாக விளையாடி வருகிறார்.

1999 உலகக்கோப்பை தொடரில் ராகுல் டிராவிட், 2003 மற்றும் 2011 உலகக்கோப்பை தொடர்களில் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக இருந்து அணியின் வெற்றிகளுக்கு காரணமாக இருந்தனர். இந்த வரிசையில் தற்போது ரோகித் சர்மா இணைந்துள்ளார்.

2019 உலகக்கோப்பையின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை இந்தியா சந்தித்தது. முதல் போட்டியில் இந்தியா சேஸிங் செய்த சூழலில், பந்துவீச்சுக்கு சாதகமான சவுதாம்ப்டன் மைதானத்தில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து 122 ரன்கள் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு ரோகித் முக்கிய காரணமாக இருந்தார்.

பந்துவீச்சுக்கு சாதகமான அந்த ஆடுகளத்தில் தனது இயல்பான பாணியை கடைபிடிக்காமல் சூழலை அனுசரித்து மிகவும் பொறுமையாக விளையாடிய ரோகித்தின் ஆட்டம் பெரும் பாராட்டுகளை பெற்றுத்தந்தது.

படத்தின் காப்புரிமை Clive Mason/Getty Images)

அதுபோல் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த முக்கிய போட்டியிலும் மிக அற்புதமாக விளையாடி சதமடித்த ரோகித், அடுத்து இரண்டு போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.

மீண்டும் இங்கிலாந்துக்கு எதிராக இக்கட்டான சூழலில் ரோகித் சர்மா நன்றாக விளையாடி 104 ரன்கள் எடுத்தார். இமாலய இலக்கை நிர்ணயித்த போதிலும், ரோகித் ஆட்டமிழந்த பிறகுதான், இங்கிலாந்து அணிக்கு வெற்றி குறித்த நம்பிக்கை வந்தது.

2003 உலகக்கோப்பை தொடரில் சச்சின் டெண்டுல்கர் பெற்ற 673 ரன்களே , ஓர் உலகக்கோப்பை தொடரில் அதிகபட்ச ரன்களாக இன்றளவும் இருந்துவருகிறது.

தற்போதுவரை 544 ரன்கள் பெற்றுள்ள ரோகித் சர்மா சச்சின் சாதனையை முறியடிப்பாரா என கிரிக்கெட் வல்லுநர்கள் விவாதித்து வரும் நிலையில், 2019 உலகக்கோப்பையை இந்தியா வெல்ல ரோகித் காரணமாக இருப்பார் என்ற எதிர்பார்ப்பில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :